நடப்பு ஆண்டில் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலாவில்அதிக நேரம், பணத்தை செலவழிக்க விரும்பும் இந்தியர்கள்
–––––
அக்கோ நிறுவனம் நடத்திய
அக்கோ யூகோவ் பயண அறிக்கை ஆய்வில் தகவல்
– நடப்பு ஆண்டில் 60 சதவீத இந்தியர்கள் சர்வதேச சுற்றுலாவை திட்டமிட்டுள்ளனர்
– 67 சதவீதம் பேர் பயணக் காப்பீட்டின் அவசியத்தை உணர்ந்துள்ளனர்
– 39 சதவீதம் பேர் மிகவும் நெகிழ்வான மற்றும் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட பயணக் காப்பீட்டுக் கொள்கையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்
சென்னை:
கடந்த சில ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் இருந்த சுற்றுலாத் துறை தற்போது சமீப காலமாக நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த ஆண்டில் 31 சதவீதம் இந்தியர்கள் சர்வதேச சுற்றுலாவை மேற்கொள்ள இருக்கிறார்கள் என்று அக்கோ நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள மக்களின் சுற்றுலா குறித்த எண்ணங்கள், அதன் மீது அவர்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் சுற்றுலா தொடர்பான பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள இந்தியாவின் முதல் ஆன்லைன் இன்சூரன்ஸ் நிறுவனமான அக்கோ நிறுவனம் யூகோவ் உடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தி ‘அக்கோ டிராவல் இன்டெக்ஸ் 2023’ என்னும் அந்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள முக்கிய 7 நகரங்களில் 24 வயது முதல் 45 வயதுள்ள 1000 நபர்களிடம் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. சமீப காலமாக சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சி கண்டுவரும் நிலையில், 48 சதவீத இந்தியர்கள் சுற்றுலாவிற்காக அதிக அளவு தொகையை தங்கள் பட்ஜெட்டில் ஒதுக்க இருப்பதாகவும், 37 சதவீதம் பேர் நீண்ட நாள் சுற்றுலாவிற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதில் பெரும்பாலானோர் உள்நாட்டு சுற்றுலாவைக் காட்டிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணத்திற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும், தொற்று நோய்க்கு பிந்தைய தற்போதைய காலக்கட்டத்தில் 44 சதவீதம் பேர் சுற்றுலாவிற்கு பட்ஜெட்டில் அதிக தொகையை ஒதுக்க இருப்பதாகவும், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் 31 சதவீதம் பேர் அதிக உள்நாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ள இருப்பதாகவும், 30 சதவீதம் பேர் அதிக நாட்கள் சுற்றலா செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த ஆய்வில் கூறியிருக்கிறார்கள்.
இதில் 71 சதவீதம் பேர் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு 1 லட்ச ரூபாய் முதல் 6 லட்ச ரூபாய் வரை செலவழிக்க தயாராக இருப்பதாகவும், உள்நாட்டு சுற்றுலாவிற்கு 1 லட்ச ரூபாய் வரை செலவழிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் மற்றும் சுற்றுலா போன்றவற்றை தாண்டி மக்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு சுற்றுலா பயணத்தின்போதும் சுத்தம் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அவர்கள் முக்கியமாக கருதுகிறார்கள். இதில் பெரும்பாலானோர் அதிக மக்கள் நெருக்கம் இல்லாத இடங்களையே விரும்புகிறார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து எம்பெடட் இன்சூரன்ஸ் மூத்த துணைத் தலைவர் பிரிஜேஷ் உன்னிதன் கூறுகையில், 2023–ம் ஆண்டில் இந்தியர்கள் எந்த மாதிரியான பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்பதையும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களின் பயண விருப்பத்தேர்வுகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதையும் அறிந்து கொள்ள விரும்பினோம். அதன்படி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இப்போது சுற்றுலா பயணிகள் வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மை குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் பல்வேறு புதிய அனுபவங்களுக்காக அதிக செலவு செய்ய தயாராக உள்ளனர் என்பதை இந்த ஆய்வு தெளிவாக காட்டுகிறது. மேலும் அவர்கள் பயணக் காப்பீட்டின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து கொண்டு இருப்பதோடும், காப்பீடு செய்வதால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள அவர்கள் ஆர்வமாக இருப்பது குறித்தும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. அத்துடன் சுற்றுலாப் பயணிகள் தங்களின் நல்வாழ்வு பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருப்பதோடு, அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களை அதிகம் விரும்புவதும் தெரிய வந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
இதில் பங்கேற்ற 1000 பேரில் 60 சதவீதம் பேர் வெளிநாட்டு சுற்றுலாவிலும், 40 சதவீதம் பேர் உள்நாட்டு சுற்றுலாவிலும் அதிக ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது.
எதுஎது முக்கியம்?
சுற்றுலாவை திட்டமிட்டவுடன், அந்த பயணம் முழுவதும் வசதியாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். இதில் பதிலளித்தவர்களில் 50 சதவீதம் பேர் பயணத்தின் வசதியே முதன்மையானது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக குறைந்த டிக்கெட் விலை, நெகிழ்வான டிக்கெட் முன்பதிவு மற்றும் அவர்கள் ஏறும் விமானம், ரயில் அல்லது பேருந்து ஆகியவற்றின் தூய்மை மிகவும் முக்கியம் என்றும் கூறியுள்ளனர். அதேபோல் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்தல், தங்குமிடத்தின் தூய்மை, தங்கும் இடத்தின் வசதி, பாதுகாப்பு ஆகியவற்றிலும் அவர்கள் அதிக கவனம் செலுத்துவதும் தெரிய வந்துள்ளது.
பயணக் காப்பீட்டை இந்தியர்கள் புரிந்துகொள்கிறார்களா?
இந்த கேள்விக்கு இந்த அறிக்கை முழுமையாக பதில் அளித்துள்ளது. அதில், பதிலளித்தவர்களில் 67% பேர் தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது பயணக் காப்பீடு கட்டாயம் என்று கூறியுள்ளனர், அதே சமயம் 62% பேர் பயணக் காப்பீடு மருத்துவம் மற்றும் விபத்துக் காப்பீட்டை வழங்குகிறதா என்றும் கேட்டுள்ளனர். 49 சதவீதம் பேர், தங்களின் தொலைந்துபோன உடமைகள், பயணத்தின்போது அவசர கால நிலை, தவறவிட்ட அல்லது காலதாமதான விமானம் மற்றும் சுற்றுலா நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை காப்பீட்டின் மூலம் எவ்வாறு பெற முடியும் என்பது குறித்தும் ஆர்வத்துடன் கேட்டுள்ளனர். காப்பீட்டை தேர்வு செய்வதில் அவர்களின் விருப்பங்களைப் பற்றி கேட்டபோது, 48 சதவீதம் பேர் விரிவான பயணக் காப்பீட்டுக் கொள்கைகளை விரும்புவதாகக் கூறினர். இருப்பினும், 39% பேர் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் நெகிழ்வான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய பயணக் காப்பீட்டுக் கொள்கையில் அதிக ஆர்வம் காட்டினர். 13 சதவீதம் பேர் மட்டுமே பயணக் காப்பீடு அவசியம் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் 45 சதவீதம் பேர் நன்கு ஆய்வு செய்து தங்கள் பாலிசிகளை ஆன்லைன் தளங்களில் வாங்குவதாகவும், 43 சதவீதம் பேர் பயண ஏற்பாட்டாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 12 சதவீதம் பேர் மட்டுமே பாலிசிகளை வாங்குவதற்கு முன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதாக கூறியுள்ளனர்.
ஆப்லைன் – ஆன்லைன்
பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிட ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர், உதாரணமாக, பதிலளித்தவர்களில் 45 சதவீதம் பேர் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு பயணிக்க உள்ளூர் போக்குவரத்தைத் தேர்வுசெய்ய ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தகவலைப் பயன்படுத்துகின்றனர். 44 சதவீதம் பேர் தங்குமிடத்தைத் தீர்மானிக்கும் போது இரண்டு தகவல் தளங்களையும் நம்பியுள்ளனர், மேலும் 43 சதவீதம் பேர் தங்களுக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில் தங்கள் இடத்தை எவ்வாறு அடைவது என்பதைத் தீர்மானிக்கிறார்கள்.
அவர்கள் எங்கு செல்ல விரும்புகிறார்கள்?
இந்த ஆய்வில் பதில் அளித்தவர்களில் சர்வதேச சுற்றுலாவைப் பொறுத்தவரை முக்கிய மற்றும் முதல் சுற்றுலாத் தலமாக துபாய் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மாலத்தீவு, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து மற்றும் பாலி ஆகிய நாடுகள் உள்ளன. உள்நாட்டைப் பொறுத்தவரை முதல் இடத்தில் கோவா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இமாச்சல பிரதேசம், கேரளா, உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளது.
குறிப்பாக பதில் அளித்தவர்களில் 3–ல் ஒருவர் சாகச சுற்றுலாக்களை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். சிலர் கடல் அல்லது மலை போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு பயணிக்க விரும்புகிறார்கள். பலர் சுற்றுலா செல்வதன் முக்கிய நோக்கமாக புதிய வகை உணவு மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றை கூறுகிறார்கள்.
இதில் 36% இந்தியர்கள் தங்கள் நண்பர்களுடனும், 35% பேர் தங்கள் மனைவி அல்லது கணவருடனும் பயணம் செய்ய விரும்புகிறார்கள், 14% பேர் மட்டுமே தனியாக பயணம் செய்ய விரும்புகிறார்கள். 4 சதவீதம் பேர் மட்டுமே தங்களின் வளர்ப்பு பிராணிகளுடன் செல்ல விரும்புகிறார்கள் என்று இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.