நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டியின் இன்னொரு முகம்
உதவும் மனிதம் அமைப்பின் மூலம் உதவிக்கரம் நீட்டி வரும் பிளாக் பாண்டி
நான் ஒன்றும் அஜித் இல்லையே ; பிளாக் பாண்டியின் புதிய முகம்
நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டியின் மனிதநேய முயற்சிக்கு துணை நிற்கும் சமுத்திரக்கனி
வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு படத்தின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி. அதற்குமுன் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரது திறமையை வெளிக்கொண்டு வந்தது அங்காடித்தெரு திரைப்படம் தான். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் பிளாக் பாண்டி.

அதேசமயம் பிளாக் பாண்டிக்கு ரசிகர்கள் அறியாத இன்னொரு முகம் இருக்கிறது. அதுதான் மற்றவர்களுக்கு உதவும் முகம். ஆம்.. உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி கடந்த கஷ்டப்படும் பலருக்கும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார் பிளாக் பாண்டி.
இவரது அமைப்புக்கும் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து கைகொடுத்து வருகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. பிளாக் பாண்டிக்குள் இப்படி ஒரு எண்ணம் எப்படி தோன்றியது ? எப்போது தோன்றியது ?

“கடந்த 12 வருடங்களுக்கு முன்பே இதுபோன்று ஒரு அமைப்பை உருவாக்கி கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் தோன்றிவிட்டது. நான் நன்றாக வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு பிறகு மற்றவர்களுக்கு உதவி செய்யலாம் என்று அதை தள்ளிப்போட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு இயன்றதை செய்வோம் இணைந்து செய்வோம் என்கிற புதிய முயற்சியுடன் நல்ல மனிதர்களின் ஒத்துழைப்புடன் கடந்த இரண்டு வருடமாக இந்த உதவும் மனிதம் அமைப்பு மூலம் பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறோம்.
வாரந்தோறும் 250 பேர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறோம். இதற்கு இயக்குனர் சமுத்திரக்கனி பக்கபலமாக இருந்து ஆதரவு அளித்து வருகிறார். சமுத்திரக்கனி அண்ணனுடன் கடந்த 20 வருடங்களாக எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. நான் இது போன்ற ஒரு விஷயத்தை ஆரம்பித்துள்ளேன் என்பதை கேள்விப்பட்டு, என் நோக்கத்தை புரிந்துகொண்டு அவராகவே இதில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இப்போது இப்படி ஒரு அமைப்பை நடத்தி உதவி செய்து வருகிறோம் என்பதை வெளியில் சொல்வதற்கு கூட இதுபோன்று இன்னும் பலர் மனித நேயத்துடன் உதவி செய்ய கிளம்பி வருவார்கள் என்கிற காரணம் மட்டுமே அன்றி வேறு நோக்கம் எதுவும் இல்லை.
இந்த அமைப்பின் மூலம் பலருக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி ரத்த தானம் ஆகியவற்றை செய்து வருகிறோம். இன்னும் குறிப்பாக ஈமக்கிரியை கூட செய்ய வசதி இல்லாதவர்களுக்கு அதற்கான பணியை நாங்களே முன்னின்று செய்து கொடுக்கிறோம்.
என்னுடைய தாத்தா, டி.ஆர்.மகாலிங்கம் காலத்தில் அவருடன் நாடகங்களில் இணைந்து நடித்தவர். அப்போது தங்களது சக நடிகர்கள் மரணித்தால் அவர்களது இறுதிச் சடங்குகளை முன்னின்று தங்களது சொந்த செலவில் செய்து கொடுத்தவர். எனது தாத்தா, அதன்பிறகு எனது தந்தை என அப்படியே எனக்குள்ளும் அந்த விதை போடப்பட்டுவிட்டது.

இப்படி நாம் செய்யும் உதவிகளுக்கு விளம்பரம் தேவையில்லை என்றுதான் நினைத்தேன்.
என்னுடைய சொந்த செலவில் செய்யும் உதவிகளுக்கு என் முகத்தை கூட நான் காட்ட விரும்புவதில்லை. ஆனால் பல நல்ல உதவும் உள்ளங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை மற்றவருக்காக செலவிடும்போது அது நிச்சயம் வெளியே தெரிய வேண்டும்.
அப்போதுதான் இதுபோன்ற உதவும் எண்ணத்துடன் இன்னும் பலர் முன் வருவார்கள்.
திரையுலகில் உள்ள ஒரு சிலர் உனக்கு எதற்கு இந்த வேலை என என்னுடைய இந்த நோக்கத்தை கிண்டலாகவும் உற்சாகத்தை குறைக்கும் வகையிலும் என் முகத்திற்கு நேராகவே கேட்டார்கள். ஆனால் இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு தான் இந்த செயலில் இறங்கியுள்ளேன்.
கொரோனா காலகட்டத்திற்கு முன்பு துவக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் நாங்கள் உதவி செய்யத் துவங்கினோம் இதை பார்த்து இதுபோன்று 12 அமைப்புகள் மக்களுக்கு உதவி செய்வதற்காக களத்தில் இறங்கினோம் என்று என்னிடம் கூறியபோது சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோம் என்கிற மகிழ்ச்சி ஏற்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக மாணவர்களுக்கு கல்வி வசதி நிறைந்த குடும்பங்களில் ஒருவருக்காவது அந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை உணர்த்தும்விதமாக வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் செய்யும் வசதி இவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் பிளாக் பாண்டி