“திரை உலகின் தேவசேனா தேவயானி” ; நிழற்குடை பட விழாவில் வனிதா விஜயகுமார் புகழாரம்

Share the post

“திரை உலகின் தேவசேனா தேவயானி” ; நிழற்குடை பட விழாவில் வனிதா விஜயகுமார் புகழாரம்

“தியேட்டர்கள் எல்லாம் மினி ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டன” ; நிழற்குடை பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வேதனை

“ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும்” ; இயக்குநர் கே.பாக்யராஜ்

“சோம்பேறிகள் கூட ரஜினிகாந்த் இயங்குவதை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள்” ; நிழற்குடை விழாவில் சிலாகித்த சீமான்

“குழந்தையை வளர்த்து விடுவது என்பது வேறு.. குழந்தை வளர்ப்பு என்பது வேறு” ; நிழற்குடை விழாவில் இயக்குநர் பேரரசு நெத்தியடி பேச்சு

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்..

தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனம் பெற்றுள்ளது. உலகமெங்கும் வரும் மே மாதம் 9ம் தேதி நிழற்குடை வெளியாகிறது..

இதனையடுத்து ‘நிழற்குடை’ படத்தின் இசை மட்டும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.பாக்யராஜ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி, நடிகை வனிதா விஜயகுமார், நமீதா, தயாரிப்பாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் சிவா ஆறுமுகம் பேசும்போது,

“இந்த படத்தில் இன்றைக்கு தேவையான கருத்தை ஆறிலிருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு பிடிக்கும் விதமாக நான் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். இந்த படத்திற்கு நானே தான் தயாரிப்பாளர். இந்த காலகட்டத்தில் ஒரு சின்ன படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு போராட்டங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்து ஆதரவாக இருந்தனர்” என்று கூறினார்.

நாயகன் விஜித் பேசும்போது,

“கடந்த வருடம் நான் நடித்த ஒயிட் ரோஸ் என்கிற படம் வெளியானது. அதை தொடர்ந்து எனக்கு கே/எஸ் அதிகமான் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது/ கதை சொல்ல வேண்டாம் என்று கூறினாலும் கூட, அரை மணி நேரம் சொன்னார்கள். கதை பிடித்து இருந்தது. எப்போது சார் தேதிகள் வேண்டும் என கேட்டபோது கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் சொல்கிறோம் என்று சொன்னதும் எனக்கு இந்த படத்தில் நாம் நடிக்கிறோமா, எதற்காக நம்மை அழைத்தார்கள், என்ன கதாபாத்திரம் பண்ண போகிறோம் என சிறிய குழப்பமும் சந்தேகமும் வந்தது. ஆனால் ஒரு வாரம் கழித்து மீண்டும் எனக்கு அழைப்பு வந்தபோது இந்த படத்தில் நான் நடிப்பதை உறுதி செய்தார்கள். அது மட்டுமல்ல என்னுடைய மகளுக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். தேவயானி இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்று சொன்னதும் கொஞ்சம் எனக்கு படபடப்பாகத்தான் இருந்தது. ஆனால் முதல் நாள் படப்படிப்பிலிருந்து அவர் என்னை எளிதாக உணர வைத்து விட்டார், இந்தப்படத்தில் நான் நடித்தது எல்லாமே பல சீனியர் நடிகர்களுடன் தான்” என்று கூறினார்.

நாயகி கண்மணி பேசும்போது,

“இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாக சின்னத்திரையில் தான் நடித்து வந்தேன். அதேசமயம் இந்த படத்தில் நடிக்க வந்தபோது எப்படி ஒரு பெரிய நடிகையை நடத்துவார்களோ அதேபோல முறையாக, நல்ல விதமாக நடத்தினார்கள். என்னுடைய முதல் மேடை இது. சின்னத்திரைக்கு வந்த இந்த நான்கு வருடங்களில் எனக்கு நீங்கள் கொடுத்து வந்த அதே அன்பையும் ஆதரவையும் வெள்ளித்திரையிலும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். படம் சிறிய படமாக இருந்தாலும் நாங்கள் அனைவருமே இதற்கு மிகப்பெரிய கடின உழைப்பை கொடுத்திருக்கிறோம். ஒரு நல்ல ஃபீல் குட் படமாக இது இருக்கும்” என்று கூறினார்.

நடிகர் ராஜ்கபூர் பேசும்போது,

“இப்போது வரும் படங்களில் எல்லாமே துப்பாக்கியை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள் ஆனால் இது எண்பதுகளில் வந்தது போன்று குடும்ப அம்சத்தை வலியுறுத்தும் படமாக உருவாகியுள்ளது. வெளிநாட்டிற்கு சென்று வேலை வாய்ப்பு தேடும் ஒரு தம்பதியினரின் சிரமத்தை இது சொல்கிறது. எல்லோரும் வெளிநாட்டுக்கு சென்று தான் வேலை பார்க்க வேண்டுமா என்கிற கேள்வியையும், பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற படிப்பினையையும் இந்த படம் கொடுக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

நடிகர் ரவிமரியா பேசும்போது,

“எனக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படத்தின் இயக்குநர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கு முன்பு இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை திரையிட்டார்கள். அதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் பார்த்தவர்கள் எல்லோரும் இந்த படத்தை பார்க்காமல் நீங்கள் மிஸ் பண்ணி விட்டீர்கள், அருமையான பீல் குட் படம் என்று சொன்னார்கள். படத்தின் கதையைக் கேட்டதும் அதை உணர்ந்தேன்” என்று கூறினார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது,

“தேவயானியின் மிகப்பெரிய ரசிகை நான். எல்லோருக்கும் காதல் கோட்டை தேவயானியை பிடிக்கும் என்றால் எனக்கு கல்லூரி வாசல் படத்தில் நடித்த அந்த பப்ளியான தேவயானியை ரொம்ப பிடிக்கும். ரொம்பவே எளிமையான நல்ல இதயம் கொண்டவர். அவரை இந்த திரை உலகின் தேவசேனா இன்று தாராளமாக சொல்லலாம். விஜய் சொன்னது போல 20 வயதில் ஒரு பெண் ஹீரோயினாக இருப்பது அதிசயம் அல்ல. ஆனால் 40 வயதிலும் கதாநாயகியாக நிற்பது தான் பெரிய விஷயம். மனோரமா ஆச்சி, ஊர்வசி போல அவரும் ஒரு இடத்தை பெறுவார், தற்போதைய சூழலில் ஒரு பெண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ஒரு படம் திரையரங்கு ரிலீசுக்கு வருவதே சாதனை என்று தான் சொல்ல வேண்டும். சின்ன படம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை நல்ல படம் என்று சொல்லலாம்” என்று கூறினார்.

நடிகர் நகுல் பேசும்போது,

“இயக்குனர் கே.எஸ் அதியமான், சிவா ஆறுமுகம் ஆகியோர் இணைந்திருப்பதால் இந்த படம் நிச்சயம் ஒரு கருத்துள்ள படமாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். கண்மணி பாடல் மனதை தொடும் விதமாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள சில விஷயங்கள் இருக்கின்றன. கே.எஸ் அதியமான் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவரால் தான் நாங்கள் சினிமாவுக்கு வந்தோம். தமிழர்களாகவே மாறிவிட்டோம். அதனால் இது எங்களுடைய குடும்ப நிகழ்ச்சி போல தான், என்னுடைய அக்காவின் கடின உழைப்பை சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். இப்போது என் அம்மா இல்லை என்றாலும் அக்கா உருவில் அம்மாவை பார்க்கிறேன். இந்த கதை கூட அக்காவை கொஞ்சம் தொடர்புபடுத்தும் விதமாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது,

“நாயகன் விஜித் என்னை அழைத்து இந்த படத்தை பார்க்கச் சொன்னார். ஒரு நாயகன், நாயகி மட்டுமல்ல, நடிகை தேவயானி இந்த படத்தை தூக்கி நிறுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த படத்தை வெளியிட முன் வந்த பிளாக் பஸ்டர் நிறுவனத்திற்கு நன்றி. சின்ன படம், பெரிய படம் என்று பட்ஜெட்டை வைத்து சொல்வதை விட ஓடும் படம், பெரிய படம், ஓடாத படம் சின்ன படம் என்று தான் நான் சொல்வேன்” என்று கூறினார்.

இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது,

“இந்த நிழற்குடை எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு படமாக, எல்லோரும் பார்க்கும் ஒரு நல்ல படமாக இருக்கும். நல்ல படங்களை காண்பது என்பதே அரிதாக இருக்கிறது. தன்னை 30 வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய அதே குழுவினருடன் மீண்டும் தேவயானி இணைந்து நடிப்பதும் மீண்டும் ஒரே குழுவினராக அவர்கள் இங்கே அமர்ந்திருப்பதும் ஒரு மேஜிக் என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய நீண்ட நெடிய பயணத்தில் எவ்வளவோ நிழல்கள் நம் பயணத்திற்கு துணையாக இருந்திருக்கின்றது. நிழல் இல்லாத நேரத்தில் கூட சற்றென்று ஒரு குடையாக எத்தனையோ நல்ல உள்ளங்கள் வந்திருக்கிறார்கள். எல்லோரும் திரும்பி பார்க்கும் ஒரு விஷயமாக இந்த நிழற்குடை இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

நடிகை நமீதா பேசும்போது,

“இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம் இப்போது நாட்டில் நடக்கக்கூடிய ஒரு நிஜம் தான். இந்த சமயத்தில் என் வீட்டில் இருக்கும் என் மாமியார், மற்றும் ஆயாம்மாக்கள் இருவருக்கும் நன்றி சொல்லணும். ஆயாம்மா பணிக்கு இப்போது நல்ல மதிப்பும் சம்பளமும் இருக்கிறது. அம்மா இல்லாத இடத்தில் அவர்தான் அம்மா. இந்த படத்தில் அதை கொஞ்சம் திரில்லிங் அம்சங்கள் சேர்ந்து காட்டி இருக்கிறார்கள். படம் பார்ப்பவர்கள் பல இடங்களில் தங்களுடன் அதை தொடர்பு படுத்திக் கொள்வார்கள்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது,

“இந்த படத்தை பார்த்ததும் மனம் நெகிழ்ந்து போனேன். இன்று சிறிய படங்களின் நிலைமை மிக கேவலமான சூழ்நிலையில் இருக்கிறது. இந்த சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தம்சம் கொண்ட இந்த படத்தை தயாரித்து இயக்கியதற்காக இயக்குநர் சிவா ஆறுமுகத்தை பாராட்ட வேண்டும். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜித் ஒரு அற்புதமான நடிகராக தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷமாக, இன்னொரு நடிகர் திலகமாக இருக்கும் தேவயானி இந்த படத்தில் இந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவருடைய இயல்பான குணமாகவே அது இருப்பதால் அவருக்கு அது எளிதாக போய்விட்டது. அவருக்கு இந்த படம் நிறைய விருதுகளை கொண்டு வந்து சேர்க்கும்” என்று கூறினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“நடிகைகளில் சகலகலாவல்லி என்றால் அது நடிகை தேவயானி தான்.. நடிகை, சமூக சேவை, டீச்சர், தயாரிப்பாளர், இப்போது இயக்குநர் என பல முகங்கள் காட்டுகிறார். விரைவில் அவர் இயக்குநர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். 100 படம் நடித்திருக்கிறார். வீட்டிலேயே கணவர் இருக்கிறார். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி ஒரு டைரக்சன் கோர்ஸ் படித்துவிட்டு குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த காலகட்டத்திற்கு மிக அவசியமான படம் தான் இந்த நிழற்குடை. குழந்தையை வளர்த்து விடுவது என்பது வேறு.. குழந்தை வளர்ப்பு என்பது வேறு. குழந்தையை பெற்றால் மட்டும் போதாது. வளர்க்க வேண்டும். அதைத்தான் இந்த நிழற்குடை சொல்கிறது. குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் குறைவாக இருக்கிறது. அவர்களை அன்பு காட்டி அரவணையுங்கள். குழந்தையை நீங்கள் ஒழுங்காக வளர்த்தால் தான் நாளை அதனுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

நடிகை தேவயானி பேசும்போது,

“என்னுடைய குடும்ப விழா இது. இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் காதல் கோட்டை என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான். அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை. 30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். இந்தப் படத்தை வெளியிடும் பிளாக் பஸ்டர் விநியோக நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு நிறைய தியேட்டர்களை கொடுத்து கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து படம் பிக்கப் ஆகும் வரை படத்தை நீக்காமல் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்பு எல்லாம் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து கூட பிக்கப் ஆகி ஓடி இருக்கிறது” என்று கூறினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

எனக்கும் இது ஒரு குடும்ப விழா தான். இயக்குநர் கே.எஸ்.அதியமான் என்னுடைய ஊர்க்காரர். தற்போது அவர் இயக்கி வரும் படத்தை நான் தயாரித்து வருகிறேன். பாதி பட வேலைகள் முடிந்து விட்டன. இந்த படத்தில் பிரிவியூ காட்சி திரையிட்ட போதும் சரி, இந்த நிகழ்வின் போதும் சரி.. நடிகை தேவயானி தனது சொந்த விசேஷம் போல அனைவரையும் வரவேற்று உபசரிப்பதை பார்க்க முடிந்தது. இன்றைக்கு இருக்கும் கதாநாயகிகள், தாங்கள் நடித்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கே வர தயங்குகிறார்கள். திரையரங்குகளில் படம் பிக்கப் ஆகும் வரை தூக்காமல் ஓட்டுவது நம் கையில் இல்லை. அதற்கு வேண்டுமென்றால் நாம் டைம் டிராவல் செய்து 90 க்கு தான் செல்ல வேண்டும். இன்று அது தியேட்டர்காரர்களின் கையில் தான் இருக்கிறது. ஒரு காட்சி நன்றாக ஓடவில்லை என்றாலே அடுத்த காட்சியில் படத்தை மாற்றி விடுகிறார்கள்” என்று கூறினார்.

பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,

இந்த படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் பாடலை பார்க்கும்போது மகிழ்ச்சியாக கண்களுக்கு இனிமையாக இருந்தது. அதற்கு ஒளிப்பதிவாளருக்கு தான் முதல் வாழ்த்து சொல்ல வேண்டும். நடிகர் விஜயத்தை பார்க்கும்போது கார்த்திகை பார்த்தது போல இருந்தது. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு ஹீரோவாக வலம் வருவார். எப்போதும் இதேபோல பணிவாகவும் இருக்க வேண்டும்.

நல்ல படம் வர வேண்டும் என்று சொல்கிறோம். நல்ல படத்தை ஓட வைத்தால் தானே அடுத்து இன்னொரு நல்ல படம் வரும். சமூகத்திற்கு தேவையான கருத்தம்சம் கொண்ட ஒரு படத்தை தான் கொடுத்திருக்கிறார்கள். இதை ஓட வைத்தால் தான் அடுத்தவர்கள் நல்ல படம் எடுக்க முன்வருவார்கள். இப்போதைய சூழலில் தியேட்டர்கள் மினி ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டன. டிக்கெட் கட்டணத்தை விட அவர்களுக்கு கேண்டீன் வியாபாரம் தான் மிகப்பெரியதாக தெரிகிறது. அதனாலேயே அதற்கேற்ற மாதிரியான படங்களை தயாரிக்க வேண்டிய சூழல் இன்று இருக்கிறது

உற்பத்திக்கான விலையை தாங்களே நிர்ணயிக்க முடியாத சூழலில் தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பேர் யாரென்றால் ஒருவர் விவசாயி.. இன்னொருவர் சினிமா தயாரிப்பாளர்.. இருவருமே தமிழக மக்களை வாழவைக்கிற, சிந்திக்க வைக்கின்ற, சிரிக்க வைக்கின்ற இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக மாறினால் மட்டுமே தங்களது பொருளுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்க முடியும்.

நானும் ரோஜாவும் திருமணம் செய்தது, குஷ்பூவும் சுந்தர்சியும் திருமணம் செய்தது எல்லாம் பரபரப்பு செய்தி ஆனால் தேவயானி திருமணம் செய்தது மற்றவர்களுக்கெல்லாம் ஷாக்கிங் ஆன செய்தி. உங்கள் திருமணத்திற்கு பிறகான தேவயானியின் வாழ்க்கை திரையுலகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கும் ஒரு பாடம் தான். அந்த கலாச்சாரத்தை இந்த படத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். கத்திரி வெயிலுக்கு எப்படி குடை சிறப்பாக இருக்குமோ, அதுபோல கத்திரி வெயிலாக காய்ந்து கிடக்கும் இந்த தமிழ் சினிமாவிற்கு இந்த நிழற்குடை படம் ஒரு சிறப்பாக அமையும். அண்ணன் சீமான் அவர்கள் கருப்பாக இருந்தார்கள். சிவப்பாக இருந்தார்கள்.. இப்போது எந்த வண்ணமும் இல்லாமல் தூய்மையாக இருக்கிறார்கள். எப்போதும் இதேபோல இருக்க வேண்டும்” என்று பேசினார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

“எங்க அம்மா எனக்கு இந்த பெயரை வைத்து பெருமைப்பட வைத்துவிட்டார். ஆனால் இயக்குனர் ராஜகுமாரனின் நிஜ பெயரே அதுதானா ? இல்லை சினிமாவுக்கு வந்த பின் வைத்துக் கொண்டாரா என்பதைவிட தேவயானி கிடைக்கும்போது அவர் உண்மையானவை ராஜகுமாரன் ஆகிவிட்டார். சினிமாவைப் பொறுத்தவரை சில பேருக்கு மட்டும் இவர்களுக்கெல்லாம் எப்படி படம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்கிற எண்ணம் ஏற்படும். அதேபோல சில பேரை பார்க்கும்போது இவர்களுக்கு ஏன் படமே கிடைப்பது இல்லை என்ற எண்ணமும் ஏற்படும். அப்படி இரண்டாவது லிஸ்டில் இருப்பவர் தான் இயக்குனர் கே.எஸ் அதியமான். ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும் என்று சொல்வது போல, சினிமாவில் அதிர்ஷ்டம் சில நேரம் திறமைசாலிகளுக்கு கை கொடுக்காது. நிழற்குடை. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தின் இயக்குனர் சிவா ஆறுமுகத்திற்கு கே.எஸ் அதியமான் உள்ளிட்ட பட குழுவினர் நிழற்குடையாக இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்திற்கு நிழற்குடையாக தேவையானி நிற்கிறார்” என்று பேசினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,

“இது நம்முடைய குடும்ப நிகழ்வு போல தான். நான் வரும்போது என்னை வரவேற்ற தேவயானி, நீங்கள் வந்ததற்கு நன்றி என்றார். ஆனால் நான் சொன்னேன் நீங்கள் இந்த படத்தில் நடித்ததற்கு நன்றி என்று. காரணம் முன்பு கே.ஆர் விஜயா, அடுத்து ரேவதி ஆகியோரைப் போல இப்போது தேவயானி நடித்தால் அது நல்ல படமாக தான் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் பெயரை பதிவு செய்யும் விதமாக நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். பணம் வருகிறதே என்பதற்காக எல்லா படங்களையும் ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெயரை ஒருபோதும் அவருக்கு கெடுத்துக் கொண்டதில்லை. அந்த நற்பெயர் தான் 30 வருடம் கழித்தும் இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு காரணம். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடாதே. தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு ஒரு நல்ல வெற்றிப்படம் தரவில்லை என்கிற குற்ற உணர்வு இப்போதும் எனக்கு இருக்கிறது. தம்பி படத்துக்கு அடுத்தபடியாக பகலவன் என்கிற படத்தை அவருக்காக எடுக்க இருந்தேன். ஆனால் மாதவன் அதில் நடிக்க மறுத்துவிட்டார். காரணம் தம்பி படத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் தான் ஆனால் அதன்பிறகு தான் வாழ்த்துக்கள் படத்தை அவருக்காக இயங்கினேன். ஆனால் படம் சரியாக போகவில்லை. இந்த இடத்தில் சொல்கிறேன், என்றைக்காவது ஒருநாள் அவருக்கு ஏற்பட்ட இழப்பை நான் சரி செய்வேன்.. கே.எஸ் அதியமான் போன்ற இயக்குனர்கள் இப்போது ரொம்ப குறைவு. தாலியை கழற்றி எறிந்து விட்டு இன்னொரு நபருடன் புரட்சி திருமணம் செய்யும்படி கதை எழுதியவரும் பாக்கியராஜ் தான்.. அதே தாலியை கழட்ட மாட்டார்கள் அதுதான் கலாச்சாரம் என்று ஒரு கதையை எழுதி அதையும் வெற்றி படமாக்கியவர் நம் பாக்யராஜ் காரணம். அவரது எழுத்தின் வன்மை அப்படி.

எளிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு குடும்பப்பாங்கான படமாக கொடுத்து வெற்றி அடைய வேண்டும் என்றால் அது அவரால் மட்டும் தான் முடியும். கே.எஸ் கோபாலகிருஷ்ணன் போல பாக்கியராஜ் நம் திரை உலகில் ஒரு மைல் கல். அவர் நம் கூட இருக்கிறார் என்பதை பெருமை. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் குருதேவ் அற்புதமாக காட்சிகளை படமாக்கி உள்ளார் என்பது தெரிகிறது. அடிதடி ஆக்சன் படங்களுக்கு இசையமைப்பதை விட இப்படி மென்மையான உணர்வுகளை கடத்தும் படத்திற்கு இசையமைப்பது ஒரு சவால். அதிலும் மனதில் நிற்பது போல மென்மையான இசையால் வருடுவது என்பது மிகக் கடினம். அதை இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் அழகாக செய்துள்ளார்.

ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு பெண் பாடலாசிரியர் பாடல் எழுதியிருப்பது பெருமையாக இருக்கிறது. பெரிய படம் சின்ன படம் என்கிற அளவு எல்லாம் இல்லை. ஓடுகிற படம், ஓடாத படம் அவ்வளவுதான்.. தெலுங்கில் ஆறு கோடியில் எடுக்கப்பட்ட கோர்ட் என்கிற படம் 60 கோடி வசூலித்துள்ளது. இந்த நிழற்குடை படம் நிச்சயம் வெல்லும். தியேட்டர்கள் இந்தப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கான சூழல் இப்போது இல்லை. ஆனால் விரைவில் அதற்கான சூழல் வர இருக்கிறது. பெரிய பெரிய வளாகங்களில் சின்ன படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சட்டம் வரும். பல இரவுகள் பசி பட்டினியுடன் கிடந்து இந்த சினிமாவை நேசித்தவர்கள் நாங்கள்.. அவ்வளவு எளிதாக சினிமாவை அழிய விட்டுவிட மாட்டோம். செல்வமணி சொன்னது போல விவசாயி, தயாரிப்பாளர் இருவருமே தங்களது உற்பத்திக்கான விலையை தீர்மானிக்கும் காலத்தை உருவாக்குவோம்.

சிவா ஆறுமுகம் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் என்ன நடந்தாலும் கூட சினிமாவை விட்டு அவர் வெளியேறவில்லை. அவரது மகனும் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். துவங்குவது எல்லோருக்கும் எளிது தான். ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டும். அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.

அய்யா ரஜினிகாந்தை தூரகுதில் இருந்தே பார்த்து வந்த நிலையில் நேரில் பார்க்கும் வாய்ப்பு வந்தது. இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இவ்வளவு படம் நடித்து, இவ்வளவு சாதித்த பிறகும். புதிதாக ஒன்றை தெரிந்து கொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை பார்க்கும்போது இவர் ஏன் ஜெயிக்க மாட்டார் என நமக்கே தோணும். என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் இருங்கள் என்று கூறிவிட்டு அவர் உள்ளே நடந்து சென்றபோது சினிமாவில் படத்தில் பார்க்கும் அதே வேகம் தான் நிஜத்திலும் அவரிடம் இருந்தது. சோம்பேறிகள் கூட அவர் இயங்குவதை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள் இந்த தேடலும் வெறியும் இருக்கும் ஒவ்வொருவரும் உச்சத்தை தொடலாம் சாதிக்கலாம்.

ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியை அதன் தாய் தான். இந்த படம் தாய்மையை பற்றி சொல்கிறது. நீங்கள் எவ்வளவு உயர்த்திற்கு சென்றாலும் உங்களைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உங்களுடைய தாய் தான். இந்தத் தாய்மை கதாபாத்திரத்தை தாங்கி நிற்கின்ற தகுதி நம் தேவயானிக்கு இருக்கிறது. நிழற்குடை படத்திலிருந்து திரையரங்கின் தொடக்க காட்சிக்கு மக்களை அழைத்து வருவதற்கு அவரே போதும்” என்று கூறினார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு ; தர்ஷன் பிலிம்ஸ் ஜோதிசிவா

கதை திரைக்கதை இயக்கம் ; சிவா ஆறுமுகம்

வசனம் ; ஹிமேஷ்பாலா

இசை ; நரேன் பாலகுமார்

ஒளிப்பதிவு ;ஆர் பி குருதேவ்

கலை இயக்கம் ; விஜய் ஆனந்த்

படத்தொகுப்பு ; ரோலக்ஸ்

மக்கள் தொடர்பு ;
A ஜான்/ தேன்மொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *