கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.முதல்-அமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது என அவர் கூறினார்.
மேலும் அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு:-
- ஜீரோ வரியில் ஏழை மக்கள் பயனடைவது இல்லை, பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மட்டுமே பயனடைகின்றனர்; வரியில்லா பட்ஜெட் என்பது வளர்ந்த நாடுகளில் மட்டுமே சாத்தியம்.
- உள்ளாட்சி தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- அரசிற்கு வர வேண்டிய பணம் யார் கைக்கு சென்றது? அரசாங்கத்தின் கைக்கு வராத பணம் பணக்காரர்களின் கையில் சேர்கிறது.
- சரியான வரியை சரியான நபர்களிடம் எடுத்து மருத்துவம், தொழிற்சாலை என வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
- வாழ்வதற்கு சிறந்த இடமாக சொல்லப்படும் சுவீடன், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகள் 30 சதவீத வரியை விதிக்கிறது.
- 2019 – 20-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1.89 சதவீதமாகவே இருந்தது.
- பண மதிப்பிழப்பு, கொரோனா காலத்தில் தமிழகத்தில் குறைவான பாதிப்பே ஏற்பட்டது.
- பொறுப்பான அரசு என்பது வளர்ச்சி, சமூக நீதிக்கு உதவ வேண்டும்.
- உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் தமிழகம் அதிகம் பாதிக்கப்படும்.
- பணமதிப்பிழப்பு, முறையற்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவையே பொருளாதார சுணக்கத்திற்கு காரணம்
- பேரிடர்களால் பல மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிகம் பாதிக்கப்படுகிறது.
- கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் தொகைக்கு ஏற்ப தலைக்கு ரூ.50,000 முறைகேடு என உள்ளது.
- வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.
- மின்சார வாரியத்தின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது.
- குடிநீர் வடிகால் வாரியத்தின் கடன் ரூ.2,890.26 கோடியாக உள்ளது.
- ஒன்றிய அரசின் உதய் மின்திட்டத்தை அமல்படுத்தியதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.48,500 கோடி இழப்பு.
- இந்த மோசமான நிதி நிலைமையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் தாண்டி வரும்.அரசியலில் சக்தி, மேலாண்மையில் திறமை ஆகிய இரண்டும் சரியான அரசாங்கத்தை வழிநடத்தும். நிதி நிலைமையை 5 வருட ஆட்சிக்குள் சீரமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது; எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விடமாட்டோம்.
வாக்களித்த மக்களின் தேவையை அறிந்து அரசு செயல்படும். தி.மு.க. அரசு மக்களுடன் இணைந்து செயல்படும்.
- குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் வதந்தி பரப்புவார்கள், ஆனால் அதில் நன்மை தான் உள்ளது.
- தமிழ்நாடு பணக்கார மாநிலம்; இந்தியாவுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அதிகமான சொத்துக்கள் உள்ளன என கூறினார்.