கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் சாம்பியன் பட்டம் வென்று தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமானவர் நடிகர் டிஎஸ்கே. இதனைத் தொடர்ந்து ‘பெட்ரோமாக்ஸ்’ என்கிற படத்தின் மூலம் சினிமாவிலும் ஒரு நகைச்சுவை நடிகராக நுழைந்து கவனம் ஈர்த்தார்.



இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள டிஎஸ்கே, இதுவரை தனது பாணியாக இருந்த நகைச்சுவை நடிப்பிலிருந்து விலகி சற்று வில்லத்தனம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது.

அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ், விஜயகாந்த் ரசிகராக நடித்திருக்கிறார் என்பதால் படம் முழுவதிலும் விஜயகாந்தின் புகைப்படங்கள், போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளது மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் கேப்டன் விஜயகாந்தின் புகழ்பெற்ற பாடல்கள் ஒலிப்பது என புரட்சி கலைஞரின் புகழ் பாடும் படமாக இது அமைந்து விட்டது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்று மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்ற நடிகர் டிஎஸ்கே அங்கே அவருக்கு தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும் விஜயகாந்தின் மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் நேரில் சந்தித்தார் டிஎஸ்கே.
அப்போது ‘லப்பர் பந்து’ படத்தை தான் பார்த்ததாகவும் கேப்டனை பெருமைப்படுத்தும் விதமாக அந்த படத்தில் பல காட்சிகளை அமைத்திருந்ததாகவும் கூறிய பிரேமலதா விஜயகாந்த், படத்தில் டிஎஸ்கேவின் வில்லத்தனம் கலந்த நடிப்பு நன்றாக இருந்தது என்றும் இதேபோன்று பல நல்ல கதாபாத்திரங்களை ஏற்று திரை உலகில் மேலும் முன்னேற வேண்டும் என்றும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அப்போது டிஎஸ்கே கேப்டன் விஜயகாந்த் குறித்து பிரேமலதாவிடம் நினைவுகூறும்போது. “நான் சின்னத்திரையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குரலை மிமிக்ரி செய்து அதன் மூலமாக வாய்ப்பு பெற்று தான் இந்த அளவிற்கு உயர்ந்தேன். அவருடைய குரல் தான் எனக்கு சோறு போட்டது. இன்று அவரை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள படத்தில் நானும் ஒரு அங்கமாக இடம் பெற்றதன் மூலம் மீண்டும் எனக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்து வருகின்றன. இதுவும் அவரது ஆசீர்வாதம் தான்.
என் தந்தை இறந்துவிட்டாலும் அவர் ஏதோ வேறு ஒரு இடத்தில் உயிருடன் வாழ்ந்து வருகிறார் என்கிற நினைப்பில் தான் இருந்து வருகிறேன். அதேபோலதான் கேப்டன் விஜயகாந்த்தும் நம்மை விட்டு மறையவில்லை. எங்கோ ஒரு இடத்தில் இருந்து நம்மை எல்லாம் கவனித்து ஆசீர்வதித்து வருகிறார் என்று நான் நினைத்துக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் விஜயகாந்த் குறித்த தனது நினைவுகளை பிரேமலதா விஜயகாந்த்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் டிஎஸ்கே.

