நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Share the post

நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.

இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, “’லக்கி பாஸ்கர்’ படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சினிமாத் துறையில் மிகப்பெரிய கம்பெனி. இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றது போலவும் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. லக் என்றால் அதிர்ஷ்டம். நாம் ஒரு விஷயத்திற்கு தயாராக இருக்கும்போது வரும் வாய்ப்புதான் அதிர்ஷ்டம் என்போம். துல்கர் திறமையான நடிகர். அப்பா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நம்மிடம் எளிமையாகப் பழகுவார். பழைய பாம்பேவை நம் கண் முன்னே செட் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெங்கி அட்லூரி அதட்டாமல் எல்லோரிடமும் அமைதியாக வேலை வாங்கி படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். மீனாட்சி செளத்ரி அழகோடு சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். இந்தப் படமும் ரூ.100 கோடி வசூலைப் பெற்று எல்லோருக்கும் ‘லக்கி’யாக அமைய வாழ்த்துக்கள். தீபாவளிக்கு குடும்பத்தோடு இந்தப் படம் பாருங்கள்!”.

இயக்குநர் வெங்கி அட்லூரி, “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், ‘வாத்தி’ படம் முடித்ததும் அதில் இருந்து வித்தியாசமாக எதாவது படம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கிரே ஷேட் கேரக்டரில் என் ஹீரோவை கொண்டு வர நினைத்து செய்ததுதான் ‘லக்கி பாஸ்கர்’. என் கனவின் மீது நம்பிக்கை வைத்து படம் தயாரித்துக் கொடுத்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸூக்கு நன்றி. படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’ படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அதில் ரஜினி வசனமே இல்லாமல் மாஸான பின்னணி இசையோடு நடந்து வருவதும், ‘கூட்டி கழிச்சு பாரு கணக்கு கரெக்ட்டா இருக்கும்’ என பன்ச் வசனமும் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதை மனதில் வைத்தும் இந்தக் கதையில் சில ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டு வர முயன்றேன். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திலும் சிறப்பான இசையும் பாடல்களும் கொடுத்துள்ளார். இந்திய சினிமாவில் வங்கியை மையப்படுத்தி குறைவான படங்களே வந்திருக்கும். அதில், ‘லக்கி பாஸ்கர்’ படமும் ஒன்று. படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

நடிகர் துல்கர் சல்மான் பேசியதாவது, “நீண்ட இடைவேளைக்குப் பிறகு என் படம் ‘லக்கி பாஸ்கர்’ வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பாஸ்கர் கேரக்டர் எல்லோருக்கும் கனெக்ட் ஆகும். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் பாஸ்கர் என்பதால் அதை சுற்றி கதை இருக்கும். இப்போது என் உடல்நிலை சரியாகி இருப்பதால் இந்தப் படத்திற்கும் டப்பிங் கொடுத்திருக்கிறேன். ரிலீஸின் போது நிச்சயம் படத்தில் என் குரல் இருக்கும். ராம்கி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. இரண்டு வருடங்களாக வெங்கியுடன் பணிபுரிந்திருக்கிறேன். இப்போது வெங்கி என்னுடைய பிரதர். பாஸ்கர் வாழ்க்கையில் முக்கியமான பங்கு மீனாட்சி செளத்ரிக்கு உண்டு. படம் முழுக்க வருகிறார். எனது மகனாக ரித்விக் நடித்திருக்கிறார். இந்த வயதில் மிகவும் திறமையான நடிகராக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் படம் என்பதால் என் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’, ‘ப்ளெடி பெக்கர்’ படங்களும் வருகிறது. இதில் ‘லக்கி பாஸ்கர்’ படமும் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *