பன்முக ஊடக ஆளுமையான ரம்யா, ஊடகங்கள் மற்றும் ஆரோக்கிய உடற்பயிற்சி அரங்கில் தனது பாராட்டுக்குரிய பயணத்திற்காக மில்லியன் கணக்கானவர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். முதன்முறையாக, அவர் தனது முதல் புத்தகமான ‘ஸ்டாப் வெயிட்டிங்’ மூலம் ஒரு எழுத்தாளராக தனது புதிய அவதாரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அவர் எப்படி தன் ஆரோக்கியம் குறித்தான கட்டுபாட்டை கையில் எடுத்து சரியான வாழ்க்கை முறையாக அதை மாற்றியுள்ளார் எனவும் அதில் அவரது நம்பிக்கைகள், அவரது கதைகள், அவர் செய்த தவறுகள் என நேர்மறையான வகையில் வாசகர்கள் எளிதில் கனெக்ட் செய்து கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்துள்ளது. சரியான டயட் உணவு முறைகள் மற்றும் அன்றாடம் நம்முடைய வாழ்க்கைமுறையில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்வதன் மூலம் எப்படி நாம் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது பற்றியும் இந்த புத்தகம் விவரிக்கிறது.
‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகம் சென்னை சர்வதேச புத்தகத் திருவிழா 2023-ல் திரையுலகில் முக்கிய பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் புத்தக விரும்பிகள் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
நடிகர் கார்த்தி பேசும்போது, “நானும் ரம்யாவும் பத்து வருட நண்பர்கள். சுஹாசினி மேம் சொன்னது போல ரம்யா எப்போதும் பாசிட்டிவான நபர். இன்றைய தேதியில் ஃபிட்னஸ் என்பது மிகப்பெரிய பிசினஸாக மாறிவிட்டது. பலரும் தனித்தனியாக டயட்டீஷியன், ஹெல்த் எக்ஸ்பர்ட்ஸ் & ஜிம் ட்ரெய்னர்களை வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை ஒட்டி மக்களை இன்ஃபுளூயன்ஸ் செய்வது எனக்கு சிறிது வருத்தமே. நம் நாடுகளில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு நம் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். அந்த வகையில் ரம்யா இந்த புத்தகத்தில் சிறந்தவற்றை கொடுத்துள்ளார். கடந்த ஐந்து வருடத்தில் ரம்யாவின் மாற்றங்களை கவனித்தே வருகிறேன். இப்போது அவர் ‘Iron Lady’ ஆக உள்ளார். ஒரே இரவில் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகம் உருவாகிவிடவில்லை. பல கற்றல், தோல்விகளுக்கு பின்பே இது உருவாகி இருக்கிறது. பலரை குறிப்பாக பெண்களையும் அவர்களது வாழ்க்கை முறையை சரியான வகையில் அவர் இந்த புத்தகத்தின் மூலம் இன்ஃபுளூயன்ஸ் செய்யவுள்ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது”.
நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசியதாவது, ” ரம்யாவின் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகத்தை படித்ததும் எனக்கு உடனே பிடித்த விஷயம் என்றால் அதன் உண்மைத்தன்மையும் எளிமையும்தான். இதுபோன்ற புத்தகத்தில், எழுத்தாளர்கள் தங்களை மேம்படுத்தியே சொல்வார்கள். ஆனால், தனது குறைகள், தோல்விகள், அதில் இருந்து கற்றுக் கொண்டது என அனைத்தையும் ரம்யா வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். என்னைப் போலவே வாசகர்களும் எளிதில் கனெக்ட் செய்து கொள்வார்கள் என நம்புகிறேன். விரைவில் ரம்யா தமிழிலும் எழுத ஆரம்பிக்க வேண்டும். அவருடைய அனைத்துத் திட்டங்களும் வெற்றியடைய எனது வாழ்த்துகள் “.
நடிகையும் எழுத்தாளருமான ரம்யா பேசியதாவது, ” இந்த நிகழ்ச்சி எனக்கு புதிதாக இருக்கிறது. உங்கள் அனைவருடைய அன்பையும் ஆதரவையும் பெற நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவே உணர்கிறேன். நான் நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறேன். இதில் என்னைப் பற்றியும் என் புத்தகத்தையும் பற்றியும் பேச அனைவரும் வந்திருக்கிறார்கள். என்னுடைய 17 வயதில் இருந்தே சுஹாசினி மேடம் எனக்குத் தெரியும். அவர் எனக்கு அம்மா போல. அவர் இங்கு இருப்பது மகிழ்ச்சி. அவருக்கு உடல்நல குறைவு இருந்த போதும் எனக்காக இங்கு வந்திருக்கிறார். இங்கு வந்திருக்கும் கார்த்திக்கும் நன்றி. மீடியா நண்பர்கள், என்னுடைய நண்பர்கள், வெல் விஷ்ஷர்ஸ் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக என்னுடைய கனவுகளுக்கும் பார்வைக்கும் ஆதரவு கொடுத்த என்னுடைய பெற்றோர் சகோதரருக்கும் நன்றி. மணிரத்னம் சார், விஜய் சார், சமந்தா, துல்கர் சல்மான், மாதவன், கிரிக்கெட்டர் அஷ்வின் ரவிச்சந்திரன், நடிகை நஸ்ரியா மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நான் எழுத்தாளராக அறிமுகமானபோது ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் இதயப்பூர்வ நன்றி. இது எப்போதும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்” என்றார்.