உங்கள் சிந்தனையை தூண்டும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுடன் மே தினத்தை கொண்டாடும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
~சமீபத்தில் திரைக்கு வந்து அனைவராலும் பாராட்டப்பட்ட ‘ரைட்டர்’ திரைப்படத்தையும் ஒளிபரப்புகிறது
சென்னை, ஏப்.30–சர்வதேச தொழிலாளர் தினத்தை (மே தினம்) போற்றும் விதமாக பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நாளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளன.
நாளை காலை 9 மணிக்கு மார்க்கெட் ஆப் இந்தியா மற்றும் கார்டியா அட்வான்ஸ்டு நல்லெண்ணை இணைந்து வழங்கும் சிறப்பு பட்டிமன்றமும், அதனைத் தொடர்ந்து உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக புதுமுக இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கி சமீபத்தில் திரைக்கு வந்த ‘ரைட்டர்’ திரைப்படம் மாலை 4.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இரவு 8 மணிக்கு மே தின சிறப்பு ‘போட்டிக்கு போட்டி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை எல்டியா தூய தேங்காய் எண்ணெய் மற்றும் லலிதா ஜுவல்லரி ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
தொழிலாளர்களை போற்றும் வகையில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிகளை காண நாளை காலை 9 மணி முதல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும நிகழ்ச்சிகளை பார்த்து மகிழுங்கள்.
‘சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர்கள் யார் – ஆணா அல்லது பெண்ணா’ என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றத்துடன் நாளைய நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. இதன் நெறியாளராக புகழ்பெற்ற பேச்சாளர் சிவகாசி ராமச்சந்திரன் பங்கேற்கிறார். மேலும் இதில் பேச்சாளர் பழனி, நடிகரும் எழுத்தாளருமான ராஜ்மோகன், பேச்சாளர்கள் கல்பகம் ரேவதி, நவஜோதி, எழிலரசி மற்றும் கல்பனா தர்மேந்திரா ஆகியோர் பங்கேற்று அவரவர் அணிக்காக தங்கள் கருத்துகளை முன்வைக்க இருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்ஜித் தயாரித்து வெளிவந்த ‘ரைட்டர்’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தில் புகழ்பெற்ற நடிகர் சமுத்திரகனி, ஹரிகிருஷ்ணன் மற்றும் இனியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரகனி ஒரு காவல் நிலையத்தின் ரைட்டராக தங்கராஜ் என்ற பெயரில் சிறப்பாக நடித்திருக்கிறார். நடிகர் ஹரிகிருஷ்ணன் தேவகுமாராக நடித்துள்ளார். ஒரு ஜாதிவெறி பிடித்த உயர் போலீஸ் அதிகாரி தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தேவகுமாரை கைது செய்து அவர் மீது பொய் வழக்கு போடத் துடிக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் அநீதி மற்றும் அவலங்களை இந்தப் படம் வெளிச்சம்போட்டுக் காட்டும் வகையில் உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.
‘ரைட்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து மே தின சிறப்பு நிகழ்ச்சியான போட்டிக்கு போட்டி ஒளிபரப்பாகிறது. இதன் சிறப்பு பிரிவில் ஆட்டோ டிரைவர் ராஜி அசோக், டெலிவரி பெண் ஆண்டனி பவன் மற்றும் டாக்டர் முனைவர் கோமதி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அனைவரும் சமூகத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பிற்காக பாராட்டி கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.
ஒரு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் ஆண்டனி பவன், கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருந்தபோதும் கூட தனது கடமையில் இருந்து தவறாமல் பணியாற்றி அந்நிறுவனத்தின் பாராட்டுகளைப் பெற்றவர் ஆவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையில் சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது அப்போதும் அவர் தனது கடமை தவறாது பணியாற்றினார்.
இதேபோல் ஆட்டோ டிரைவர் ராஜி அசோக், டாக்சி அல்லது ஆட்டோவுக்கு பணம் இல்லாமல் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள் முதல் பள்ளிக் குழந்தைகள் வரை ஏழைகளுக்கு இலவச சவாரிகளை வழங்கி இம்மாநிலத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் 11 அனாதை குழந்தைகளுக்கு இலவசக் கல்விக்கு உதவி அளித்து வருகிறார்.
டாக்டர் கோமதி என்னும் முனைவர் கோமதி பல்வேறு கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி உள்ளதோடு இலவச கண் கண்ணாடிகளையும் வழங்கி உள்ளார். இவ்வாறு சமூகத்தில் அக்கறை உள்ள இவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் குறித்து புகழ்பெற்ற பேச்சாளர் சிவகாசி ராமச்சந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவிழா மற்றும் பண்டிகை என்றாலே அதில் பட்டிமன்றம் முக்கிய இடம் பிடிக்கும். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதல்முறையாக நான் சிறப்பு பட்டிமன்றத்தை நடத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற ஒரு தலைப்பை நாம் விவாதித்து, சமுதாயத்தில் ஆண் மற்றும் பெண் இடையிலான செயல்பாடுகளை நாம் எப்படி உணர்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளரும் இயக்குனருமான பா. ரஞ்ஜித் கூறுகையில், சமூக நோக்கம் கொண்ட கருத்தில் படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படம் என் இதயத்தில் எப்போதும் தனி இடத்தைப் பிடிக்கும். இந்த மே தின சிறப்பு நிகழ்ச்சியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள எனது படத்தை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். மேலும் சாமானியர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை வெளிப்படுத்தவே இந்த ‘ரைட்டர்’ படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். சமூகத்தின் குறைகள் மற்றும் அவை சாதாரண மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த படம் தெளிவாக காட்டி உள்ளது. இந்தப் படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.
மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் ராஜாராமன் கூறுகையில், எங்கள் தொலைக்காட்சி பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மே தினத்தை முன்னிட்டு, சமூகத்திற்காக சிறப்பாக பணியாற்றிய பல்வேறு பெண்களை போற்றி கவுரவிக்க உள்ளோம். மே தினத்தில் எங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்கு மிகுந்த அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.