புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்
‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’, ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் ‘கார்த்திகேயா 2’ . இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வரும் ‘ஸ்பை’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்திய படைப்பாக தயாராகி வருவதால் இந்த படம் தமிழிலும் வெளியாகும். இதனைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேயா நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாதப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களை தவிர்த்து, மேலும் சில படங்களில் நடிகை ஐஸ்வர்யா மேனனை கதையின் நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சமூக வலைதள பக்கத்தில் தீவிரமாக இயங்கி வரும் இவர் தற்போது முன்னணி நட்சத்திர கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால், ஓய்வின்றி ஹைதராபாத் -சென்னை என பரபரப்பாகியிருக்கிறார். தமிழ் திரையுலகிலிருந்து பான் இந்திய நட்சத்திர நடிகையாக ஐஸ்வர்யா மேனன் உயர்ந்து, புதிய உச்சத்தை தொடுவார் என திரையுலகினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.







