விஜய், அஜித் சம்மதித்தால் இருவரையும் ஒரே படத்தில் இயக்க தயார் – இயக்குநர் வெங்கட் பிரபு
தமிழகத்தின் பிரமாண்ட ஷார்ட் ஃபிலிம் போட்டியின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் திறமை திருவிழா சென்னையில் இன்று (25.09.2022) நடைபெற்றது. அதில் நடுவர்களாக இயக்குநர் வஸந்த், இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கினார்கள். அந்த விழாவில் அவர்கள் பேசியதாவது:

இயக்குநர் வெங்கட்பிரபு பேசும்போது,
இங்கிருக்கும் எல்லோரும் இந்த மேடையில் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தெலுங்கு எனக்கு தெரியாது. ஆனால், தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழ் நடிகர்கள் பலரும் அந்த படத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கில் இயக்கியதில் பல அனுபவங்கள் கிடைத்தது. சினிமாவிற்கு மொழி முக்கியமல்ல என்பதற்கு முருகதாஸ் மற்றும் பிரபுதேவா மாஸ்டர் சிறந்த உதாரணம். ஹிந்தியே தெரியாமல் படம் எடுத்து வெற்றி பெற்றார்கள். ஆங்கிலம் சரியாக தெரியாமல் பாலிவுட் படம் வரை செல்கிறார்கள். ஆகவே, சினிமாவிற்கு மொழி தடையில்லை.

குறும்படம் இயக்குவது மிகவும் கஷ்டம் என்று கூறினார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன். என்னைப் போன்ற இயக்குநர்களுக்கு குறும்படம் இயக்குவது கஷ்டம் தான். ஏனென்றால், 3 நிமிடங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டும்.
தல, தளபதி ஒப்புக் கொண்டால் இருவரையும் வைத்து இயக்குவதற்கு தயாராக உள்ளேன்.

மாநாடு படத்தில் சிம்புவிற்கு பில்ட்ப் இருக்காது. ஆனால், அவரை உயிரோட்டமுள்ள கதாபாத்திரமாக வெந்து தணிந்தது காடு படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் காட்டியிருப்பார். அப்படத்தை பார்த்து விட்டு சிம்புவை பாராட்டினேன். நாம் எப்போது அடுத்த படம் எடுக்க போகிறோம் என்று கேட்டார். அதற்காக சூழல் வரும்போது நிச்சயம் எடுப்போம் என்று கூறினேன்.


மேலும், எனக்கு மட்டுமில்லை எல்லா இயக்குநர்களுக்குமே ஒரு படத்தைவிட அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு இயக்குநருக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. 82 வயதிலும் படம் இயக்குகிறார்கள்.
குறும்படம் எடுப்பவர்கள் அவர்களை நினைத்து அவர்களே பெருமையடைய வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளும் புதுபுது விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.


கோவா படத்திற்கு ஹாலிடே என்று டேக் வைத்தோம். மங்காத்தா படத்திற்கு கேம் என்று வைத்தோம். அப்படியே மாநாடு படத்திற்கு பாலிட்டிக்ஸ் என்று வைத்தோம். எல்லா படங்களுக்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மற்றும் டேக் வைப்பது வெங்கட்பிரபுவின் பாணி என்றானதால். அதைப் பின்பற்றி வருகிறேன்.
திரையங்கிற்கும், ஓடிடிக்கும் போட்டியே கிடையாது. திரையரங்கம் செயல்படாத கொரானா காலகட்டத்தில் பணத்தை செலவழித்து வட்டி அதிகமாகிக் கொண்டே இருக்கும்போது ஓடிடி-யில் வெளியிட்டோம். ஆகையால், இதுவும் பொழுதுபோக்கே தவிர போட்டி கிடையாது.

விக்ரம் படம் விரும்பி பார்த்தேன். ஓடிடி-யில் வெளியான சுழல் தொடர்கதையை விரும்பி பார்த்தேன். சமீபத்தில் பிடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவை பிடித்திருந்தது. அதேபோல், திருச்சிற்றம்பலமும் நன்றாக இருந்தது. நித்யாமேனன் சிறப்பாக நடித்திருந்தார் என்றார்.
இயக்குநர் வஸந்த் பேசும்போது,
ஒரு திரைப்படத்தை ஓடிடியில் பார்ப்பதற்கும் திரையரங்கில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திரையரங்கில் பலதரப்பட்ட பார்வையாளர்களுடன் பார்க்கும் அனுபவம் ஓடிடியில் இருக்காது.
சினிமாவை பொருத்தவரை நம்பிக்கையை எப்போதும் விடக் கூடாது. பேசுகிறேன் பேசகிறேன் பாடலில் கூட நம்பிக்கை தரும் விதமான வரிகளை அமைத்திருப்பேன், விழுந்தால் எழுந்துகொண்டே இருங்கள். எங்கள் காலத்தில் இருந்ததைவிட இப்போது தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சினிமா இப்போது பொற்காலத்தில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி எல்லோரும் வெற்றியடைய வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.
50 ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு 100 ரூபாய் கொடுத்தால் திருப்தி அடைவார்கள். ஆனால், 5 ரூபாய் கொடுத்தால் ஏமாற்றமடைவார்கள். சிம்புதேவன் கூறியதுபோல ஓடிடி பார்வையாளர்கள் மற்றும் திரையரங்க பார்வையாளர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்றவாறு மாற்றியமைத்தால் எந்த மாதிரியான படங்களும் ஓடும். திரையரங்கமும், ஓடிடியும் அண்ணன் தம்பி மாதிரி தான்.
சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படத்தை இயக்கிய மாதவனை இயக்குநராக பிடித்திருக்கிறது. மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு மிகவும் பிடித்திருக்கிறது. அதேபோல் அப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கமும் பிடித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படமும் எனக்கு பிடித்த படம். திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடிப்பும், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துஷாராவின் நடிப்பையும் பிடித்திருக்கிறது என்றார்.
இயக்குநர் சிம்புதேவன் பேசும்போது,
என்னைப் பொருத்தவரை இயக்குநர்களுக்கு என்று ஒரு பார்மெட் கிடையாது. அது ஓடிடியாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் பார்வையாளர்களை உட்கார வைப்பதற்கான பார்முலா தான் தேவை. கசடதபற வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்கில் என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்குமோ அது இப்படத்திற்கும் கிடைத்தது. சினிமாவில் பயணிக்கும்போது அடிப்படையான விஷயங்கள் என்னென்ன என்று அனுபவத்தில் தான் தெரியும்.
சாணி காகிதம், டாணாக்காரன், ஆங்கிலத்தில் ரெட் நோட்டீஸ். சாணி காகிதம் இயக்குநரை பிடித்திருக்கிறது.
மாநாடு படத்தில் சிம்புவின் நடிப்பு பிடித்திருந்தது. ராக்கெட்ரி படத்தில் மாதவன் நடிப்பும், திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனனின் நடிப்பும் பிடித்திருந்தது என்றார்.
5000 குறும்படங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 90 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 31 லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது தமிழ்நாடு நவ்.