
’செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ படங்களின் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் அடுத்தப் படைப்பு ‘பிரேக் பாஸ்ட்’!
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரேம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெங்கடேஷ்வரா கார்மெண்ட் நிறுவனம் முதன் முறையாக திரைப்படத்துறையில் தடம் பதிக்கிறது. ’நிலாகாலம்’, ‘செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் காந்தி கிருஷ்ணா ’பிரேக் பாஸ்ட்’ என்ற புதிய படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு கவி பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்க, படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தத் தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகியுள்ள இந்தப் பாடல்கள் வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ராணவ், ரோஸிமின், கிருத்திக் மோகன் மற்றும் அமித்தா போன்ற திறமைமிக்க புதுமுகங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் இரண்டு முறை ஊர்வசி பட்டம் வாங்கிய அர்ச்சனா, சம்பத்ராஜ், கஸ்தூரி, மதன் பாப், ரவி மரியா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், மேஹாஶ்ரீ, இயக்குநர் ரங்கநாதன் ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்க, ஆர்.கே. நாகு கலை இயக்கம் கவனித்திருக்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பு செய்கிறார். பல தேசிய விருதுகளை வென்ற லஷ்மி நாராயணன் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாவது, “காதலர்களிடையே அன்பு மற்றும் சண்டை என்ற எவர்கிரீன் கான்செப்ட்தான் இந்தப் படத்திலும் கையாண்டு இருக்கிறோம். இப்போதுள்ள இளைய தலைமுறையினரிடையே மிகவும் பொதுவான விஷயமாக பிரேக்-அப் மாறிவிட்டது. காதலில் வரும் பிரச்சினைகளை அவர்கள் சகித்துக் கொள்ளாமலும், ஒருவருக்கொருவரின் வலியை உணராமலும் இருப்பதுதான் படத்தின் கரு. இது ஒரு மியூசிக்கல் லவ் படம். பாடல்களில் ஜி.வி.பிரகாஷ் மேஜிக் செய்திருக்கிறார். மணாலி, கஜகஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இன்றைய இளைஞர்களுக்கான சிறந்த படமாக இருக்கும். இந்த படத்தில் அறிமுகமாகும் இளம் திறமைசாலிகள் வரும் நாட்களில் பெரிய அளவில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை மற்றும் இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு பெருமை சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
கிரிஜா வரதராஜன் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் எனப் படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையங்கு வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும்.