‘அடியே’ பட குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா!!

Share the post

‘அடியே’ பட குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா

ஊடகத்திற்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘அடியே’ படக் குழு

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினரின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பிரபு, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், நாயகன் ஜீ.வி. பிரகாஷ் குமார், நாயகி கௌரி ஜி. கிஷன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பாளர் முத்தையன் ஆகிய படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் மகேந்திர பிரபு பேசுகையில், ” இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் ஒரு அழகான கதையை நேர்த்தியாக சொல்லி எங்களை அசத்தினார். திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு.. ரசிகர்கள் இதனை துல்லியமாக புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டது காரணம் என நம்புகிறேன்.

ஒரு நல்ல திரைப்படத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது. இதற்காக படத்தின் தயாரிப்பு நிலையிலிருந்து.. அனைத்து நிலையிலும் சிறந்த தரத்தை உருவாக்கினோம். மேலும் இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம். அந்த வகையில் இந்த படத்தை தற்போது மலேசியா, ஐக்கிய அரபு குடியரசு நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் வெளியிட்டிருக்கிறோம். அங்கும் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் எங்கள் நிறுவனத்திற்கு சர்வதேச அளவிற்கு தரமான படைப்புகளை தயாரிக்கும் நிறுவனம் என்ற அடையாளம் கிடைத்திருக்கிறது. எங்களுடைய இலக்கில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என கருதுகிறோம். இதற்கு துணையாக நின்ற பட குழுவினருக்கும், ஊடகத்தினருக்கும், ஆதரவளித்த ரசிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் ‘டா டா ‘ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் பாபு இயக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான விரைவில் வெளியாகும்.” என்றார்.

நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில், ” இந்த அடியே திரைப்படத்திற்கு தொடக்க நிலையிலிருந்து ஊடகங்கள் பேராதரவு அளித்து வருகிறது. அதற்கு முதலில் நன்றி. செந்தாழினி – என் வயதுக்கு மீறிய கதாபாத்திரம். அதில் நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தொடர்பு கொள்ளும்போது எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு சவாலான கதாபாத்திரம் தான் என நம்பினேன்.

ஜானு என்ற கதாபாத்திரத்திற்கு பிறகு அதைவிட அழுத்தமான செந்தாழினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். செந்தாழினி என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம். எனக்கு பிடித்த வேடமும் கூட. சில படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருப்போம். ஆனால் எனக்கு இந்த படத்தில் பல வெர்சன்ஸ் இருந்தது. ஒரு கலைஞராக இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலானதாக இருந்தது. கதை ஓட்டத்தின் போது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

சமூக வலைதளத்தில் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘ஜானுவை மறக்கடித்து விட்டீர்கள்’ என பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இந்தப் படத்தை தயாரித்த மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. அவர்களின் தயாரிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் ‘போட்’ எனும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் படைப்பு கற்பனையும், காட்சி கற்பனையும் தான் அடியே. அவர் எப்போதும் வித்தியாசமான சிந்தனையாளர். அவருடன் இணைந்து மற்றொரு படைப்பிலும் பணியாற்றி இருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஜீ. வி. பிரகாஷ் குமார் இந்த படத்தில் அர்ஜுன், ஜீவா என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நன்றாக நடித்த சக நடிகர். படப்பிடிப்புக்கு பிறகு தற்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.

ஆல்டர்நேட்டிவ் ரியாலிட்டி என்பதனை ஒரு படைப்பாளி யோசிக்க முடியும். ஆனால் அதை திரையில் காட்சிகளாக காண்பிப்பது கடினமானது. அதனை எளிதாக்கிய ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்க்கும் என்னுடைய நன்றி.

‘அடியே’ திரைப்படம் தற்போது நான்காவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி வெற்றி பெறும் என நம்புகிறேன்.” என்றார்.

படத்தின் நாயகன் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ” முதலில் ஊடகத்தினருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சியை திரையிட்ட பிறகு நேர் நிலையான விமர்சனங்கள் வெளியாகி, சமூக ஊடகங்கள் மூலமாக மக்களைச் சென்றடைந்தது.

இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போதுள்ள சூழலில் முதலீடு செய்து திரைப்படத்தை தயாரித்து, திரையரங்குகளில் வெளியிட்டு, அதில் வெற்றி பெற்று, அதன் ஊடாக லாபத்தை காண்பது என்பது அரிதானது. அந்த வகையில் இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய நடிப்பில் வெளிவந்த ‘பேச்சுலர்’, ‘செல்ஃபி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘அடியே’ திரைப்படமும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்திருக்கிறது.

ஒரு படத்தில் நடிக்கிறோம். தயாரிப்பாளர் முதலீடு செய்கிறார். அதில் அவர் லாபம் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சி இருக்கும். அப்போதுதான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இந்த திரைப்படம் வசூலில் வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

நடிப்பை பொறுத்தவரை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் வழிகாட்டுதல் தான் காரணம். படத்தை பார்த்த ரசிகர்கள் ஏராளமானவர்கள் எனது நடிப்பை பாராட்டினார்கள். இவை அனைத்தும் இயக்குநரைத்தான் சாரும்.

படத்தின் ஒளிப்பதிவு பிரமாதம். படம் வெளியான பிறகு, பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ்ஸாக பயன்படுத்துகிறார்கள்.

இப்படத்தின் படத்தொகுப்பு வித்தியாசமாக இருந்ததாக அனைவரும் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதற்காகவும் அறிமுக படத்தொகுப்பாளர் முத்தையனை பாராட்டுகிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், ” முதலில் வித்தியாசமான ஒரு கதையை சொல்கிறோம் என்றால்.. அதை படமாக்க துணிச்சல் வேண்டும். திரைப்படத் துறையைப் பொறுத்தவரை ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என ஏராளமான சென்டர்கள் இருக்கிறது. எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் நாம் சொல்லும் விசயம் புரிய வேண்டும். சிலருக்கு கதை புரியாமல் போய்விடுமோ..? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், அதன் தயாரிப்பாளருக்கும், இந்த கதையை தேர்வு செய்து படமாக உருவாக்கலாம் என்று தீர்மானித்ததற்கும் முதலில் நன்றி.

வித்தியாசமான கதையை புரிந்து கொண்டு நடிக்க ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர் வேண்டும். அந்த வகையில் இந்த கதையை நம்பி நடிக்க ஒப்புக்கொண்ட சகோதரர் ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கு நன்றி. ‌ இந்தப் படத்தில் நடித்த நடிகை கௌரி கிஷன், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

இந்தப் படம் வெளியாகும் போது ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நன்றாக வசூலித்துக் கொண்டிருந்தது. அப்படியொரு சூழலில் இந்த திரைப்படத்தை காண மக்கள் திரையரங்கத்திற்கு வருவார்களா..! என்ற கேள்வியும் இருந்தது. இது தொடர்பான பயமும், குழப்பமும் படக்குழுவினருக்கும் இருந்தது. இவற்றையெல்லாம் கடந்து மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்திற்கு பேராதரவு அளித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது தொடர்ந்து நான்காவது வாரமும் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.‌

திரைப்படத்தில் சில விசயங்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ..! என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதுண்டு. அதனை வரும் படைப்புகளில் சரி செய்து கொள்வேன்.

ஊடகங்களில் வெளியான நேர் நிலையான விமர்சனங்களால் தான் ஜெயிலர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும்… ‘அடியே’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்தார்கள்.‌ இதனால் ஊடகத்தினருக்கு என்னுடைய நெஞ்சில் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் ரசிகர்களால் சரியான வகையில் புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால்.. இனி நாமும் வழக்கமான சினிமாவை இயக்கலாம் என தீர்மானித்திருப்பேன். ஆனால் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் நன்றாக அனுபவித்து உற்சாகமாக கொண்டாடினர். இதை பார்த்த பிறகு தான்.. இனி தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அடுத்து உருவாகும் திரைப்படமும் வித்தியாசமான கதைக்களம் தான்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *