அரூபி’ படத்தைப் பார்த்த பிறகு மக்கள் பேசுவார்கள், விவாதிப்பார்கள் – தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் நம்பிக்கை !

Share the post

புனர்த்தம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரதீப் ராஜ் தயாரிப்பில், அபிலாஷ் வாரியர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘அரூபி’. இதில், விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்‌ஷி படாலா, ஜாய் மேத்யூ, சிந்து வர்மா, கண்ணன் சாகர், விஜுபால், கிரண் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வினீத் வி.டி. படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், மகேஷ் ஸ்ரீதர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பாடல்களை ஹரி நாராயணன் எழுதியுள்ளார்.

மர்மம் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் அளிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘அரூபி’ தமிழ் பதிப்பிற்கான டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை, சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், நடிகர் அசோக், வின்செண்ட் அசோகன், சஞ்சய் சங்கர் உள்ளிட்ட ஏராளான திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

“சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், பல்வேறு மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்த கதைக்களத்தை முன்னிறுத்துகிறது. விறுவிறுப்பான காட்சிகள், பின்னணி இசை மற்றும் திகில் கலந்த திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நிகழ்ச்சியில் இயக்குநர் அபிலாஷ் வாரியர் பேசுகையில், “முதலில் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் மலையாளம் மட்டுமல்ல, எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக படப்பிடிப்பின்போதே நிறைய உழைத்திருக்கிறோம்.

படத்தின் புரமோஷன் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் தொழில்நுட்பக் குழு. பின்னணி இசையமைப்பாளர் கோபி சுந்தர் ., ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ் ராஜ், படத்தொகுப்பாளர் கிஷோர் மோகன் உள்ளிட்ட அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். மீதியை நீங்கள் திரையரங்கில் பார்த்து முடிவு செய்யுங்கள். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறோம். அனைவருக்கும் மீண்டும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இன்று திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும், தனிமையில் இருந்தாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும், மக்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறார்கள். திரைப்படம் பார்க்க இனி எந்தவொரு விசேஷ நாளும் தேவையில்லை.

சமீபத்தில் கேரள அரசு திரைப்படத் துறையை ஒரு தொழில்துறையாக அறிவித்துள்ளது. அதனால் இன்று நாங்கள் அனைவரும் திரைப்படம் என்ற தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த மேடையில் நின்று சினிமாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. இந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், உங்களுடன் இந்த தருணத்தை பகிர்ந்து கொள்வதற்கும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்புக்காக என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி.

குறிப்பாக இயக்குநர் அபிலாஷ் வாரியருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என் நண்பரும், இந்தப் படத்தின் நாயகனுமான விஷாக் ரவியுடன் சேர்ந்து அவர் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னார். நான் சினிமா துறையைச் சேர்ந்தவன் அல்ல; தொழிலதிபர். ஆனால் இந்தக் கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என் மனைவி மஞ்சுவின் ஆசீர்வாதத்துடன் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன்.

அப்போது அபிலாஷிடம் நான் ஒரு விஷயம் மட்டும் சொன்னேன். ஏற்கனவே பிரபலமான நடிகர்களை மட்டும் நம்பாமல், திறமையான இளம் கலைஞர்களைத் தேடி அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றேன். இந்தியாவில் திறமைக்கு குறைவில்லை. ஆனால் அந்த திறமையை வெளிப்படுத்த சரியான மேடை கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள். அவர்களை நம்பிக்கையுடன் கொண்டு வந்து, கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்துடன் இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினேன்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதைதான். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘இவ்வளவு அருமையான கதையை இதுவரை யாரும் ஏன் படமாக எடுக்கவில்லை?’ என்று நீங்கள் நினைப்பீர்கள். அந்த அளவுக்கு சிறப்பான கதையை அபிலாஷ் மிகுந்த உழைப்புடன் திரையில் கொண்டு வந்துள்ளார். இளம் நடிகர்களையும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் பேசுவார்கள், விவாதிப்பார்கள், தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்காகவே நான் காத்திருக்கிறேன்.

ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது தோல்வியில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நல்ல திரைப்படம் தோல்வியடைவதற்கு காரணம் அது சரியான பார்வையாளர்களை சென்றடையாததுதான். ஒரு படம் அனைவருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அது ஒருவரின் ரசனைக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் அவர் அதை மோசமான படம் என்று கூறலாம். ஆனால் அது மோசமான படம் என்பதற்கான அர்த்தமல்ல.

சரியான பார்வையாளர்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் மிகப்பெரிய பாலமாக இருக்கின்றன. அதனால் இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. அன்புடனும் மரியாதையுடனும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறோம். ‘அரூபி’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.” என்றார்.

நடிகர் விஷாக் ரவி பேசுகையில், “அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கம். முதலில் சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்த பாரதிராஜா சார் மற்றும் பாக்யராஜ் சாருக்கு என்னுடைய பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களுக்கு எனது மரியாதை. இன்று இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளர் சொன்னது போல, ஒரு படத்தின் வெற்றிக்கு ஊடகங்கள்தான் மிகப்பெரிய பாலமாக இருக்கிறார்கள். உங்கள் ஆதரவு இருந்தால்தான் எங்களைப் போன்ற புதியவர்கள் முன்னேற முடியும்.

இந்தப் படம் உருவான பயணம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. நானும் இயக்குநர் அபிலாஷ் வாரியரும் இணைந்து பல கதைகளை உருவாக்கினோம். எந்தக் கதையை முதலில் படமாக்குவது என்று நீண்ட நாட்கள் யோசித்தோம். இறுதியாக இந்தக் கதையை தேர்வு செய்தோம். அதன் பிறகுதான் தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் சாரை சந்தித்தோம். பிரதீப் ராஜ் சார் எனக்கு ஒரு தயாரிப்பாளர் மட்டுமல்ல, தந்தை போன்றவர். அவர் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் இருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இது ஹீரோவாக எனது முதல் படம். அதனால் உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் எனக்கு மிகவும் முக்கியம்.

‘அரூபி’ ஒரு ஹாரர் திரைப்படம். முதலில் இதை மலையாளத்தில் மட்டுமே எடுக்கத் திட்டமிட்டோம். ஆனால் கதையின் வலிமை மீது இருந்த நம்பிக்கையால், தமிழிலும் வெளியிட முடிவு செய்தோம். நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு எல்லா மொழிகளிலும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒரு ஹாரர் படத்தில் பின்னணி இசையும், ஒலித் தரமும் மிகவும் முக்கியமானவை. அதற்காக கோபி சுந்தர் பின்னணி இசையமைத்துள்ளார். சவுண்ட் டிசைனிலும் தொழில்நுட்பக் குழு சிறப்பாக பணியாற்றியுள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *