அரிமாபட்டி சக்திவேல்’ திரைவிமர்சனம்
அஜிஷ்.பி, பவன்.கே தயாரித்து,ரமேஷ் கந்தசாமி இயக்கி,
பவன், VTM சார்லே, மேக்னா எல்லான், இம்மான் அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர் குட் சுப்ரமணி, சேதுபதி ஜெயச்சந்திரன் இவர் நடித்து வெளி வந்திருக்கும் படம் அரிமாபட்டி சக்திவேல் !
இசை: மணி அமுதவன்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிமாபட்டி கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
அதன்படி, அந்த ஊரில் இருப்பவர்கள் காதல் திருமணமோ அல்லது வேறு சாதியிலோ திருமணம் செய்யக் கூடாது.
அப்படி செய்தால், அவர்கள் ஊரை விட்டே ஒதுக்கி வைப்பதோடு, எந்த ஒரு சூழ்நிலையிலும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட கிராமத்து இளைஞரான நாயகன் பவன், பக்கத்து ஊரைச் சேர்ந்த நாயகி மேக்னா எலனை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள அதனால் அவர் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறார்,
கட்டுப்பாடு மிக்க அரிமாபட்டி கிராமம் நாயகனின் காதல் திருமணத்திற்கு பிறகு மாற்றமடைந்ததா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை. !
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற அரிமாபட்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிராமம் தற்போதும் அதே கட்டுப்பாடுகளை கடைபிடித்துக்கொண்டு தான் இருக்கிறதாம். படத்தில் சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் பவன், அந்த கிராமத்தில் வாழ்ந்து காதல் திருமணம் செய்துக்கொண்டதால், தற்போது வரை தான் எதிர்கொள்ளும் பிரச்சனையை தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் பவன் தனது நிஜ வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனை என்பதால் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மேக்னா எலன், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி, வெகுளித்தனமான வேடத்தில் வெளுத்து வாங்குவதோடு, மகன் செய்த துரோகத்தாலும், தண்டனை என்ற பெயரில் கிராம பஞ்சாயத்தால் ஏற்பட்ட அவமானத்தால் மனம் வருந்தும் காட்சியிலும் மனதை கனக்க வைக்கிறார்.
நாயகனின் தாத்தாவாக நடித்த அழகு, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, சேதுபதி ஜெயசந்திரன் என மற்ற வேடங்களில் நடித்தவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெ.பி.மேனின் இயல்பான ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பாடல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்க முயற்சித்திருக்கும் ஒளிப்பதிவாளர், காதல் பாடலை ஒரே அறையில் மிக நேர்த்தியாக படமாக்கி கவனம் ஈர்க்கிறார்.
மணி அமுதவன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.
பவன்.கே கதை, திரைக்கதை நம்ப முடியாத கிராமத்தின் கட்டுப்பாடுகளை வெட்ட வெளிச்சமாக்கியிறுக்கிறது.
கட்டுப்பாடும், சுயஒழுக்கமும் வாழ்க்கையில் மிக முக்கியம் தான் என்றாலும், அரிமாபட்டி கிராமத்தின் இத்தகைய கட்டுப்பாடு, ஒரு தனிமனிதனின் விருப்பத்தையும், அவன் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களையும் எப்படி சிதைக்கிறது என்பதை மிக தெளிவாக விவரித்திருக்கும் இயக்குநர் ரமேஷ் கந்தசாமி, சிறு கருவை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் படத்தை தொய்வில்லாமல் நகர்த்த அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். இருந்தாலும், ஒரே விசயத்தை திரும்ப திரும்ப பார்ப்பதால், சில இடங்களில் படம் சலிப்பு தட்டுகிறது.
இருந்தாலும், தற்போதைய நவீன காலத்தில் இப்படியும் ஒரு கிராமம் இருக்குமா? என்று ஆச்சரியத்தில் உரைய வைக்கும் அரிமாபட்டி கிராம மக்களின் அரியாமையுடன், அழகிய காதலை கலந்து நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ் கந்தசாமி.
மொத்தத்தில்,
.இந்த ‘அரிமாபட்டி சக்திவேல்’ சுவாரஸ்யமாக உள்ளது