‘பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்
சரியான கதாப்பாத்திரங்களின் தேர்வு மற்றும் சிறந்த நடிப்பைக் கொடுக்க நிபந்தனையற்ற முயற்சிகள் என இவை அனைத்தும் நடிகை ப்ரியா பவானி சங்கரை தென்னிந்தியத் திரையுலகில் அதிக டிமாண்ட் கொண்ட நடிகையாக மாற்றியுள்ளது. மார்ச் 30, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராகி வரும் ‘பத்து தல’ படத்திற்காக இண்டஸ்ட்ரியில் சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவுடன் வேலை பார்த்த அனுபவம் குறித்து உற்சாகமாக பேசி இருக்கிறார் ப்ரியா.
இது குறித்து நடிகை ப்ரியா பவானி சங்கர் கூறும்போது, “ஒரு நடிகைக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அதிகம் நடிப்பதை விடவும் சவாலான கதாபாத்திரங்கள் சிலது கிடைப்பது சிறந்த ஒன்றுதான். அது கனவு நனவாகும் ஒரு தருணம். இயக்குநர் கிருஷ்ணா சார் தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலுவான ஒன்றாக இருக்கும்படியே அமைப்பார். அந்த வகையில், அவருடைய ‘பத்து தல’ படத்தில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோர் மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளனர். கௌதம் கார்த்திக்குடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞர். தன்னுடைய நடிப்பில் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். சிலம்பரசன் சாரின் தோற்றமும் நடிப்பும் எப்போதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியது. இந்தப் படத்தில் ஒவ்வொரு ஷாட் மீதும் அவரது அதீத அர்ப்பணிப்பு படம் பார்க்கும்போது தெரிய வரும். ஒவ்வொரு நடிகரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. ஒவ்வொரு பிரேமும் மிகவும் கச்சிதமாக இருப்பதை உழைப்பைக் கொடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசையைக் கேட்டு வளர்ந்த நான், அவருடைய இசையமைப்பிலேயே திரையில் வருகிறேன் என்பது எனக்கு மிகவும் எமோஷனலான மற்றும் மகிழ்ச்சியான தருணம். குடும்பப் பார்வையாளர்களின் ரசனையை நிச்சயம் திருப்திப்படுத்தும் வகையில் பல எமோஷன்கள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என கமர்ஷியலான விஷயங்களை ‘பத்து தல’ கொண்டுள்ளது”.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் படம் ‘பத்து தல’. சிலம்பரசன் டிஆர், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே அருணாசலம், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகவும் மிலன் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.