ஆதிபுருஷ் திரை விமர்சனம்
’ராமாயணம்’ என்ற சிறப்புமிக்க இதிகாசத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ ரசிகர்களை கவரவில்லை
தன் மனைவி சீதை (கிருத்தி சனோன்) தம்பி லட்சுமணனுடன் (சன்னி சிங்) 14 ஆண்டுகள் வனவாசம் செல்கிறார் ராமர் (பிரபாஸ்)தங்கை சூர்ப்பனகையின் காதலை ஏற்க மறுத்து அவரது மூக்கை அறுத்த ராமனை பழிவாங்கும் பொருட்டு முனிவராக மாறுவேடம் பூண்டு சீதையை கடத்திச் சென்றுவிடுகிறார் இலங்கை அரசனான ராவணன் (சைஃப் அலி கான்) சுக்கிரீவனின் வானரப் படை மற்றும் அனுமனின் (தேவ்தத்தா நாகே) உதவியுடன் இலங்கைக்குச் செல்லும் ராமர், சீதையை எப்படி மீட்டார் என்பதே ‘ஆதிபுருஷ்’ படத்தின் கதை
இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் ராமாயணம் குறித்து தெரியாமல் இருக்க முடியாது வாய்வழிக் கதைகள், புத்தகங்கள், சீரியல்கள், திரைப்படங்கள் என ஏதோ ஒருவகையில் சிறுவயது முதல் நமக்கு இந்த கதை பரிச்சயமாகியிருக்கும்
அப்படி சிறப்பு மிகுந்த ஒரு கதைக்களத்தை கையில் எடுத்துக் கொண்ட இயக்குநர் ஓம் ராவத் அதே சிறப்புடன் அதனை திரையில் காட்சிப்படுத்தியுள்ளாரா என்றால் இல்லை என்பதே பதிலாகும்
முதல் டீசரிலேயே ‘ஆதிபுருஷ்’ அளவுக்கு வேறு எந்த திரைப்படமும் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே
அந்த அளவுக்கு மோசமான கிராபிக்ஸ் அதில் இடம்பெற்றிருந்தது அதன்பிறகு உஷாரான படக்குழு கூடுதலாக 100 கோடி செலவு செய்து கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்தியதாக கூறப்பட்டது ஆனால் படத்தின் அனிமேஷனில் எந்தவொரு முன்னேற்றமும் தெரியவில்லை ஏறக்குறைய 500 கோடி பட்ஜெட்டில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் படத்தின் அனிமேஷன் இந்தி சீரியல்களில் வரும் கிராபிக்ஸுக்கு ஒப்பாக இருக்கிறது
கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் இந்தியப் படங்களால் ஏன் இன்னும் ஒரு சாதாரண ஹாலிவுட் அனிமேஷன் படத்தில் இருக்கும் தரத்தை கூட எட்டமுடியவில்லை என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது
குறிப்பாக படத்தின் அறிமுகக் காட்சியில் வரும் சண்டை சுக்கிரீவன் – வாலி இடையிலான சண்டை ராவணன் ஒரு ராட்சத வவ்வாலில் அமர்ந்து வரும் காட்சி ராமர் பாலம் உருவாகும் காட்சி சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வருவது உள்ளிட்ட பிரம்மாண்டமாக வந்திருக்க வேண்டிய காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் பல்லிளிக்கிறது
படம் 3டியில் வெளியாகியிருப்பதால் மட்டுமே வீடியோ கேம் போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை ஓரளவு சகிக்க முடிகிறது
ஹாலிவுட்டில் வெளியான ‘ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஆப்ஸ்’ படத்திலிருந்து அப்பட்டமாக சில காட்சிகளை உருவி அதனை பட்டி டிங்கரிங் பார்த்து படத்தில் வைத்திருக்கிறார்கள்இதனை டீசர் வெளியானபோது பலரும் சுட்டிக் காட்டினர்
ஆனாலும் அதனை மாற்றாமல் அப்படியே வைத்திருப்பது அப்பட்டமான உழைப்பு திருட்டு
ராமராக பிரபாஸ் அவரது கடா மீசையும் முரட்டுத்தனமான தோற்றமும் சுத்தமாக இந்த கதாபாத்திரத்துக்கு ஒட்டவில்லை திரையில் இதுவரை நாம பார்த்துப் பழகிய ராமர் மிகவும் சாந்தமானவராகவும், மீசை இல்லாதவராகவும் இருந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்அவரது நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை
படம் முழுக்க முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் வந்து செல்கிறார் எமோஷனல் காட்சிகள் ஆக்ஷன் காட்சிகள் என எல்லாவற்றிலும் ஒரே போன்ற நடிப்பு
ராவணனாக சைஃப் அலி கான் தான் ஒரு அசுரன் என்பதை நிறுவ காலை அகட்டி அகட்டி நடப்பதும் கரகர குரலில் பேசுவதும் ஆரம்பத்தில் ஓரளவு ரசிக்க வைத்தாலும் படம் முழுக்க அதையே செய்து கொண்டிருப்பது எரிச்சலை தருகிறது சீதையாக நடித்திருக்கும் கீர்த்தி சனோன் மட்டுமே குறை சொல்லமுடியாத நடிப்பை வழங்கி ஸ்கோர் செய்கிறார்
ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் அதை திரைக்கதையாக எழுதும்போது பார்வையாளர்களை மூன்று மணி நேரம் கட்டிப் போடும் வகையில் ஜாலம் செய்திருக்க வேண்டாமா? எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் வெளியான ‘திருவிளையாடல்’, ’கந்தன் கருணை’, ‘கர்ணன்’, தமிழிலும் தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த ‘சம்பூர்ண ராமாயணம்’ போன்ற திரைப்படங்களை இப்போதும் உட்கார்ந்து பார்க்கமுடிகிறதே? படத்தின் தொடக்கத்தில் வரும் சண்டைக் காட்சியே படுசலிப்பை ஏற்படுத்துகிறது
அதன் பிறகு ராவணனுக்கு ஒரு பாடல் அதன் பிறகு ராமர் – சீதைக்கு ஒரு பாடல் என முதல் அரை மணி நேரத்திலேயே மூன்று பாடல்கள் கதை ஒரு யுத்தத்தை நோக்கித்தான் நகர்கிறதென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? பார்ப்பவர்களை எப்போது ராமனும் ராவணனும் மோதிக் கொள்வார்கள்? போர்க் காட்சிகள் எப்போதும் வரும் என்று பதைபதைக்கச் செய்திருக்க வேண்டும்
ஆனால் சுவாரஸ்யம் இல்லாத தொய்வான காட்சியமைப்புகளால் பார்ப்பவர்கள் மத்தியில் ஒரு சின்ன சலனம் கூட ஏற்படவில்லை இப்படத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து100 எபிசோட்களாக பிரித்து இந்தியில் சீரியலாக வெளியிட்டிருந்தால் ஒருவேளை கவர்ந்திருக்கலாம்
படத்தில் உள்ள படு அபத்தமான மற்றொரு அம்சம் ஆடை அலங்காரம் எந்த நிலப்பரப்பில் எந்த காலகட்டத்தில் எப்படியான ஆடைகளை அணிந்திருப்பார்கள் என்ற ஒரு சின்ன ஆய்வு கூட செய்யத் தோன்றவில்லை? ராவணனும் அவரது அரசவையில் இருப்பவர்களும் பழங்கால கிரேக்க மன்னர்களைப் போன்ற உடைகளை படம் முழுக்க அணிந்து வருகிறார்கள் அதிலும் ஸ்டெப் கட்டிங் தாடி ட்ரிம்மிங் செய்த ராவணனை இதுவரை எந்த வடிவத்திலும் நாம் பார்த்திருக்க முடியாது
படத்தின் ஒரே மிகப்பெரிய ஆறுதல் இசை சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாராவின் பின்னணி இசை படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்த முயல்கிறது
அஜய்-அதுல், சாசெட்–பரம்பராவின் இசையில் ‘ராம சீதா ராம்’ பாடலும் ’ஞாழல் மலரே’ பாடலும் மனதை வருடுகின்றன படம் முழுக்க வரும் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்ற தீம் இசை சிறப்பு
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இதிகாசத்தை திரைப்படமாக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் மட்டும் போதாது அதனை திரையில் கொண்டு வரும்போது திரைக்கதையில் கொஞ்சமேனும் மெனக்கெட வேண்டும் அது ‘ஆதிபுருஷ்’ படத்தில் முற்றிலுமாக மிஸ்ஸிங்
எந்தவித சுவாரஸ்யமும் இல்லாத பலவீனமான காட்சியமைப்புகள் நிரம்பிய ஒரு திரைக்கதையை மோஷன் கேப்சர் என்ற ஜிகினாவைப் பூசி விற்க முயன்றுள்ளது ‘ஆதிபுருஷ்’ படக்குழு
ஆதி புருஷ் மூன்று மணி நேர முப்பரிமாண சித்ரவதை