கூச முனிசாமி வீரப்பன்’ திரைவிமர்சனம் !!

தீரன் தயாரிப்பு – பிரபாவதி ஆர்.வி தயாரித்துசரத் இயக்கி சதீஷ் ரகுநாதன் இசையில் வீரப்பன் நடித்து வெளிவந்திருக்கும் படம் கூச முனிசாமி வீரப்பன்’.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த குற்றவாளி சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை சொல்லும் ஆவணப்படம் வடிவத்தில் உருவாக்கப்பட்ட இணையத் தொடர் ‘கூச முனிசாமி வீரப்பன்’.
இதுவரை வெளியான வீரப்பன் வாழ்க்கை பற்றிய சில திரைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியான செய்திகள், பேட்டிகள் மற்றும் காவல்துறை தெரிவித்த தகவல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவை. ஆனால், இந்த ஆவணப்பட இணையத் தொடர் 1996 ஆம் ஆண்டு வீரப்பன் நேரடியாக தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதோடு, அந்த நேர்காணல் வீடியோவின் சில பகுதிகளையும், சில சம்பவங்களை நடிகர்கள் மூலம் சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, வீரப்பனை சந்தித்து நேர்காணல் செய்த பத்திரிகையாளர்கள், அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், காவல்துறையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
6 பகுதிகளை கொண்ட இந்த இணையத் தொடர், ஆவணப்பட பாணியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில், ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் தொடரை பார்க்கும் அனுபவத்தை கொடுத்திருப்பது இத்தொடரின் தனி சிறப்பு. அதிலும், தான் செய்த கொலைகள் பற்றியும், அந்த கொலைகளை எதற்காக?, எப்படி? கொலை செய்தேன் என்பதையும் வீரப்பன் பேட்டியில் சொல்லும் பகுதிகள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா பற்றியும், ரஜினிகாந்தின் அரசியல் பற்றியும் பேசியிருப்பது மற்றும் அவருடைய பேச்சு பாணி திரையரங்கையே அதிர வைக்கும் விதத்தில் இருக்கிறது. இந்த காட்சிகளை நடிகர்களை வைத்து படமாக்கி இருந்தால் கூட இத்தகைய வரவேற்பு கிடைத்திருக்காது. வீரப்பன் பேசிய அந்த வீடியோ தொகுப்பை அப்படியே இணைத்திருப்பது தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.