’குண்டான் சட்டி’ திரைவிமர்சனம் !!
கார்த்திகேயன் தயாரிப்பில் PK அகஸ்தி இயக்கி குண்டேஸ்வரன், சத்தீஸ்வரன் அனிமேஷன் செய்து வெளிவந்து இருக்கும் படம் த குண்டான் சட்டி.
கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் விவசாய தொழிலாளிகளான குப்பன் மற்றும் சுப்பன் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடப்பதோடு, இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. குப்பனுக்கு பிறக்கும் குழந்தை சட்டி போன்ற வித்தியாசமான தோற்றத்துடன் இருக்கிறது. இரு குழந்தைகளுக்கும் அவர்களின் குலதெய்வங்களின் பெயரான குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் வைக்கிறார்கள்.
சட்டிஸ்வரனும், குண்டேஸ்வரனும் தங்களது தந்தைகள் போலவே நண்பர்களாக வலம் வருகிறார்கள். இருவரையும் குண்டான் சட்டி என்று கிண்டல் செய்தாலும், அதை காதில் வாங்காமல் நன்றாக படிக்கிறார்கள். அதுமட்டும் இன்றி, கோவில் நிலத்திற்கான குத்தகையை தராமால் ஏமாற்றும் ஊர் தலைவர், அதிகமான வட்டி வாங்கி மக்களை ஏமாற்றும் அடகு கடை சேட்டு, உணவுப் பொருட்களை பதிக்கி வைத்து அதிக விலைக்கு விற்கும் வியாபாரி ஆகியோரை தங்களது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.
இந்த நிலையில், பிள்ளைகளின் இத்தகைய செயல்கள் குறித்து தெரிந்துக்கொள்ளும் குப்பனும், சுப்பனும் இருவரையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றோடு விட்டுவிடுகிறார்கள். ஆற்றோடு போனவர்கள் என்ன ஆனார்கள் ? என்பதே இப்படத்தின் கதை..
கதை எழுதி அனிமேஷன் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட்டணியின் ஆலோசனையுடன் படத்தை இயக்கியிருக்கும் பி.கே.அகஸ்தி, குழந்தைகளுக்கான ஒரு திரைப்படத்தை மிக நேர்த்தியான அனிமேஷன் திரைப்படமாக கொடுத்ததில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.
அவர் எடுத்துக்கொண்ட கதை மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம், கதையில் காட்டப்படும் கிராமம் என அனைத்தும் கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் இருக்கிறது. 12 வயதில் இப்படி ஒரு அனிமேஷன் படத்தை கொடுத்திருக்கும் அகஸ்தி எதிர்காலத்தில் தமிழ் சினிமாவை அனிமேஷன் உலகின் மிக உயரத்திற்கு கொண்டு செல்வார் என்பது உறுதி.
அரங்கன் சின்னதம்பியின் திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் சிறுவர்கள் கொண்டாடும் விதத்தில் இருக்கிறது. பாடல் வரிகள் அனைத்தும் புரியும்படி இருப்பதோடு, முனு முனுக்கவும் செய்கிறது.
எம்.எஸ்.அமர்கீத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். அதிலும், குண்டான் சட்டி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பார்வையாளர்களை குதூகலப்படுத்தும் விதத்தில் பயணிக்கிறது. மொத்தத்தில் சிறுவர்களை கவர்ந்து ஈர்க்க கூடிய இசையை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். பி.எஸ்.வாசுவின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது.
படத்தின் அனிமேஷன் பணிகள் மிக சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக கிராமம் மற்றும் சிறுவர்கள் ஆற்றில் பயணிக்கும் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கிறது. சில கதபாத்திரங்களில் சிறு சிறு குறைகள் தெரிந்தாலும், குண்டேஸ்வரன் மற்றும் சட்டிஸ்வரனின் கதாபாத்திர வடிவமைப்பு, அவர்களது செயல்பாடு ஆகியவை அந்த குறைகளை மறைத்து சிறுவர்களை குதூகலப்படுத்துவதோடு, பெரியவர்களையும் ரசித்து பார்க்க வைக்கிறது.
குழந்தைகளுக்கான படமாக மட்டும் இன்றி அதை அனிமேஷன் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற தனது மகள் அகஸ்தியின் விருப்பத்தை நிறைவேற்றி, அவரை சாதனை மாணவியாக உருவாக்கிய அவரது தந்தையும், படத்தின் தயாரிப்பாளருமான டாக்டர்.எஸ்.ஏ.கார்த்திகேயனை தனியாக பாராட்டியாக வேண்டும்.
மொத்தத்தில், ‘
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பார்க்கவேண்டிய படம்.