*நினைவெல்லாம் நீயடா’ திரை விமர்சனம்*!!

Share the post

*நினைவெல்லாம் நீயடா’ திரை விமர்சனம்*!!

ராயல் பாபு தயாரித்து ஆதிராஜன் இயக்கி வெளிவந்திருக்கும் படம் நினைவெல்லாம் நீயடா’

பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, ரோஹித், ரெடிங் கிங்ஸ்லி, மபோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், யாசர், அபி நக்ஷத்ரா மற்றும் பலர் நடித்து உள்ளனர்

இசை: இளையராஜா

பள்ளியில் மலர்ந்த தனது காதலை நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாயகன் பிரஜின், பிரிந்து சென்ற தனது காதலி நிச்சயம் தனக்காக காத்திருப்பார், தன்னை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று தெரியாத பெண்ணுக்காக காத்திருப்பதை விட, உன்னை விரும்பும் பெண்ணை திருமணம் செய்துக்கொள், என்று பெற்றோர் மற்றும் நண்பர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். அதன்படி, தனது அத்தை மகளை பிரஜின் திருமணம் செய்துக் கொள்கிறார்.

பிரஜினின் திருமணம் நடந்து முடிந்த சில நாட்களில், அவர் எதிர்பார்த்தது போல், அவரது காதலி அவரை தேடி வருகிறார். தான் நினைத்தது போல் தனக்காக பல வருடங்களாக காத்திருந்த தனது காதலி, தன்னை தேடி வந்திருப்பதை அறிந்த பிரஜின், பள்ளி பருவத்தில் பிரிந்த காதலியுடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக்கொண்ட மனைவியுடன் வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பதே ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் பிரஜின், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். பள்ளி பருவத்தில் பிரிந்த காதலிக்காக, ஏக்கத்தோடும், சோகத்தோடும் காத்திருக்கும் மனநிலையை தனது நடிப்பில் மட்டும் இன்றி முகத்திலும் படம் முழுவதும் வெளிக்காட்டியிருப்பது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாலும், பார்வையாளர்களை வருத்தப்பட வைக்கிறது.

பிரஜினின் அத்தை மகளாக, அவரை ஒருதலையாக காதலிக்கும் மனிஷா யாதவ், தனது வெறித்தனமான காதலை வெறித்தனமான நடிப்பு மூலம் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி சில இடங்களில் கைகொடுத்திருக்கிறது, பல இடங்களில் தடுமாற வைத்திருக்கிறது.

பிரஜினின் நண்பராக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி தனிமனிதராக சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மனோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், யாசர், அபி நக்‌ஷத்ரா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத அளவுக்கு கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை அளவு.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், பளிச்சென்றும் படாக்குவதற்காக ஏகப்பட்ட விளக்குகளை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், அந்த விளக்குகளை மறைத்து வைத்து காட்சிகளை படமாக்காமல், பின்னணியாக கொண்டு படமாக்கியிருப்பது கண்களை கூச வைத்துவிடுகிறார்.

முதல் காதல் எப்போதும் நம் நினைவில் இருந்து அகலாது, என்பதை உணர்த்தும் வகையில் கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆதிராஜன், அந்த முதல் காதல் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை, அப்படி இருந்தாலும் அதை கடந்து செல்வது தான் வாழ்க்கை என்ற கருத்தை அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்.

காதல் கதை எவ்வளவு பழமையானதாக இருந்தாலும், அதை எத்தனை முறை நாம் பார்த்தாலும், சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் எப்போதும் புதிய அனுபவத்தை கொடுக்கும். அந்த வகையில், இந்த ‘நினைவெல்லாம் நீயடா’ படமும் நம் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துவதோடு, புதிய அனுபவத்தை கொடுக்கும் காதல் படமாகவும் இருக்கிறது.

*மொத்தத்தில், ‘சுவாரஸ்யமானது*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *