கமல்ஹாசனின் விக்ரம் பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு விழா!!




இளையராஜா இசையமைக்கும் 1417வது படமாக ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இசைஞானி இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய “இதயமே இதயமே… உன்னைத் தேடித் தேடி…” என்ற பாடலுக்கு கதாநாயகன் பிரஜன் கதாநாயகி சினாமிகா பங்குபெற்ற நடனக் காட்சிகளை நடன இயக்குனர் தினேஷ் படமாக்கி வருகிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த வசந்தி பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றுபவர். இன்று கொடைக்கானலில் நடந்துவரும் படப்பிடிப்பில் பணியாற்ற வந்த நடிகை வசந்திக்கு படக்குழு சார்பில் கதாநாயகி சினாமிகா ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இயக்குநர் ஆதிராஜன் மலர் கொத்து வழங்கி வாழ்த்தினார். படத்தின் தயாரிப்பாளர் ராயல் பாபு, நடிகர் பிரஜன், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி, ஆர்ட் டைரக்டர் முனிகிருஷ்ணா, மாஸ்டர் தினேஷ், மேனேஜர் இளங்கோ ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். படக்குழுவினர் அனைவரும் கைதட்டி வசந்திக்கு வாழ்த்துக்கூறினர்.