அறிக்கை: பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

Share the post

அறிக்கை: பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வங்கி திருத்தச்சட்ட வரைவினை நிறைவேற்ற முயலும் ஒன்றிய அரசின் முடிவு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் சொத்தான பொதுத்துறை வங்கிகளைத் தனியார் பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்காகத் திறந்துவிடுவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

கடந்த 7 ஆண்டுகால பாஜக அரசின் கொடுங்கோல் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை உள்ளிட்டத் தவறான முடிவுகளால்தான், சுதந்திர இந்தியாவில் இதுவரை சந்தித்திடாத அளவுக்கு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்ள நேரிட்டது. இதன் விளைவாக, பல கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய், பல இலட்சணக்கான சிறு, குறு தொழில்கள் நலிவுற்று நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. ஒன்றியத்தை ஆண்ட காங்கிரசு, பாஜக எனும் இரு கட்சிகளின் அரசுகளும் பின்பற்றுகிற தனியார் மயம், தாராளமயம், உலகமயம் எனும் மிகத்தவறான பொருளாதாரக்கொள்கைகளினால் நாட்டின் பொருளாதாரம் முற்றுமுழுதாகச் சீரழிந்துள்ளது. விளைவாக, தனியார் கூட்டிணைவு நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவதோடு, அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தாங்கமுடியாத அளவிற்கு பெரும் இழப்பில் இயங்கி வருகின்றன. இதனால், இந்திய ஒன்றியமானது, உள்நாட்டு, வெளிநாட்டுப்பெருமுதலாளிகள் வளங்களைச் சுரண்டிக்கொளுத்து , இலாபமீட்டுகிற பெரும் சந்தையாகவும், ஆளக்கூடிய அரசுகள் அதற்கான இடைத்தரகர்களாகவும் மாறி நிற்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

ஏற்கனவே, தேசிய நெடுஞ்சாலைகள், தொடர்வண்டிகள், வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களையும், அவற்றின் சொத்துக்களையும் தனியாருக்குத் தாரைவார்த்த ஒன்றிய அரசு, தற்போது பலகோடிக்கணக்கான நாட்டு மக்களின் வியர்வையையும், இரத்தத்தையும் மூலதனமாகப் பெற்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைத் தனியார் வசம் ஒப்படைப்பதென்பது, எதிர்காலத்தில் அவற்றை மொத்தமாகத் தனியார்வயப்படுத்துவதற்கான முன்னெடுப்பேயாகும். ஏற்கனவே, 14 பொதுத்துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைப்புக்கு உட்படுத்தி இருப்பதுடன், காப்பீட்டு நிறுவனங்களையும் முற்று முழுதாகத் தனியாருக்கு விற்கவும் முடிவு செய்துள்ள ஒன்றிய அரசு, தற்போது வங்கிகளையும் தனியாருக்கு விற்பதினால், நாட்டின் பொருளாதாரமே பன்னாட்டுப்பெருமுதலாளிகளை நம்பி நிற்கக்கூடியப் பேராபத்தினை விளைவிக்கும். மேலும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதன் விளைவாக மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன்கள், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள், சிறு குறு தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் தொழில்கடன்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் கடன்கள் ஆகியவை நிறுத்தப்படக்கூடியப் பேராபத்தினை ஏற்படுத்துவதுடன், கோடிக்கணக்கான மக்களின் நம்பகமானச் சேமிப்பிற்கு பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கும். அதுமட்டுமின்றி, கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் தங்கள் விருப்பம்போல் கணக்கற்று உயர்த்தி ஏழை மக்களை வதைக்கவும் வழிவகுக்கும் வாய்ப்புண்டு.

ஆகவே, நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான கிராமங்களின் பொருளாதாரத்தைச் சீரழித்து, அடித்தட்டு மக்களின் சேமிப்பையும், அவர்களின் நல்வாழ்வையும் கேள்விக்குறியாக்கும் வகையில் கொண்டுவரப்படும் ‘வங்கி திருத்தச்சட்ட வரைவினை’ திரும்பப்பெற வேண்டுமென்றும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டுமென்றும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினை வலியுறுத்துகிறேன். இத்தோடு, பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்ற ‘வங்கி ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பின்’ நியாயமான கோரிக்கையை முழுமையாக ஆதரிப்பதுடன், போராடும் 10 இலட்சம் வங்கி ஊழியர்களின் பணிப் பாதுகாப்பினை உறுதிசெய்யவும் நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்துத் துணைநிற்கும் என உறுதியளிக்கிறேன்.

  • செந்தமிழன் சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *