VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS தயாரிப்பில் இயக்குநர் யுவன் இயக்கும், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் !
ஹாரர் காமெடி ,உலகின் வேறெந்த பிரதேசத்தை விடவும் தமிழகத்தில் ரசிகர்களால் மிக விரும்பப்படும் ஒரு ஜானராக இருந்து வருகிறது. மிகச்சரியான கலவையில் உருவாக்கப்படும் ஹாரர் காமெடி படங்கள் தமிழகத்தில் பம்பர் ஹிட்டடித்திருக்கின்றன. அந்த வகையில் புதுமையான முறையில், வரலாற்று பின்னணியில் ஒரு ஹாரர் காமெடி படத்தை இயக்குகிறார் “சிந்தனை செய்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் யுவன். சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தினை VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.V.சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
இயக்குநர் யுவன் படம் குறித்து கூறியதாவது…







எனது இயக்கத்தில் “சிந்தனை செய்” படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. பின்னர் தெலுங்கில் கதர்னாக், ரணம் மற்றும் பல படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றினேன். தற்போது மீண்டும் இப்படம் மூலம் தமிழுக்கு திரும்பியிருக்கிறேன். ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழக ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள் ஹாரர் காமெடியை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் ஒரு புதுமையான ஹாரர் காமெடி திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். முதல்முறையாக இப்படம் வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடி கதையினை சொல்லும் படமாக இருக்கும். இப்படத்தில் மிகவும் முக்கியமான, முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். வேறு நாயகிகள் நடிப்பதை விடவும் சன்னி லியோன் மாதிரியான ஒரு ஹீரோயின், அந்த கதாபாத்திரத்தை செய்யும் போது அக்கதாபாத்திரத்திற்கு ஒரு புது அடையாளம் கிடைக்கும் என நினைத்தோம். ரசிகர்கள் கண்டிப்பாக அவரை திரையில் கொண்டாடுவார்கள். மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ் திலக்,தங்கதுரை,வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெரம்பலூர் ,துறைமுகம் மற்றும் 25 நாட்கள் மும்பையில் படமாக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம்.







இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தை இயக்குநர் யுவன் இயக்குகிறார். தீபக் D. மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார். VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.V.சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.