‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

Share the post

‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாய்ரா’ திரைப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா (பென் ஸ்டுடியோஸ்) இணைந்து தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘டாய்ரா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உண்மை என்பது எப்போதும் முழுமையானதல்ல, நீதியைப் பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள முடியும், ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு விளைவு உண்டு போன்ற விஷயங்களை முன்னிறுத்தி கதையின் முதல் பார்வையை இந்த டிரெய்லர் வழங்குகிறது. மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் குற்றம், நீதி மற்றும் தண்டனை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, பரபரப்பு நிறைந்த உணர்வுப்பூர்வமான கதையைச் சொல்கிறது. யஷ் கேஸ்வானி, சிமா அகர்வால் மற்றும் மேக்னா குல்சார் ஆகியோர் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டாய்ரா’, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு குற்றச் சம்பவத்துக்குப் பிறகு நடைபெறும் நிகழ்வுகளைச் சுற்றி நகர்கிறது. இந்தச் சம்பவம் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டுவதுடன், அடுத்தடுத்த விசாரணைகளையும் தொடங்கி வைக்கிறது. விடைகளுக்கான தேடல் தீவிரமடையும்போது, மூத்த காவல்துறை அதிகாரிகளான கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் இருவரும் கடமை மற்றும் நீதியை அணுகும் வெவ்வேறு பார்வைகளுடன் ஒரே அமைப்புக்குள் பயணிக்கின்றனர். சரி, தவறு என்ற அடிப்படை எண்ணத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு வழக்கில், இருவரும் எதிரெதிர் பக்கங்களில் நிற்கின்றனர்.

யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர், புதிய தகவல்கள் வெளியாகும்போது வழக்கைப் பற்றிய நமது பார்வையே மாற்றும் வகையில் பதற்றத்தை படிப்படியாக அதிகரிக்கிறது. சிந்திக்கத் தூண்டும் கூர்மையான வசனங்கள், உண்மை மற்றும் நீதி குறித்த கடினமான கேள்விகளை எழுப்புகின்றன. அதே நேரத்தில், குற்றச் சம்பவத்தைத் தாண்டி, மக்களின் பார்வை மற்றும் அதிலிருந்து உருவாகும் பல்வேறு கதைகளையும் ‘டாய்ரா’ ஆராய்கிறது. ‘டாய்ரா’ எளிதில் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு கதை எவ்வளவு வேகமாகத் தீர்ப்பாக மாறிவிடுகிறது, ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்போது, நீதி எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார், நாம் வெறும் பார்வையாளர்களாக இருக்கும்போது, எதை நம்புவது என்பதை எவ்வாறு முடிவு செய்கிறோம் என்பதுதான் அவை.

டிரெய்லரில் இப்படத்தின் மற்ற கதாபாத்திரங்களான ஜிதேந்திர ஜோஷி, க்ஷிதி ஜோக், கன்வல்ஜீத் சிங், சந்தீப் குல்கர்னி மற்றும் த்ருப்தி கம்கர் ஆகியோரும் அறிமுகமாகின்றனர். கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனுடன் இணைந்து, மாறுபட்ட கண்ணோட்டங்கள், கடினமான முடிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளால் உருவாகும் கதைக்கு இவர்களின் நடிப்பு கூடுதல் வலு சேர்க்கிறது.

நடிகை கரீனா கபூர் கான் பகிர்ந்து கொண்டதாவது, “மேக்னாவுடன் பணியாற்றியதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதாக நினைக்கும் அனைத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். ஒவ்வொரு விஷயத்திற்குப் பின்னாலும் நிறைய சிந்தனை இருக்கிறது. அதே நேரத்தில், ஒரு நடிகராக நம்முடைய இயல்பான உணர்வுகளையும் உள்ளுணர்வையும் அவர் ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை. டிசிபி அஜூனி கோலி கதாபாத்திரத்தில் நடித்த தாக்கம் என்னுள் நீண்ட நாட்கள் இருந்தது.

ஏனென்றால், இதற்கு முன்பு நான் பெரிதாக ஆராயாத ஒரு களத்திற்குள் அந்தக் கதாபாத்திரம் என்னை அழைத்துச் சென்றது. எனது திரைப்பயணத்தின் இந்தக் கட்டத்தில், இதுபோன்ற அனுபவங்கள் உற்சாகமளிக்கின்றன. திறமையான, புத்திசாலித்தனமான நடிகர் பிருத்விராஜூடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சி. நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களால் ஒரு படத்தில் கிடைக்கும் அனுபவம் இன்னும் சிறப்பாக மாறும். அப்படிப்பட்ட படங்களில் ‘டாய்ரா’வும் ஒன்று” என்றார்.

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் கூறியதாவது, “டிசிபி ராமன் குமார் கதாபாத்திரத்தின் வெளிப்புற அமைதிக்குப் பின்னால் இருக்கும் சிக்கலும், விசாரணையின்போது அவர் எதிர்கொள்ளும் கேள்விகளுமே என்னை இந்தக் கதாபாத்திரத்திடம் ஈர்த்தன. படம் இறுதிவரை அதை தக்கவைத்துள்ளது. இயக்குநர் மேக்னா குல்சாரை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன் . ‘டாய்ரா’ படத்தின் மூலம் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது சிறந்த அனுபவம். கரீனாவுடன் இணைந்து பணியாற்றியது இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றியது. நாங்கள் உருவாக்கியுள்ள உலகத்துடன் பார்வையாளர்கள் தங்களை பொருத்தி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். ‘டாய்ரா’ விறுவிறுப்பாகவும், ஆழமான மனித உணர்வுகள் கொண்ட கதையாகவும் இருக்கும்”.

இயக்குநர் மேக்னா குல்சார் பகிர்ந்து கொண்டதாவது, “‘டாய்ரா’ படம் கருப்பு, வெள்ளை என இரு தெளிவான பக்கங்களில் வசதியாக அமர்ந்துவிடக்கூடிய கதை அல்ல. ஒரு திரைப்பட இயக்குநராக, இந்த கதையின் இன்னொரு பக்கம் எப்போதும் சவாலானதாகவும், அதே நேரத்தில் ஈர்ப்புமிக்கதாகவும் இருக்கிறது. கதாபாத்திரங்கள் முடிவுகளை எடுக்கின்றனர். அந்த முடிவுகளுடன் வாழ்கின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பார்வையாளர்கள் தங்களுக்கான புரிதலை உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.

‘டாய்ரா’வின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் மிகச் சிறப்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர். இந்த இரு திறமையான நடிகர்களையும், சிறந்த துணை நடிகர் குழுவினரையும் இணைத்து, இப்படத்தின் கதையில் பயணிக்கும் சட்டம் மற்றும் நீதிக்கு இடையிலான நுட்பமான எல்லைகளை ஆராயும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. இந்த உலகத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அவர்களை இந்த உலகத்திற்குள் வரவேற்கிறேன்!” என்றார்.

ஜங்லீ பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி, அம்ரிதா பாண்டே பகிர்ந்து கொண்டதாவது, “ஜங்லீ பிக்சர்ஸில், நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து உருவாகும் கதைகளையே நாங்கள் எப்போதும் விரும்பி தேர்வு செய்து வருகிறோம். குறிப்பாக, உண்மைச் சம்பவங்கள் அல்லது உண்மையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளுக்கு முன்னுரிமை அளிப்போம். நாம் வாழும் காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இந்தப் படம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மோதல்கள், தார்மீகச் சிக்கல்கள், கடினமான முடிவுகள் மற்றும் இரண்டு வலுவான பார்வைகளை மையமாகக் கொண்ட குற்றவியல் த்ரில்லர்தான் இந்தப் படம். கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் போன்ற திறமையான நடிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். பென் ஸ்டுடியோஸூடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் முதல் படம் ‘டாய்ரா’ என்பது மகிழ்ச்சி. ‘தல்வார்’ மற்றும் ‘ராஸி’ படங்களுக்குப் பிறகு மேக்னாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறோம். எங்களுக்கு இந்தப் படம் எந்த அளவுக்கு பிடித்திருக்கிறதோ, அதே அளவுக்கு பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

பென் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சிஎம்டி டாக்டர் ஜெயந்திலால் கடா பகிர்ந்து கொண்டதாவது, “சினிமா பார்வையாளர்களை மகிழ்விக்கும் அதே நேரத்தில் ஒரு திரைப்படம் சரியான கேள்விகளையும் எழுப்புவது கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கும். ‘டாய்ரா’ இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அதுதான் இந்த கதையை எங்களை தேர்ந்தெடுக்க வைத்தது. மேக்னா குல்சார் தொடர்ந்து சிந்திக்க வைக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஆழமான, உணர்வுப்பூர்வமான மற்றும் கட்டுப்பாட்டுடன் ஒரு கதையைச் சொல்லும் அவரது திறமை உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் போன்ற இரு சிறந்த நடிகர்களின் திறமையான நடிப்பு படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது. இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். உள்ளடக்கத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படும் ஜங்லீ பிக்சர்ஸுடன் இணைந்து பணியாற்றியதும் சிறப்பான அனுபவமாக இருந்தது. அர்த்தமுள்ள கதைகளை உருவாக்குவதில் அவர்களின் பார்வையும் அர்ப்பணிப்பும் எங்களுடன் ஒத்துப்போகின்றன. ‘டாய்ரா’ பார்வையாளர்களை இறுதிவரை கட்டிப்போட்டு, அவர்கள் திரையரங்கிலிருந்து வெளியேறிய பிறகும் அவர்களுடன் தொடர்ந்து பயணித்து, பல கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

‘டாய்ரா’ மூலம் இயக்குநர் மேக்னா குல்சார், தனிப்பட்ட நம்பிக்கைகள் சட்டத்தின் வரம்புகளை எதிர்கொள்ளும்போது உருவாகும் கடினமான முடிவுகளை ஆராயும் வகையில், பல அடுக்குகளைக் கொண்ட கதையையும் வலுவான நடிகர்கள் குழுவையும் ஒன்றிணைத்துள்ளார். பென் மருதர் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் ‘டாய்ரா’ திரைப்படம், செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *