ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!!

Share the post

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் 12,000 + மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் Don’t worry Don’t worry da Machi (‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’) பாடல் வெளியிடப்பட்டது

‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் ‘ரத்னம்’ திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர்.

ஏப்ரல் 26 அன்று ‘ரத்னம்’ திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை மாலை 12,000 +மாணவர்கள் கலந்துகொண்ட வைப்ரன்ஸ்’24 நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான Don’t worry Don’t worry da Machi (‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’) வெளியிடப்பட்டது. மாணவர்களை இப்பாடலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது…

“வருங்கால இந்தியாவுக்கு வணக்கம். இந்த நிகழ்ச்சியின் மேடைக்கு உங்கள் மத்தியில் இருந்து நான் வர காரணம் உங்களில் ஒருவன் நான் என்பதால் தான். கல்லூரியில் படிக்கும்போது கலாச்சார பிரிவின் செயலாளராக இருந்து கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவன் என்ற முறையில் இந்த பணி எவ்வளவு கடினமானது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

நீங்கள் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி. என்றும் உங்களில் ஒருவனாக நான் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.”

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்…

“மாணவர்களாகிய உங்கள் மத்தியில் இருக்கும் போது நானும் என்னை ஒரு மாணவனாக உணர்கிறேன். 18 வருடங்களுக்குப் பிறகு கல்லூரிக்குள் நுழைந்துள்ளேன். உங்கள் அனைவரையும் இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.”

கவிஞர் விவேகா பேசுகையில்…

“பாட ஆசிரியர்களை சந்திக்கும் மாணவர்களுக்கு முன்னால் பாடல் ஆசிரியராக வந்து நிற்பதில் மிக்க மகிழ்ச்சி. ‘ரத்னம்’ திரைப்படம் ஒரு மிகச்சிறந்த அனுபவம். இயக்குநர் ஹரி அவர்களுடன் அவரது முதல் படத்திலிருந்து பணியாற்றி வருகிறேன். ‘ரத்னம்’ படத்தின் அனைத்து பாடல்களும் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளன.

அற்புதமான பாடல்களை தொடர்ந்து வழங்கி பான்-இந்தியா இசையமைப்பாளராக இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருப்பவர் தேவிஶ்ரீ பிரசாத் அவர்கள். இந்தியா மட்டுமின்றி வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அவரது புகழ் பரவி உள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள பாடலும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும். இது ஒரு ஊக்கமளிக்கும் பாடல், அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கு பிறகு விஷால் உச்சத்தில் இருக்கிறார். அவருக்கும் ‘ரத்னம்’ படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த திரைப்படமும் அதன் பாடல்களும் உங்கள் மனங்களில் முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.”

நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது…

“மாணவர்களாகிய உங்கள் அனைவரையும் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் தருகிறது. நன்றாக படித்து, உழைத்து முன்னேறுங்கள். ஏணியை கூரையில் போடாமல் வானத்தில் போடுங்கள்.

இயக்குநர் ஹரி அவர்களுக்கு நன்றி. தம்பி விஷால் கடினமான உழைப்பாளி, அவரது உழைப்புக்கு இன்னும் பல தளங்கள் காத்திருக்கின்றன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பாடல் ஆசிரியர் விவேகா, மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். ஏப்ரல் 26 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்.”

இயக்குநர் ஹரி பேசியதாவது…

“இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம், தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆறாவது படம். ‘சிங்கம்’ உள்ளிட்ட எனது முந்தைய படங்களுக்கு எவ்வாறு அருமையாக பாடல்களை வழங்கினாரோ அதைவிட சிறந்த பாடல்களை ‘ரத்னம்’ படத்திற்கு வழங்கியுள்ளார். ஆறு பாடல்களும் மிகவும் அருமையாக வந்துள்ளன.

விஷாலுடன் இணைந்து ஒரு முழு நீள ஆக்ஷன் திரைப்படத்தை வழங்க வேண்டும் என்று எண்ணினேன். ‘தாமிரபரணி’, ‘பூஜை’ உள்ளிட்ட படங்கள் ஆக்ஷன் நிறைந்தவை என்றாலும் அவற்றில் குடும்ப செண்டிமெண்ட் போன்ற இதர விஷயங்களும் இருந்தன. ‘சிங்கம்’, ‘சாமி’ போன்ற ஆக்ஷன் ததும்பும் திரைப்படமாக’ ரத்னம்’ இருக்கும். இப்படத்திற்காக விஷால் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு பேசப்படும். அனைவருக்கும் நன்றி.”

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசியதாவது…

“விஐடி மாணவர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. இன்று வெளியிடப்பட உள்ள பாடலின் தலைப்பே ‘டோன்ட் வரி டோன்ட் ஒரிடா மச்சி’ ஆகும். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் கொரோனா போன்ற பல்வேறு சவால்களை சந்தித்து விட்டோம். எது வந்தாலும் நேர்மறையாக இருக்க சொல்லும் பாடல் தான் இது.

ஏனென்றால் ஒரு விஷயத்தை அது குறித்து மிகவும் கவலைப்படாமல் நாம் எதிர் கொண்டாலே நமக்கு வெற்றி கிட்டும், அதை இந்த பாடல் அழகாக சொல்கிறது, உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இப்பாடலுக்காக கடினமான நடன அசைவுகளை விஷால் செய்துள்ளார், பாடலை பார்த்து ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், நன்றி.”

விழாவில் ஏழை குடும்பங்களை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகளின் கல்வி செலவை விஷாலின் தேவி பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பாக விஐடி ஏற்றது. இதற்காக விஐடி நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் விஷால் நன்றி தெரிவித்தார். பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள விஷாலுக்கு விஐடி துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *