
‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் நடிகர் சூர்யா!
இயக்குனர் மற்றும் நடிகர் K.S.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். இந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’ மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘கூகுள் குட்டப்பா’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

குடும்பப்பாங்கான, உணர்ச்சிகரமான படங்களை இயக்குவதற்கு பெயர்போன இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.இயக்குனர்கள் சூர்ய கதிர், K.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் K.S.ரவிக்குமார், கௌதம் மேனன், சமுத்திரக்கனி,ஸ்மிரிதி வெங்கட்,ஐஸ்வர்யா தத்தா,அபி நக்ஷத்ரா,அபிநயா,சித்தாரா, முனீஸ்காந்த்,ரெடின் கிங்ஸ்லி,’கே.ஜி.எஃப்’ புகழ் ‘கருடா’ராமச்சந்திரா,’மைம்’கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்


இத்திரைப்படத்திற்கு ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் C.சத்யா இசையமைக்க, ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஜான் ஆபிரகாம் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண் சங்கர் துரை கவனிக்கிறார்.சண்டைப் பயிற்சியை விக்கி மற்றும் ஃபீனிக்ஸ் பிரபு கவனிக்க, பாரதிராஜா தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றுகிறார்.
இத்திரைப்படத்தின் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
நடிகர் சூர்யா அவர்கள் இயக்குனர் விக்ரமனுடன் ‘உன்னை நினைத்து’ திரைப்படத்திலும், இயக்குனர் K.S.ரவிக்குமாருடன் ‘ஆதவன்’ திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றினார். அந்த நட்புக்காக இத்திரைப்படத்தின் ‘ஐ ஆம் தி டேஞ்ஜர்’ என்ற முதல் பாடலை அவர் இன்று வெளியிட்டார்.
இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் காதல்,நகைச்சுவை மற்றும் அதிரடியான காட்சிகள் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது.