புல் தடுக்கி பயில்வானல்ல ப்ளூசட்டை மாறன். ஆணானப்பட்ட ஹீரோக்களை கூட, தன் முப்பத்தி மூணாவது அறப்பல்லால் கடித்து துப்புவதுதான் அவரது ஸ்டைல். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தியேட்டரைக் கழுவி தீட்டு கழிக்கிறார்களோ, இல்லையோ? இவர் திட்டிக் கழித்துவிடுவார். “இவிங்கெல்லாம் எதுக்கு தெரியாத வேலையை செய்றாய்ங்க?” என்று இயக்குனர்களை நேரடியாக கேள்வி கேட்டுக் கிழித்து, தூற்றித் துவைப்பதுதான் ப்ளு சட்டையின் ப்ளூவேல் கேம்.
“வெட்டிருவேன், குத்திருவேன், குடலை புடுங்கி கூவத்துல எறிஞ்சுருவேன்” என்பன போன்ற ரசிகர்களின் தேவாரங்களை கேட்டு, மீண்டும் மீண்டும் திருவாசங்களை உதிர்ப்பது மாறனின் மன தைரியத்திற்கு ஒரு எ.கா
.
இப்படிப்பட்ட சூழலில்தான்
“வா மாப்ளே… ஒனக்காகதான் வெயிட்டிங்” என்று பழுக்க காய்ச்சிய கம்பியோடு காத்திருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.
ஆல் மை பிரன்ட்ஸ். உங்களுக்காக ஒரு தகவல். ப்ளு சட்டை மாறன் பற்றிய உங்களுடைய அத்தனை கணிப்பும் சுக்கு நூறாக உடையும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நேற்றுதான் அவர் இயக்கியிருக்கும் புதுப்படத்தை கண்டு களித்தேன். இன்னும் டெக்னிகலாக முழுமை பெறாத அந்தப்படம் சுமார் இரண்டு மணி நேரம் ஓடக் கூடியது. உட்கார்ந்ததும் தெரியவில்லை. படம் முடிந்ததும் தெரியவில்லை. அவ்வளவு ஸ்பீட். ஒரு திரைக்கதை எப்படியிருக்க வேண்டும் என்று யோசித்து யோசித்து கட்டமைத்திருக்கிறார் மனுஷன். தமிழில் இதுவரை வெளிவராத கதை.
எவ்வளவு பெரிய கல்லுளி மங்கன்களையும் கதற கதற சிரிக்க வைக்கும் டயலாக்குகள். அதை சரியாக டெலிவரி செய்யக்கூடிய சின்னஞ்சிறு நடிகர்கள். (இப்படம் வெளிவந்த பின் ஒவ்வொரு நடிகருக்கும் பெருத்த டிமான்ட் காத்திருக்கிறது) எல்லாவற்றையும் விட, மாறனின் அரசியல் நையாண்டிகள் இருக்கிறதே… அபாரம்!
இப்பவே அவரை புக் பண்ணி வைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முன்னொரு காலத்தில் தேவனின் திருச்சபையில் தேங்காய் பால் குடித்தவர்களாக இருக்கக் கூடும்.
சினிமாக்காரர்களால் அரைகுறை விமர்சகன் என்று இகழப்பட்ட ப்ளுசட்டையின் கறைகள், போயே போச்! தியேட்டருக்கு வரப்போகும் இப்படத்தை டிடெர்ஜன்ட் மனசோடு பார்த்து மகிழுங்க மக்கா.