
’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். புதிய முயற்சியாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் பார்ப்பது போல இருந்தது. இந்தப் படம் அறிவால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினுக்கும் நம்ம வீட்டுப் பெண் போல அழகு உள்ளது. ஹீரோவுக்கும் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளது. சிறந்த டெக்னீஷியன்ஸ் தான் சிறந்த படிப்புகளை உருவாக்குகிறார்கள். உருவாக்குவது கடினம். அதை உடைப்பது எளிது. கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்தவர்களைத் தூண்டி விடுவது எளிது. முரண்பாடுகளை சரிசெய்தால் மட்டுமே வேலைகள் சரியாக நடக்கும். சங்கத்தில் பிரச்சினைகள் வரும்போது அதை சரிசெய்யாமல், அடுத்தடுத்து சங்கங்கள் தொடங்கிக் கொண்டே இருந்தால் கடைசி வரை பிரச்சினைகள் முடியாது. இது ஒரு எச்சரிக்கை மணி. அடுத்து எப்படி வேண்டுமானாலும் திருப்பி விடப்படலாம். இந்தப் படத்தின் டெக்னீஷியன்ஸ் தான் இந்தப் படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!”.

தயாரிப்பாளர் தனஞ்செயன், ”’மையல்’ என்ற தலைப்புக்கே என்ன அர்த்தம் என்பதை இங்கே வந்திருக்கும் அனைவரும் அறியும்படி இயக்குநர் செய்திருப்பது சிறப்பு. பாடல், போஸ்டர் எல்லாம் பார்க்கும்போது ‘பருத்திவீரன்’ கார்த்தி, ப்ரியாமணி போல உள்ளது. ஆக்ஷன் மோடுடன் நல்ல திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற நிறைய நல்ல படங்கள் வரவேண்டும். ’டூரிஸ்ட் ஃபேமிலி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்”.




தயாரிப்பாளர் அனுபமா விக்ரம் சிங், “’மையல்’ படக்குழு சார்பாக அனைவரையும் வரவேற்கிறேன். இந்தக் கதையில் ஆன்மா இருக்கிறது. இந்தப் படத்தை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “தேனப்பன் இதில் பணிபுரிந்திருப்பதும் மகிழ்ச்சி. டெக்னீஷியன்ஸ்தான் படத்தின் பலமே. சமந்தாவும் இல்லாமல் நயன்தாராவும் இல்லாமல் ஹீரோயினுக்கு இது என்ன புது பெயர் என்று யோசித்தேன். அமருக்கு பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! கிராமத்து படம் எனும்போது லைவ்வாக இசை அமைய வேண்டும். அதை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். பாடல்களும் படமும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.
பாடலாசிரியர் ஏகாதிசி, “படம் நன்றாக வந்துள்ளது. அமர் சிறந்த இசையமைப்பாளர். மூன்றாவது பாடல் என்னுடையது. அவருடன் இணைந்து வேலை செய்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் இயக்குநர் அழகாக செய்துக்கியுள்ளார். ‘மையல்’ இல்லை என்றால் மனிதமே இல்லை. ஆண் பெண் மீதும், பெண் ஆண் மீதும் மையல் கொள்ளவில்லை என்றால் இனப்பெருக்கமே இல்லை. இந்த ‘மையல்’ மிகப்பெரிய வெற்றியை மனிதக்குலத்திற்கு தர இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தயாரிப்பாளர் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்றால் ரஜினியோ கமலோ உருவாகி இருக்க மாட்டார்கள். தயாரிப்பாளர் செய்வதை சரியாகச் செய்தாலே திரைத்துறை நன்றாக இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் எனக்குப் பிடித்த இயக்குநர். எல்லோரையும் அரவணைத்து அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். தான் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளரின் மகனது படத்தின் விழாவிற்கு கே.எஸ். ரவிக்குமார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பெருமிதமான தருணம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!”.
மாஸ்டர் கனல் கண்ணன், “படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். அருமையாக வந்துள்ளது. அமர் இசையமைத்திருக்கும் படத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஹீரோவும், ஹீரோயினும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றிப் பெற எனது வாழ்த்துக்கள்”.
தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், “வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இயக்குநர் மிகவும் நம்பிக்கையாக உள்ளார். படம் நிச்சயம் வெற்றி பெறும். செல்வமணி சொன்னதுபோல ஃபெப்சியை உடைக்க முடியாது”.
பாடலாசிரியர் விவேகா, “ஆழமான சிந்தைனையோடு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. கே.எஸ். ரவிக்குமார் சாரிடம் நிறைய படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். அவர் இந்தப் படத்திற்கு வந்து வாழ்த்தியது பெரிய விஷயம். படத்தின் கதாநாயகன் அதிகம் புத்தகங்கள் பற்றி என்னிடம் பேசுவார். நடிகர் புத்தகம் பற்றி பேசுவது ஆரோக்கியமான விஷயம். அமர் அழகான பாடல்களைக் கொடுத்துள்ளார். படத்திலும் அனைவரும் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளார். ‘மையல்’ அனைவருடைய இதயத்தையும் கொள்ளை கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”.
இயக்குநர் பேரரசு, “ரவிக்குமார் சார் தலைமையில்தான் விழா நடந்து கொண்டிருக்கிறது. அவரது காலம் சினிமாவில் பொற்காலம். ஏனெனில் தயாரிப்பாளரை விட அதிக அக்கறை அவருக்கு இருக்கும். ‘திருப்பதி’ படத்திற்கும் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் மாதம் என்று ஃபிக்ஸ் செய்து தான் வேலைப் பார்த்தோம். ’மையல்’ எல்லோருக்கும் இருந்ததால்தான் எம்.ஜி.ஆர். அவர்கள், ஜெயலலிதா அவர்கள், கலைஞர் என எல்லோரும் சினிமாவிலும் அரசியலிலும் ஜெயித்தார்கள். மையலை பல வகையாகச் சொல்லலாம். ஃபெப்சி தொழிலாளர்கள் நலன் கருதியிருக்கும் அமைப்பு. அதற்கு எதிராக ஒன்று ஆரம்பிக்கும்போது அது உழைப்பாளர்களுக்கு என்று ஆரம்பிப்பதா? இல்லை, ஃபெப்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிப்பது. அது தவறான நோக்கம். ‘மையல்’ திரைப்படத்திற்கு வருவோம். ‘மைனா’ படத்தில் கதாநாயகன் விதார்த்தாக இருக்கலாம். ஆனால், சேதுதான் அங்கு அடுத்த கதாநாயகன். இந்தப் படத்தில் அவருக்கு நல்ல ஜோடி அமைந்துவிட்டது. அமலாபால் போலவே இந்தப் படத்திலும் நல்ல ஹீரோயின் அமைந்து விட்டார். கதையும் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு வாழ்த்துக்கள்”.
இயக்குநர் ஏழுமலை, “இந்த ‘மையல்’ உருவாக காரணம் சேதுதான். எல்லாப் புகழும் என் கதாநாயகன் சேதுவுக்குதான். என் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இயக்குநர் சங்கத்தில் இருந்து வாழ்த்த வந்திருக்கும் அனைத்து முன்னோடி இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்கள். சவுந்தர்யன் சாருடைய மகன் அமர் இந்தப் படத்தில் அழகாக இசையமைத்திருக்கிறார். படத்திற்காக அயராது உழைத்திருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.