பட்ஜெட் படங்களில் ஒரு முன்னுதாரணம்’ ட்ரீம் கேர்ள்’!

Share the post

பட்ஜெட் படங்களில் ஒரு முன்னுதாரணம்’ ட்ரீம் கேர்ள்’!

திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் தயாரிப்பாளரைத் தேடவில்லை: ‘ட்ரீம் கேர்ள்’ இயக்குநர் எம். ஆர். பாரதி!

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’.

ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி ஆக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சாலமன் போவாஸ் ,இசை இளமாறன்,வசனம் ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம்,எம். டி .தமிழரசன்,தயாரிப்பு வடிவமைப்பு எஸ் .ரதி,
திரைக்கதை எம்.டி. தமிழரசன் கிருத்திகா தாஸ்,எடிட்டிங் எஸ். பி .அஹமத், இணை இயக்கம் எம்.பொன் புவனேஸ்வரன்.

இப்படத்தில் என் .காவேரி மாணிக்கம் டாக்டர் ஆர். குணசேகரன் B. ஆதித்யன் இணைத் தயாரிப்பாளர்களாகப் பங்கெடுத்துள்ளனர்.
மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.

படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது,
” இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு.
இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் மகிழ்ச்சியின் சொட்டுகளை வீணடிக்காமல் ரசிப்பவர்கள்.

நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் அந்த இருவரும் இருக்கிறார்கள்.அவர்களுக்குள் காதல் வருகிறது.
கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு கனவும் வருகிறது.அது சில மாயங்களைச் செய்கிறது.அதன் வர்ணஜால விளைவுகளைச் சொல்வதுதான்
‘ட்ரீம் கேர்ள்’ படம்.
இது மசாலா கலப்பில்லாத ஒரு முழுமையான காதல் கதை.படத்தில் வில்லனே கிடையாது வேண்டுமானால் கனவு தான் வில்லன் என்று கூறலாம்.

கதையிலும் குளிர்ச்சி இருப்பதால் இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே நடத்த திட்டமிட்டேன். அதன்படியே நடைபெற்றுள்ளது “என்கிறார்.

படப்பிடிப்பு அனுபவத்தைக் கேட்டபோது,
“இது 20 நாட்களில் முழுப் படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்ட படம்.’சில்ட்ரன் ஆப் ஹெவன்’ மிகக்குறைந்த நாளில் எடுக்கப்பட்ட படம்.ஆறு – ஏழு லட்சத்தில் முடிந்த படம். பெரிய படமான ‘ப்ரேவ் ஹார்ட் ‘கூட 80 கால்ஷீட்டில் முடிக்கப்பட்ட படம் என்றால் நம்ப முடியாது அல்லவா?

இன்று வருகிற மிகச் சாதாரண படங்களுக்குக் கூட 60 நாட்கள் 70 நாட்கள் என்று படப்பிடிப்பு நடைபெறுகின்றன. ஒரு கோடி இரண்டு கோடி என்று செலவு செய்கிறார்கள்.

இது மிகவும் தவறான போக்கு சரியான திட்டமிடல் இல்லாதது, சினிமாவைப் புரிந்து கொள்ளாதது , தொழில்நுட்பங்களைக் கையாளத் தெரியாதது போன்றவைதான் இதற்கெல்லாம் காரணம்.

சரியாகத் திட்டமிட்டால் 25 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுக்க முடியும் . ஆனால் அதே படத்துக்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள் .சில லட்சங்கள் என்றால் ஒரு தயாரிப்பாளர் தாங்குவார். ஆனால் கோடி ரூபாய் இழப்பு என்றால் அவர் எப்படித் தாங்க முடியும்? இப்படிப்பட்ட திட்டமிடாத சிலரால் தான் சினிமா நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.

வணிக மதிப்புள்ள கதாநாயகர்களுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்வதைக் குறை சொல்ல முடியாது. எப்படியாவது வியாபாரம் ஆகிவிடும். சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் இப்படியான சிறு முதலீட்டுப் படங்களுக்கு லட்சங்களைத் தாண்டினால் தயாரிப்பாளரால் இழப்பைத் தாங்க முடியாது” என்றார்.

இதைத் தடுப்பதற்குரிய வழியாக அவர் கூறுவது என்ன?

“சரியாகத் திட்டமிட்டு நன்றாக நடிக்கத் தெரிந்த புதுமுகங்களை வைத்து எடுத்தால் அந்தப் படம் நிச்சயமாக கவனிக்கப்படும். அதிக திரையரங்களில் வெளியிடாமல் குறைந்த திரையரங்குகளில் வெளியிட்டு நல்ல படம் என்று பெயர் பெற்றால் போதும்.அந்தப் படம் தப்பித்து விடும். வெளியான முதல் காட்சி – அந்த ஒரு காட்சியே படத்தின் தலைவிதியைச் சொல்லிவிடும். இப்போது படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் போதும் .செய்தி தீ போல பரவிவிடும். ஒரு காட்சியை வைத்தே அதன் தலைவிதி தெரிந்து விடும்.

அந்த நம்பிக்கையில் தான் நான் இந்தப் படத்தை சில லட்சங்களில் எடுத்து இருக்கிறேன்.ஏழு லட்ச ரூபாயுடன் ஊட்டிக்குச் சென்றேன் ஒருநாளும் படப்பிடிப்பு தடை பட்டதில்லை. நண்பர்கள் உதவினார்கள் இயற்கை உதவியது. பனியும் மழையும் நாங்கள் எதிர்பார்த்த நேரத்தில் வந்து உதவி செய்தன.சரியாகத் திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடக்கும் இயற்கை நிலைகளைத் தேர்வு செய்தோம் .ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்து நேரத்தை வீணடிக்கவில்லை.எல்லாமே சுமுகமாக நடந்தது”என்றவர், நடிகர்கள் தேர்வு பற்றிப் பேசும்போது,

“நான் இந்தக் கதையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரைத் தேடி அலையவில்லை. திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் .அதற்குரிய பலன் கிடைத்தது. இதில் நடித்திருக்கும் நாயகனும் சரி, நாயகியும் சரி, பிறபாத்திர நடிகர்களும் சரி அருமையாக நடித்திருக்கிறார்கள். நான் அவர்களை அழகையும் தோற்றத்தையும் வைத்து தேர்வு செய்யவில்லை. நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தேர்வு செய்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.இதில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவரும் திறமையின் வழியாகத்தான் இந்தப் படத்திற்குள் வந்தார்கள்.

நான் இதற்கு முன்பு ‘அழியாத கோலங்கள் 2 ‘என்ற படத்தை இயக்கி இருந்தேன்.அதன் படப்பிடிப்பை 12 நாள்களில் முடித்திருந்தேன். நான் செலவு செய்த தொகையை கலைஞர் டிவியிலிருந்தே எனக்குக் கொடுத்து விட்டார்கள்.
தேவையில்லாமல் செய்த சில செலவுகள் தான் எனக்கு இழப்பு .மற்றபடி இன்று ஏராளமான வியாபார வழிகள் உள்ள சினிமாவில் சரியாகப் புரிந்து கொண்டு திட்டமிட்டுப் படமெடுத்து வெளியிட்டால் இழப்புக்கு வழியே இல்லை என்பது என் கருத்து” என்கிறார்.

‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் கதை அழுத்தமாக இருப்பதால் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது.2024 காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியன்று இந்தப் படம் வெளியாகும் திட்டத்தில் படத்தின் தொழில்நுட்ப செழுமை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *