சென்னையில் ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

Share the post

சென்னையில் ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டார்

சென்னை, 21 பிப்ரவரி 2025: சென்னையில் இன்று நடைபெற்ற
‘ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், நடிகர் மற்றும் இயக்குநர் கமல் ஹாசனுடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல் ஹாசன் அறிவிக்கப்பட்டார்.

உலகளாவிய பொழுதுபோக்கு சந்தையில் இந்தியாவின் இடத்தை வடிவமைப்பதில் பிராந்திய மொழிகள் திறன்வாய்ந்த சக்திகளாக உருவாகி வருவதையும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருவதையும் கருத்தில் கொண்டு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பான FICCI இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு நாள் நிகழ்வை சென்னையில் நடத்துகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு ஆகியவற்றின் எதிர்காலத்தை ஆராய்வதற்கான முக்கிய தளமாக செயல்படுவதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் படைப்புலக பொருளாதாரத்தில் புதுமை, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு இது அடித்தளம் அமைக்கிறது.

உலகளாவிய அங்கீகாரத்தை ஈர்ப்பதில் பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் வலியுறுத்தினார். தமிழ்நாட்டை ஒரு பொழுதுபோக்கு மையமாக மாற்ற வேண்டும் என்ற டாக்டர் கலைஞர் (டாக்டர் கருணாநிதி) அவர்களின் கனவை நனவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார். சென்னையில் 152 ஏக்கர் பரப்பளவில் ஒரு அதிநவீன திரைப்பட நகரத்தை நிறுவுவது இந்த பயணத்தில் ஒரு முக்கிய முயற்சியாக திகழும். இந்த உலகத்தரம் வாய்ந்த நகரத்தில் அதி நவீன போஸ்ட்-புரொடக்ஷன் ஸ்டுடியோக்கள், மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பங்கள், அனிமேஷன் மற்றும் VFX ஸ்டுடியோக்கள், LED சுவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான 5 நட்சத்திர ஹோட்டல் என அனைத்து வசதிகளும் இடம்பெறும்,” என்று திரு. உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

டாக்டர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றும் நோக்கில் மற்றுமொரு முக்கியமான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். “2010ம் ஆண்டு, டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், கேளம்பாக்கம் அருகே 90 ஏக்கர் நிலம் திரைப்படத் துறை அமைப்புகளுக்கு குடியிருப்பு வளாகங்கள் கட்டுவதற்காக 99 ஆண்டு குத்தகைக்கு ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும், ஆனால் பயனாளிகளால் அதை முடிக்க முடியவில்லை, இதனால் உத்தரவு செல்லாமல் போனது. திரையுலக சங்கங்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, நமது முதலமைச்சர் அந்த உத்தரவைத் திருத்தி, நிலத்தை திரையுலகினர் பயன்படுத்த அனுமதித்துள்ளார். திருத்தப்பட்ட உத்தரவு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது,” என்றார்.

திரு கமல்ஹாசன் பேசுகையில், “இந்திய சினிமா நமது கலாச்சாரத்தின் உண்மையான தூதராக திகழ முடியும். இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு ஒரு நீண்டகால தொலைநோக்கு திட்டம் நமக்கு தேவை. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்தாமல் சந்தை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்,” என்று கூறினார்.

“மேலும், சினிமா மீதான மாநில பொழுதுபோக்கு வரியை மறுபரிசீலனை செய்து சீர்திருத்த வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக துணை முதல்வரிடம் தெரிவிக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவரும், ஜியோஸ்டார் பொழுதுபோக்கு – தலைமை நிர்வாக அதிகாரியுமான கெவின் வாஸ் பேசுகையில், “தென்னிந்திய பொழுதுபோக்கு துறை நாடு தழுவிய வளர்ச்சியை அடைந்து, உலகளாவிய கவனத்தையும் ஈர்த்துள்ளது, இதற்கு உதாரணமாக திரு. கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் உள்ளனர். அவர்களின் படங்கள் பல ஆண்டுகளாக எல்லைகளை கடந்து வெற்றி பெற்றுள்ளன. ஆர் ஆர் ஆர் மற்றும் கே ஜி எஃப்-2 போன்ற படங்களாலும், தமிழ் சினிமாவின் கதைசொல்லலாலும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய திரைத்துறை மறுமலர்ச்சி, இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையை தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறது.

டிஜிட்டல் ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஆகிய இரண்டு துறைகளும் இணைந்து செழிக்கும் மகத்தான திறனை கொண்டுள்ளன. விரைவில் தொடங்கப்பட உள்ள வேவ்ஸ் போன்ற அமைப்புகள் மற்றும் புதுமையான தொடர் முயற்சிகளின் காரணமாக இந்திய பொழுதுபோக்கு துறை உலகளாவிய பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது,” என்றார்.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் அறிவுசார் அமர்வுகள், கூட்டங்கள், பயிற்சி பட்டறைகள், உள்ளடக்க சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வளர்ந்து வரும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய அம்சங்களை இந்த மாநாடு ஆய்வு செய்யும். இந்திய சினிமாவின் உலகளாவிய செல்வாக்கு, தொலைக்காட்சி மற்றும் OTT துறைகளால் ஏற்பட்டுள்ள மாற்றம், ஒளிபரப்பு மற்றும் இசை நுகர்வை மறுவரையறை செய்யும் புதுமை திட்டங்கள் மற்றும் கேமிங், அனிமேஷன், VFX உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் எழுச்சி ஆகியவை மீது முக்கிய கவனம் செலுத்தப்படும். மேலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் வணிகம் செய்வதை எளிமைப் படுத்துவது (EoDB), ஒழுங்குமுறை அமைப்புகள், கொள்கைகள், தடையற்ற, வளர்ச்சி சார்ந்த தொழில் சூழல் பற்றிய விவாதங்கள் நடைபெறும்.

PlayNext – டெவலப்பர் தினம் என்ற சிறப்புப் பிரிவு, கேமிங், இணைய விளையாட்டு மற்றும் இது சார்ந்த பொழுதுபோக்குகள் குறித்து ஆராயும். AVGC-XR துறையில் உலகளாவிய முன்னோடியாக இந்தியா உருவெடுப்பதை இது வெளிப்படுத்தும்.

FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் இணைத் தலைவர் & மெட்டா நிறுவன துணைத் தலைவர் மற்றும் இந்திய தலைவர் சந்தியா தேவநாதன்; FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் இணைத் தலைவர் & வார்னர்ஸ் பிரதர்ஸ் டிஸ்கவரி மூத்த துணை தலைவர் மற்றும் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான தலைமை மேலாளர் அர்ஜுன் நோஹ்வர்; மற்றும் FICCI தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆஷிஷ் பெர்வானி, ரவி கொட்டாரகரா, கார்த்திகேயன் சந்தானம், சஞ்சய் ஏ. வாத்வா, அங்கூர் வைஷ், ஸ்வேதா பாஜ்பாய், மகேஷ் ஷெட்டி, கிருஷ்ணன் குட்டி, ரவிகாந்த் சப்னவிஸ், முஞ்சல் ஷ்ராப், வைபவ் சவான், ஜேக்ஸ் பிஜாய், பிஜாய் அற்புதராஜ், ஆஷிஷ் குல்கர்னி உள்ளிட்ட திரையுலக முன்னணியினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *