சீரியலில் களமிறங்கும் நடிகை சோனா !
கவர்ச்சி, காமெடி, குணசித்திரம் என கலந்து கட்டிய நடிப்பில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை சோனா. துணிவான பேச்சு, எதிலும் முன்னணியில் நிற்கும் தைரியம், சொந்த பிஸினஸ் என பல பெண்களுக்கு முன்னுதரணமாக திகழ்பவர். காமெடி கதாப்பாத்திரங்களில் இருந்து மாறுபட்டு படங்களில் துணிவான பாத்திரங்களில் கலக்கி வருபவர் தற்போது Colours Tv க்காக “அபி டெய்லர்ஸ்” சீரியலில் முன்னணி பாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.
இது குறித்து நடிகை சோனா கூறியதாவது…
சினிமா தான் எனக்கு அடையாளம் தந்தது. சினிமா தான் என் வாழ்க்கை. தொலைக்காட்சியில் இருந்து பல வருடங்களாகவே வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் அதில் மனதிற்கு பிடித்த மாதிரியான பாத்திரம் அமையாததால், எதையும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் “அபி டெய்லர்ஸ்” வாய்ப்பை மறுக்க முடியவில்லை. இதில் நாயகன், நாயகி மற்றும் என்னுடைய பாத்திரத்தை வைத்து தான் மொத்த கதையும் நகர்கிறது. மிகவும் வித்தியாசமான பாத்திரம். மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. தமிழில் ஆரம்பத்தில் கவர்ச்சி கதாப்பத்திரங்களில் நடித்ததால் இப்போது வரையிலும் கவரர்ச்சி கதாப்பத்திரங்கள் தான் அதிகம் வருகிறது. மலையாளத்தில் அப்படி இல்லை அங்கு வில்லி, குணசித்திரம், நகைச்சுவை என மாறுப்பட்ட பாத்திரங்கள் செய்து விட்டேன். அதே போல் தமிழிலும் செய்ய வேண்டுமென்பது தான் என் விருப்பம். இப்போது தான் கொஞ்சம் மாறுப்பட்ட கதாப்பாத்திரங்கள் வர துவங்கியுள்ளது. “அபி டெய்லர்ஸ்” சீரியலை “வாலிப ராஜா” படத்தை இயக்கிய சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார். படத்தில் வேலை பார்த்த குழு தான் இந்த சீரியலிலும் வேலை செய்கிறார்கள். இது ஒரு சீரியல் போல இருக்காது படம் போல தான் இருக்கும். இந்த கதாப்பாத்திரம் செய்ய அதுவும் ஒரு முக்கிய காரணம். நிஜத்தில் நான் ரொம்பவும் எளிமையாக ஜாலியாக இருக்கும் ஆள், ஆனால் எனது கதாப்பத்திரம் மிகவும் அழுத்தமிக்க தைரியமான பிஸினஸ்
வுமன் பாத்திரம் என்னுடைய இயல்புக்கு நேரெதிரானது. என்னால் எல்லா வகை பாத்திரமும் செய்ய முடியும் என்பது இதன் மூலம் நிரூபணமாகும் என நம்புகிறேன்.
சீரியலுக்கு போய் விட்டேன் என்பார்கள் ஆனால் இதுவும் ஒரு நடிப்பிற்கான வாய்ப்பு தான். சினிமா தான் என் வாழ்க்கை இப்போதும் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் மூன்று படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் இருப்பேன் அதில் எந்த மாற்றமுமில்லை. மாறுபட்ட கதாப்பத்திரங்களுக்காக காத்திருக்கிறேன் என்றார்.
தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கும் Metoo, பாலியல் குற்ற வழக்குகள் குறித்து கருத்து கேட்ட போது…
பாலியல் குற்றங்கள் எல்லா துறையிலும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது பாருங்கள் பள்ளியில் இருந்தும் இது போல் குற்றசாட்டுகள் வந்திருக்கிறது. பாலியல் குற்றங்கள் எங்கு நடந்தாலும் அதற்கான முறையான விசாரணையும், தண்டனையும் அவசியம். திரைத்துறையை பொறுத்த வரை, தனித்து குற்றம் சொல்ல முடியாது சில வருடங்களுக்கு முன் எனக்கும் அது போல் நடந்தது. அப்போதே அதை வெளிப்படையாக சொல்லி போராடினேன். நமக்கான உரிமைக்கு நாம் தான் போராட வேண்டும். அதற்காக அதை கடந்து செல்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பது நல்லதல்ல. உங்களுக்கு நடந்தால் அதை வெளிப்படுத்துங்கள் உங்கள் உரிமைக்கு குரல் கொடுங்கள் மக்களுக்கு தெரியும். எதுவும் நடக்கவில்லையெனில் அதை கடந்து செல்லுங்கள் வாழ்க்கை பெரியது. எனக்கு நடந்ததை கடந்து வந்து விட்டேன் அது தான் நல்லது என்றார்.
நேற்று எனது பிறந்த நாள். பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.