
இறுகப்பற்று’ திரைவிமர்சனம் !!
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு,
பி கோபிநாத், தங்கபிரபாஹரன் ஆர் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கி வெளிய வந்திருக்கும் படம் இறுகப்பற்று.
இப்படத்தில் விதார்த், விக்ரம் பிரபு, ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி, சானியா மற்றும் பலர் நடித்து இருக்கிறாள்.
விதார்த் தனது மனைவி அபர்ணதி குண்டாக இருப்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். கணவரின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சியடையும் அபர்ணதி, மனோதத்துவ நிபுணரான ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் உதவியை நாடுகிறார்.
அவர் வழங்கிய ஆலோசனைக்குப் பிறகும் விதார்த் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறார்.
மறுபக்கம், காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீ, தனது மனைவி சானியா தன்னைவிட்டு விலகியே இருப்பதாக கூறி ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் ஆலோசனை பெறுகிறார்.
இரண்டு தம்பதிகளின் பிரச்சனைகளுக்கு உண்மையான பின்னணி என்னவென்று கண்டறிந்து அதை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தான் சந்திக்கும் தம்பதிகளிடம் எழும் பிரச்சனைகள் போல், தனக்கும், தனது கணவருக்கும் இடையே ஏற்படக்கூடாது என்பதில் கவணமாக இருப்பதோடு, மற்றவர்களுக்கு அவர் சொல்லும் ஆலோசனைகளை தனது குடும்ப வாழ்க்கையிலும் கடைபிடிக்கிறார். ஆனால், தனது மனைவி தொழிலையும், வாழ்க்கையையும் ஒன்றாக பார்ப்பதை ஏற்றுக்கொள்ளாத அவரது கணவர் விக்ரம் பிரபு மனைவி மீது கோபமடைவதோடு அவரை விலகி செல்கிறார். இந்த மூன்று தம்பதிகளின் பிரச்சனைகள் தீர்ந்ததா?, இல்லையா? என்பதை பார்வையாளர்களின் மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருப்பதே ‘இறுகப்பற்று’. இப்படத்தின் கதை
மனோதத்துவ நிபுணராகவும், மனைவியாகவும் அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஷ்ரத்த ஸ்ரீநாத். எப்படிப்பட்ட பிரச்சனைகளோடு வந்தாலும் தனது ஆலோசனை மூலம் அவர்களை சரிபடுத்தி விடும் திறன் கொண்டவராக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தன் வாழ்க்கையில் பிரச்சனை வந்ததும் தடுமாறும் இடங்களில் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார். தன்னிடம் சண்டையே போடாத மனைவி பற்றி பெருமையாக நினைப்பவர், அவர் தொழிலை வாழ்க்கையோடு சேர்த்து பார்க்கும் போது பதறும் காட்சிகளில் சராசரி மனிதனின் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மனைவி குண்டாக இருப்பதால் விவாகரத்து முடிவுக்கு வரும் விதார்த், அதற்கான நிஜ காரணத்தை சொல்லி தன் உள்ளத்தில் இருக்கும் ஏமாற்றங்களை வெளிப்படுத்தும் காட்சியில் அசுரத்தனமான நடிப்பு மூலம் அனைத்து நடிகர்களையும் ஓரம் கட்டி விடுகிறார்.
விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் அபர்ணதி சராசரி மனைவியாக இயல்பாக நடித்திருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பும், கணவனுக்கான தவிப்பும் கைதட்டல் பெறுகிறது.
இளம் தம்பதிகளான ஸ்ரீ – சானியா ஜோடியின் நடிப்பும் மற்ற ஜோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருக்கிறது. அதிலும், மனைவியை மட்டம் தட்டும் ஸ்ரீயின் குணமும், அதனால் பாதிக்கப்படும் சானியாவின் குமுறலும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
மூன்று தம்பதிகளை சுற்றி கதை நகர்ந்தாலும், இவர்களை தாண்டியும் சில கதாபாத்திரங்கள் தலை காட்டுகிறார்கள். ஆனால், அதில் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிவது மனோ பாலா தான். மனைவியை நினைத்து கண்கலங்கும் ஸ்ரீக்கு அறிவுரை சொல்லிவிட்டு, தனது மனைவிக்கு போன் செய்து மன்னிப்பு கேட்கும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்து போகிறது.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படம் முழுவதும் கணவன் – மனைவிக்கு ஆலோசனை வழங்கும் காட்சிகள் தான் அதிகம் என்றாலும் அதை மிக அழகாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருப்பவர், கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்தும் மாயாஜாலத்தை தனது கேமரா கண்கள் மூலம் சிறப்பாக செய்திருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருப்பதோடு, வார்த்தைகள் புரியும் வகையிலும், நம் மனதில் பதியும் வகையிலும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை கதாபாத்திரங்களின் வாழ்வியலுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
கணவன், மனைவி இடையே பிரச்சனை வர பெரிய காரணம் எல்லாம் தேவையில்லை, என்று சொல்லும் படம், எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அது சரி செய்ய முடியாத பிரச்சனையாக இருக்க முடியாது, என்ற எதார்த்த உண்மையையும் புரிய வைத்திருக்கிறது.
தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்குவது படம் முழுவதும் இருந்தாலும் அதை ரசிக்க கூடிய காட்சிகளாக கொடுத்து பல இடங்களில் சிந்திக்க வைப்பதோடு, சிரிக்கவும் வைத்திருக்கும் இயக்குநர் யுவராஜ் தயாளன், வசனங்கள் மூலமாகவும் கைதட்டல் பெறுகிறார்.
”கணவன், மனைவி இடையே சண்டைகள் வருவதற்கு காரணம் தேவையில்லை, கணவன் மனைவியாக இருப்பதே காரணம் தான்” என்ற எதார்த்தத்தின் பின்னணியில் சொல்லப்பட்ட கதையும், திரைக்கதையும், மக்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் வாழ்வியலாக இருந்தாலும், அதை பாடம் எடுப்பது போல் அல்லாமல் சிரித்து, ரசித்து பார்க்க கூடிய சுவாரஸ்யமான படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
விவாகரத்துக்காக வரும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த படத்தை பார்த்தால் அதுபோன்ற மனநிலையில் உள்ளவர்கள் நிச்சயம் தங்களை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. அதிலும், நீதிமன்றங்களில் விவாகரத்து கோரும் தம்பதிக்கு ஆலோசனை வழங்குவதோடு, இந்த படத்தை போட்டுக் காட்டினால் நிச்சயம் அவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுவது உறுதி.
மொத்தத்தில்,
*அறுந்து போன ரப்பர் பேண்டை தூக்கி எரியாமல், அதை முடிச்சு போட்டு பயன்படுத்துவது போல் கணவன், மனைவி இடையே எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதை மறந்து ஒருவரை ஒருவர் இறுகப்பற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் இந்த ‘இறுகப்பற்று’ நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.*