” பத்தா “திரை விமர்சனம் :-

Share the post

” பத்தா ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :- குற்ற செயல்களில் ஈடுபடும் ஒரு குழுவின் உறுப்பினரே கேங்ஸ்டர் . குற்றச் செயலையே தொழிலாக செய்யும் ஒருவன் எதிர்பாராத விதமாக சிக்கல் ஒன்றில் சிக்கி தவிக்கும் அவனை சிறுவன் ஒருவன் காப்பாற்றும் சூழல் உருவாகிறது . மனம் மாறும் மனிதனின் கதை தான் இக் கதையின் மூலக் கரு.

கதையும் கதையின் போக்கும் :-
அன்று மதறாஸ் என்று அழைக்கப்பட்ட மெட்ராஸ் இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்தச் சென்னை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்தது என்பதனை பின்னோக்கிச் சென்றால் …..

1986 ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் கதை திரைப்படமாக வெளிவந்து இருக்கிறது.

” பத்தா ” அனைவரையும் கதி கலங்க வைக்கும் உள்ளூர் தாதா . அப்படிப்பட்ட தாதா எதிர்பாராத விதமாக பள்ளி ஒன்றில் பயன்பாட்டுக்கு உதவாத கழிவறைக்குள் சிக்கிக் கொள்கிறார். அவரை அதிலிருந்து வெளியில் கொண்டும் சூழலில் சிறுவனுடன் ஏற்படும் தொடர்பு. அதன்பின்னர் அவர்களுக்கு இடையே உருவாகும் எதிர்பாராத பந்தம் . வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் என்ன என்ற கேள்விக்கு விடையைத் தருவதே மீதிக் கதை. படம் பார்த்தால் அது உங்களுக்கே புரியும்.

கேங்ஸ்டர் என்று சொன்னாலே நம் மனக் கண்முன் வந்து நிற்பது ஆக்‌ஷன் , வன்முறை , மாஸ் …. இம் மூன்று தான் கேங்ஸ்டருக்கு அடையாளம். அதனையும் தாண்டி மனிதனுக்குள் இருக்கும் உணர்வுகளின் மாற்றமும் , இனிய உறவுகளின் இனிமையும் மையப் படுத்தி கதையை நகர்த்தி செல்வது இயக்குநரின் தனிப் பட்ட திறமை தான். அடி உதை வெட்டு குத்து என்று அதுமட்டுமே இல்லாமல் கல்லுக்குள் ஈரம். கல்லுக்குள் தேரை என்று சொல்லிக் கொண்டே போகலாம்….

வெளித் தோற்றத்தில் கேங்ஸ்டர். ஆனால் அவனுக்குள் இருக்கும் மனித நேயம். பசியின் கொடுமை , தனிமையின் நரகம் , தன்னை ஆட்டிப் படைக்கும் பயம் , உறவுகளை மேம்படுத்தும் குடும்பம். இப்படி அவனுக்குள் இன்னொரு மனிதன் இருக்கின்றான். அவனை வெளிக் கொண்டு வருவதே படத்தின் முக்கிய அம்சம். சிறுவனுடன் பத்தாவிற்கு ஏற்படும் உறவு பற்றிய முக்கிய சாராம்சம் கதைக்கு வலு சேர்த்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது இந்த மனித நேயம். படத்தின் துவக்கத்தில் நகைச்சுவை உணர்வைத் தூண்டினாலும் பின்னர் உறவு , பாசம் , நேசம் , பொறுப்பு , மனிதநேயம் என தொடர்வண்டி போல உணர்வுகளைத் தொட்டுச் செல்கிறது. ஒரு கட்டத்தில் பத்தாவின் வாழ்க்கையையும் , அவனது முடிவுகளையும் இந்த உறவு எப்படிப் பாதிக்கிறது என்பதே இந்தப் படத்தின் உணர்வு பூர்வமான மையப் புள்ளியாக மாறுகிறது.

திரை நட்சத்திரங்கள் :-
விஜய் சேதுபதி :-
படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விஜய் சேதுபதி இந்தப் படத்தையும் விட்டு வைக்கவில்லை. கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு உண்டான மிரட்டல் , கோபம் பயம் , இயல்பான நகைச்சுவை என வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தியும் இருக்கிறார். ஆக்ரோஷம் கொண்ட கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்ட விஜய் சேதுபதி குடும்பத்தைப் பற்றி சிந்திக்கிறார். பொறுப்புள்ள மனிதனாக மாறுகிறார். 1980 களில் வந்த படங்களின் ஓட்டமும் நடிகர்களின் நடிப்பும் தன் நடிப்பால் நினைவுப் படுத்துகிறார். விஜய் சேதுபதி. அவர் உடல் மொழியாலும் , வசன உச்சரிப்பாலும் அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.

படத்தின் மையப்புள்ளியாக இருப்பது பத்தாவுக்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையே ஏற்படும் அந்த எதிர் பாராத உறவு தான்.

மக்களே அஞ்சும் விதமாக கேங்ஸ்டராக வலம் வரும் விஜய் சேதுபதி. இந்த உலகத்தை அப்பாவித்தனமாக பார்க்கும் சிறுவன் மறுபுறம் . இந்த இரண்டு பேரின் குணாதிசயங்களுக்கும் இடையே இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமே நகைச்சுவை காட்சிகளுக்கும் , நெகிழ வைக்கும் காட்சிகளுக்கும் காரணமாக அமைகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இத்தகைய இந்த உறவு படத்தின் பிற்பகுதியில் உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

லிஜோமோல் ஜோஸ் – பத்தாவின் மனைவியாக நடித்திருக்கிறார். குடும்பம் சார்ந்த காட்சிகளுக்கு பொருத்தமாக நடித்து இருக்கிறார். உணர்வுகளை வெளிப்படுத்தியும் இருக்கிறார். புருஷன் பொண்டாட்டி உறவை வெளிப்படுத்தும் காட்சிகளில் இயல்பாக நடித்து தன்னுடைய தனித் திறனை வெளிபடுத்தியுள்ளார்.

துணை நட்சத்திரங்கள் :- படத்திற்கு பக்க பலமாக வருவது இந்தத் துணை நட்சத்திரங்களே ! சாந்தி பாலச்சந்திரன் , விஷ்ணு கோவிந்தன் , அர்ஜூன் சிதம்பரம் , ஹரிகிருஷ்ணன் , அஜய் கோஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று , உணர்ந்து நடித்து படத்திற்கு பெருமை சேர்த்து இருக்கின்றனர்.

நிறையும் குறையும் :-
1980 களில் மெட்ராஸ் நகரத்தின் வாழ்க்கையை உருவாக்கிய விதம் இந்தப் படத்திற்கு தனித்துவமான ஓர் அடையாளத்தைத் தருகிறது. அந்தக் காலக் கட்டத்தில் அன்றைய மக்கள் பயன் படுத்திய உடைகள் , வீட்டின் அமைப்புகள் , தெருக்கள் , பொருட்கள் மற்றும் காட்சி அமைப்புகள் நம்மை அந்தக் காலக் கட்டத்திற்கே அழைத்துச் சென்று நம்மை மெய் சிலிர்க்க வைத்திருக்கின்றார் இப் படத்தின் இயக்குநர் . அன்றைய மெட்ராஸ்ஸை திரையில் கொண்டு வந்து நிறுத்தி இருப்பது மிகப் பெரிய முயற்சி தான். இயக்குநரை பாராட்டலாம்.

தொடர்ச்சியாக வரும் படங்களில் வழக்கம் போல அதிரடி காட்சிகள் , வெட்டு குத்து மத்தியில் இரசிகர்களின் கவனத்தை சற்று திசை திருப்பும் விதமாக அணுகுமுறை சற்று வித்தியாசமாக அமைந்திருப்பது சற்று ஆறுதல் தான். வழக்கமான கதையை விட வித்தியாசமான முறையில் கதையை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்றார் போல திரைக்கதை அமைத்து பொருத்தமான வசனங்களை எழுதி படத்தினை வித்தியாசமாக இயக்கிய இயக்குநருக்கு தனிப்பட்ட பாராட்டுகள்.

குறை என்று கண்டுபிடித்தால் முதலில் வருவது நேரம் தான். அந்த நேரத்தைக் குறைத்து கதையை சற்று சுருக்கி படத்தினை பஞ்சு மிட்டாய் கணக்காய் இழுக்காமல் சொல்லி நிறைவு செய்து இருக்கலாம் . நடிகன் என்று சொன்னாலே பன்முகத் திறமை வேண்டும். ஒரே மாதிரி நடிக்காமல் சற்று வித்தியாசமாக நடித்தால் இந்தத் துறையில் நிலைத்து நிற்கலாம் .

தொழில் நுட்பக் கலைஞர்கள் :- ஒளிப்பதிவாளர் :- செல்வகுமார் எஸ்.கே. படத்தின் காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்து சென்றிருப்பது வரவேற்கத் தக்கது. அந்தக் காலக் கட்டத்துக்கு ஏற்ற வெப்பமான பழைய கால தோற்றத்தினை நம் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார். காட்சிகளின் வண்ணத் தேர்வு , அதன் பின்னணி இவ்விரண்டையும் 1980 களின் சூழலை உணர வைக்கின்றன. பாராட்டலாம் இவரை ! கைத் தூக்கி விடலாம் இவரை !

இசை :- சாய் அபியங்கர். படத்திற்கு பலம் சேர்ப்பதும் பாட்டுக்கு உயிர் கொடுப்பதும் இந்த இசையே ! உணர்வு பூர்வமான காட்சிகளுக்கு தன்னுடைய பங்கை சேர்க்க மறக்கவில்லை. குடும்ப உறவுகளை பற்றி இழுப்பதில் தன் பங்கை விட்டுக் கொடுக்கவில்லை. உணர்சிக்கும் உணர்வுக்கும் உயிர் கொடுப்பது இந்த இசையே ! பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாராட்டலாம்.

இயக்குநர் :- பாலாஜி தரணீதரன். இவர் வழக்கமான கதையை கையில் எடுக்காமல் கேங்ஸ்டரின் இன்னொரு முகத்தினை வெளிக் கொண்டு வந்து நிறுத்தி தனி முத்திரையை பதித்திருக்கிறார். எல்லோரையும் போல இவரும் திரைக்கதையில் தனி கவனம் செலுத்தாமல் அங்கங்கே சிறு சிறு ஓட்டைகள் தெரிவதை கவனிக்காமல் விட்டு விடுகிறார் . திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். 1980 களில் மெட்ராஸ் எப்படி இருந்து இருக்கும் என்பதை அலசி ஆராய்ந்து அந்தக் காலக் கட்டத்தை நம் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது பாராட்டுக்குரியது. பாராட்டியே ஆக வேண்டும். கதாபாத்திரங்களை கதைக்கு ஏற்ப தெரிவு செய்து அதற்கு ஏற்ற நடிகர்களை நடிகைகளை தெரிவு செய்து நடிக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது பாராட்டுவோம் இப் படத்தின் இயக்குநரை !

” பத்தா ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் வரும் பத்தாவை பாராட்டலாம். கேங்ஸ்டர் உருவாவதை தடுத்து நிறுத்துவோம். படம் பார்க்கலாம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பினை வழங்கி பாராட்டி மகிழ்கிறது. மீண்டும் வேறொரு படத்தில் சந்திப்போம் திரைவிமர்சனம் என்ற பகுதியில். அதுவரை உங்களிடமிருந்து பிரியா விடைபெறுவது உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *