தீப்ஷிகா நடிக்கும் ராவண கல்யாணம் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு துவக்கம் ; சந்தீப் மாதவுக்கு ஜோடியாக நடிக்கிறார்
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும், பான் இந்தியா படங்களிலும் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை தீப்ஷிகாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. அந்தவகையில் அழகும் திறமையும் வாய்ந்த தீப்ஷிகா, தெலுங்கில் தனது மூன்றாவது படமாக ராவண கல்யாணம் என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.


ஜார்ஜ் ரெட்டி, வங்கவீட்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த சந்தீப் மாதவ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார்.

சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள இந்த படத்தின் துவக்க விழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் விவி விநாயக் கலந்துகொண்டு படத்தின் ஸ்கிரிப்டை அதன் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். அதுமட்டுமல்ல படத்தின் முதல் ஷாட்டையும் அவர் இயக்கினார்

மேலும் தெலுங்கின் பிரபல கதாநாயகன் சத்யதேவ் கலந்துகொண்டு கேமராவை ஆன் செய்து துவக்கி வைத்தார். அந்தவகையில் ராவண கல்யாணம் படத்தின் துவக்கவிழா திரையுலக நிகழ்வுகள் மிகவும் அருமையான நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்து விட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து முழுவீச்சில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜதி ரத்னாலு படத்திற்காக பாராட்டப்பட்ட ஒளிப்பதிவாளர் சித்தம் மனோகர் இந்த படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்த படத்தை ஜேவி மதுகிரண் என்பவர் இயக்குகிறார்.
ராவண கல்யாணம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்திய படமாக ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே பான் இந்தியா படமாக உருவாகும் மைக்கேல் என்கிற படத்தில் சந்தீப் கிஷன் ஜோடியாக நடித்து வருகிறார் தீப்ஷிகா. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜால் துவங்கி வைக்கப்பட்ட இந்த படத்தில் விஜய்சேதுபதியும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் கூட முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, தீப்ஷிகா தெலுங்கில் தனது முதல் படமாக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் காதல் கதை ஒன்றிலும் நடித்து முடித்துவிட்டார். பிரபல நடிகர் ரவிதேஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆர்டி டீம் ஒர்க்ஸ் மற்றும் பாசிட்டிவ் வைப் புரொடக்சன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.