
‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நடுவராக இணையும் ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!
சமையலறை தயாராகிவிட்டது… ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டன… சுவையான உணவுகளின் மணமும், பரபரப்பும் இனி தொடங்கவிருக்கிறது. மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா (MasterChef Australia) நிகழ்ச்சியின் வெற்றியாளரான செஃப் சாஷி செலியா, தற்போது செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் ( Celebrity MasterChef Tamil) நிகழ்ச்சியில் நடுவராக இணைந்துள்ளார்.
Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபு பிரபலங்களை ஒன்றிணைத்து, உணவு, பொழுதுபோக்கு மற்றும் பரபரப்பான தருணங்கள் நிறைந்த சமையல் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறார்.
சாஷி செலியாவின் மாஸ்டர்செஃப் பயணம் வழக்கமானதாக இருந்ததில்லை. தனது பணியை சிங்கப்பூர் காவல்துறையில் தொடங்கிய அவர், பின்னர் சமையல் துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.
அவரது சமையலில், சிறுவயதில் அவரைச் சுற்றி வளர்ந்த இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு சுவைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.
தமிழ் நிகழ்ச்சியில் நடுவராக இணைவது குறித்து செஃப் சாஷி செலியா கூறியதாவது:
“மாஸ்டர்செஃப் சமையலறையை நோக்கிய எனது பயணம் முற்றிலும் எதிர்பாராத வகையில் அமைந்தது. நான் சிங்கப்பூர் காவல்துறையில் எனது பணியைத் தொடங்கினேன். ஒருநாள் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா சமையலறைக்குள் நுழைந்து, இறுதியில் அந்தப் போட்டியின் கோப்பையை வெல்வேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
எனது சிறுவயதையும், சமையல் அடையாளத்தையும் வடிவமைத்த இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு சுவைகள், அந்தப் பயணத்தின் முக்கிய அங்கமாக மாறின. நாம் யார், எங்கிருந்து வந்தோம் என்பதை உணவின் மூலம் சொல்ல முடியும் என்பதை அந்தப் பயணம் எனக்கு உணர்த்தியது.
செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் நடுவராக வருவது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். ஏனெனில் சமையலறையின் மறுபுறத்தில் நின்று போட்டியிடுவது எப்படி இருக்கும் என்பதை நான் நன்றாக அறிவேன் — பதற்றம், அழுத்தம், நிச்சயமற்ற நிலை என அனைத்தையும் அனுபவித்திருக்கிறேன். அதே நேரத்தில், நம்மைப் பெருமைப்படுத்தும் ஒரு உணவை உருவாக்கும்போது கிடைக்கும் உற்சாகத்தையும் அனுபவித்திருக்கிறேன்.
இந்த முறை அந்த அனுபவத்தை சமையலறையின் மறுபுறத்திலிருந்து பார்க்கப் போகிறேன். பிரபல போட்டியாளர்களைச் சந்தித்து, அவர்களின் எல்லைகளைத் தாண்டி அவர்களை முயற்சி செய்ய வைப்பதையும், அவர்கள் சமையலறைக்கு கொண்டு வரும் கதைகளையும் சுவைகளையும் கண்டறிவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”
உணவின் சுவையுடன் பிரபலங்களின் போட்டி, அழுத்தம், திறமை மற்றும் தனித்துவமான சமையல் முயற்சிகள் என பல சுவாரஸ்யமான தருணங்களுடன் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி விரைவில் உங்கள் வீடு தேடி வரவுள்ளது.