‘சிட்டி ஆப் ட்ரீம்ஸ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு

Share the post

‘சிட்டி ஆப் ட்ரீம்ஸ்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு

“அமெரிக்காவின் இருண்ட பக்கத்தை காட்ட முயன்றதால் சிரமங்களுக்கு ஆளானேன்” ; ‘சிட்டி ஆப் ட்ரீம்ஸ்’ பட இயக்குநர் ரூஃபஸ் பார்க்கர்

தமிழகத்தின் தென்கோடி நகரமான கம்பம் என்கிற ஊரில் பிறந்து அமெரிக்கா சென்று தொழிலதிபர் ஆனவர் ரூஃபஸ் பார்க்கர். கடந்த 20 வருடங்களாக அமெரிக்க குடிமகனாக இருக்கும் இவர் 2014 -ல் அமெரிக்காவில் P2 FILMS என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி இதுவரை ஐந்து படங்களை தயாரித்துள்ளார். தனக்கிருக்கும் சமூக அக்கறையோடு, அமெரிக்காவின் வெளி உலகத்திற்கு தெரியாத சமூக அவலத்தை வெளிக்கொண்ரும் விதமாக, அமெரிக்க திரைவரலாற்றில் யாரும் சொல்லத்துணியாத ஒரு உண்மைக் கதையுடன் CITY OF DREAMS எனும் ஒரு திரைப்படத்தை தயாரித்து, பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியிட்டு இருக்கிறார்.

அமெரிக்காவில் இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விரைவில் இந்தப்படம் இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்தப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது…

இந்த நிகழ்வில் இயக்குனர் ரூஃபஸ் பார்க்கரின் நண்பர் இயக்குநர் மித்ரன் கார்த்திக், தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் மதியழகன், இயக்குநர் சிவா ஆறுமுகம், நடிகர் அரிஷ் குமார், நடிகை கோமல் சர்மா, ஓவர் சீஸ் விநியோகஸ்தர் ஆர்கே கண்ணன், ‘பிடி மண்’ பட இயக்குனர் ஞான ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் மித்ரன் கார்த்திக் பேசும்போது,

“கம்பம் பகுதியில் பிறந்து வளர்ந்தாலும் ஹாலிவுட் வரை சென்று ஐந்து படங்களை தயாரித்துள்ளார் ரூஃபஸ் பார்க்கர். அவருடைய பயணம் பற்றி தெரிந்து கொண்டால் எல்லோரையும் ஊக்குவிக்க கூடிய ஒரு அம்சமாக அது இருக்கும். சிறுவயதில் சங்கிலியால் கட்டிப்போடப்பட்ட யானை தான் வலிமையாக மாறியும் கூட அந்த சங்கிலிக்கு கட்டுப்பட்டு நடப்பது போல சிறுவயதில் இருந்தே நீ இதற்கு தான் லாயக்கு என்பது போல ஒரு மனப்பான்மையுடன் ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து விட்டால் அதை விட்டு வெளியேறுவது கடினம். அதை உடைத்து மேலே ஏறி வருபவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள். அப்படி ஒரு சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்ற யானை தான் ரூஃபஸ் பார்க்கர். தான். அதேபோல வெளிநாட்டவர் மத்தியிலும் நம்மைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் இருக்கும். அந்த சங்கலியையும் அறுத்துக் கொண்டுதான் பல சிரமங்களை தாண்டி இந்த ஐந்து படங்களை இவர் உருவாக்கியுள்ளார்” என்று கூறினார்.

‘பிடி மண்’ பட இயக்குநர் ஞான ஜெயராமன் பேசும்போது,

“ரூஃபஸ் பார்க்கர் என்னுடைய திரை வழிகாட்டி மட்டுமல்ல, வாழ்க்கையிலும் கூட ஒரு நல்ல வழிகாட்டி தான், அவரிடம் இருந்துதான் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது, நேரடியாக மனதில் பட்டதை பளிச்சென சொல்லக் கூடியவர், வெளிநாடு சென்று வியாபாரத்தில் பெரும் பணம் சம்பாதித்தாலும் தனது கலை தாகம் காரணமாக சினிமாவிலேயே அதை முதலீடு செய்து இன்று இத்தனை படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக ஒரே நபராக இந்த சிட்டி ஆப் ட்ரீம்ஸ் படத்தை தனது தோளில் சுமந்து இன்று உலகம் முழுக்க கொண்டாடும் படமாக மாற்றி இருக்கிறார். இந்த படம் உலகம் முழுக்க கொண்டாடும் திரைப்படமாக வேண்டும். ஏனென்றால் இதில் சொல்லப்பட்டுள்ள கருத்து அப்படி. புலம் பெயர்ந்த குழந்தை தொழிலாளர்களின் வறுமையையும் இயலாமையையும் பயன்படுத்தி எவ்வளவு எளிமையாக அவர்களது உழைப்பு களவாடப்படுகிறது என்பதை பார்க்கும்போது அதிலும் அமெரிக்கா போன்ற நாடுகளே இதில் ஈடுபடுகின்றன என தெரிய வரும்போது ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கின்றது. இந்த விஷயத்தை சொன்ன துணிச்சலுக்காகவே அவரை பாராட்ட வேண்டும்” என்று கூறினார்.

வினியோஸ்தர் ஹெவன் பிக்சர்ஸ் ஆர்.கே கண்ணன் பேசும்போது,

“இங்கிருந்து அமெரிக்கா சென்று சாதித்துள்ள ரூஃபஸ் பார்க்கர் போன்றவர்கள் இங்கே மீண்டும் திரும்பி வரும்போது நம்மை போன்றவர்கள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவருடைய படத்தை இங்கே வெளியிட வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் கூட அவரது படம் நன்றாக வரவேற்பு பெறவேண்டும்.. சிறிய பட்ஜெட் படங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்தால் தொடர்ந்து அது போன்ற படங்களை வாங்கி வெளியிட நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

நடிகை கோமல் சர்மா பேசும்போது,

“சிட்டி ஆப் ட்ரீம்ஸ் படம் ஆஸ்கர் லைப்ரரிக்கு சென்று இருப்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது. என் இதயத்திற்கு ரொம்பவே மிக நெருக்கமான படம். அமெரிக்காவில் வெளியான இந்த படம் குறித்து அங்குள்ள பிரபலங்கள் பல பேர் பேசியிருந்தார்கள். இதில் பேசப்பட்டுள்ள கருத்து இப்போது ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. குழந்தைகள் கடத்தலை இந்த படம் சொல்கிறது. இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு நான்கு லட்சம் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். உலக அளவில் 12 மில்லியன் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என புள்ளி விவரம் சொல்கிறது. பாலின இச்சைக்காக, உறுப்புகள் விற்பனைக்காக, அடிமை வேலை செய்வதற்காக, பல்வேறு காரணங்களுக்காக இந்த கடத்தல் நடக்கிறது. இதில் பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர் என்பது கொடுமையான விஷயம். அதைப்பற்றி பேசுகின்ற இந்த படம் வெளியாகும் போது நிச்சயம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது உறுதி” என்று கூறினார்.

‘நிழற்குடை’ பட இயக்குனர் சிவா ஆறுமுகம் பேசும்போது,

“இங்கிருந்து அமெரிக்கா சென்ற பலர் அங்கேயே தங்கி விடுகிறார்கள். ஆனால் ரூஃபஸ் பார்க்கர் தன் தாய் வீடாக நினைத்து திரும்பி இங்கே வந்திருக்கிறார். ஒரு தமிழனாக அவருடைய வெற்றியை நம்முடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்த படம் சொல்லும் கருத்தை நினைக்கும்போது நம்மால் இதைப்போல பண்ண முடியவில்லை என்று என்னை போன்ற படைப்பாளிக்கு பொறாமையாக இருக்கிறது. ஹாலிவுட்டை தொடர்ந்து தமிழில் நீங்கள் படங்கள் பண்ண வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்” என்று கூறினார்.

நடிகர் அரிஷ் குமார் பேசும்போது,

இங்கிருந்து சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய யானை தான் திரும்ப இங்கே வந்துள்ளது. நல்ல பசியுடன் இருக்கும் என நினைக்கிறேன். இப்படித்தான் ரூஃபஸ் பார்க்கரை பார்க்கிறேன். அவரது படங்களின் டைட்டில்களே படங்களுக்கான வித்தியாசங்களை அழகாக சொல்கிறது. கனவுகளோடு வாழ்க்கையை துவங்க ஆரம்பிக்கும் சமயத்தில் அந்த கனவுகளை மொத்தமாக அழிக்க நினைக்கின்ற, அழித்துக் கொண்டிருக்கின்ற சில ஆட்களைப் பற்றிய படமாக இது உருவாகி இருக்கிறது, அமெரிக்காவை தான் சிட்டி ஆப் ட்ரீம்ஸ் என்று சொல்வார்கள், ஆனால் அங்கே தான் இது போன்ற விஷயங்கள் இருக்கின்றன என்பதை பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டி இருக்கிறார், எல்லா இடங்களிலும் குழந்தைகள் துன்புறுத்தப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது, அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது யாருக்குமே தெரியாத ஒரு கேள்வியாகவே இருந்து கொண்டிருக்கிறது, இது மாதிரியான படங்கள் மூலமாக இந்த செய்திகள் சென்று சேரும்போது மக்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன் பேசும்போது,

“கம்பத்தில் பிறந்து அமெரிக்கா சென்று இப்படி சிட்டி ஆப் ட்ரீம்ஸ் படம் எடுத்து கனவோடு இங்கே திரும்பி வந்திருக்கிறார் ரூஃபஸ் பார்க்கர். இதன் டீசரை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.. இங்கே தமிழ்நாட்டில் ஒரு படம் பண்ணுவதற்குள் உயிர் போய்விடுகிறது… ஆனால் ஹாலிவுட்டில் படம் எடுத்துவிட்டு தற்போது தமிழ்நாட்டிற்கும் அதைக்கொண்டு வந்து போட்டுக்காட்ட வந்திருக்கிறார்… தமிழனுக்கான பெருமையாக இதை உணரலாம். அதிபர் ட்ரம்ப் அங்கிருந்து விசா இருப்பவர்களை கூட இங்கே அனுப்பி வைக்கிறார். அப்படியே இந்த 12 மில்லியன் குழந்தைகளையும் இங்கேயே அனுப்பி வைத்து விடுங்கள்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் ரூஃபஸ் பார்க்கர் பேசும்போது,

“இந்த படத்தின் ஸ்கிரிப்ட் என்னிடம் வந்தபோது, அதை படித்துவிட்டு இரண்டு நாட்கள் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை,. ஏனென்றால் அமெரிக்காவில் இப்படி ஒரு விஷயம் நடக்கிறது என்பதை பெரும்பாலும் வெளியில் உள்ள மக்களுக்கு தெரியாது. அதுவும் லாஸ் ஏஞ்சல்ஸில் இது அதிகப்படியாக நடக்கிறது. இந்த படம் கமர்சியலாக எப்படி வரும் என நினைக்காமல் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த படத்தை பண்ணியே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். 2023லேயே இந்த படத்தை முடித்து விட்டாலும் படத்தை ரிலீஸ் செய்வதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, மற்ற நாடுகளின் ஏழ்மையை படம்பிடித்து காட்டத்தான் விரும்புவார்கள். ஆனால் நான் அமெரிக்காவின் இப்படி இருண்ட பக்கத்தையே படமாக எடுத்ததால் தான், இதை வெளியிடுவதற்கு பலரும் தயங்கினார்கள். இருந்தாலும் பொறுமையாக காத்திருந்து ஒவ்வொருவராக அணுகி படம் படம் பார்க்க செய்தேன். படம் பார்த்த ஹாலிவுட் பிரபலங்கள் மூலமாக படம் குறித்த தகவல்கள் வெளியே வரவே, அதன்பிறகு இந்த படத்தை திரையிட பலர் முன் வந்தனர்.. அந்த வகையில் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகள் வரை திரையிடும் அளவிற்கு கொண்டு வந்தேன். இதற்காக நானே என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கினேன். ஒரு வருடம் தாமதம் ஆனாலும் கடைசியில் நினைத்தபடியே படம் வெளியானது. அதன்பிறகு கொஞ்ச நாட்களில் டாக் ஆப் த டவுன் ஆக மாறியது. அந்த படத்தை இங்கே திரையிடுவதில் பெருமை கொள்கிறேன்” என்றார்..

மீண்டும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ரூஃபஸ் பார்க்கர், “அடுத்ததாக இரண்டு ஹாரர் த்ரில்லர், ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் மற்றும் இன்னொரு திரில்லர் என நான்கு படங்களுக்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழில் நல்ல கதை கிடைத்தால் இங்கே படம் பண்ணவும் தயாராக இருக்கிறேன். ஆஸ்கர் அகாடமியில் உள்ள லைப்ரரியில் இந்த படம் இடம் பிடித்துள்ளது. எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. ஆஸ்கரில் திரையிடப்படும் சில படங்களுக்கு கூட இந்த லைப்ரரியில் இடம் கிடைப்பது இல்லை. படம் எடுக்கும் வரை தான் எனக்கு சிரமங்கள் இருந்தது. படம் வெளியான பிறகு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் தேடி வந்தன என்று கூறினார்.

ரூஃபஸ் பார்க்கர் பற்றி

தென் தமிழகத்தின் கம்பம் பள்ளத்தாக்கில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒரு தொழிலதிபராக மிகப்பெரிய வெற்றியை கண்டவர் தமிழர் ரூஃபஸ் பார்க்கர் அவர்கள். சிறுவயது முதல் திரைக்கலை உருவாக்கத்தின் மீதான தனியாத பற்றின் காரணமாக, 2014-ல் அமெரிக்காவில் P2 FILMS என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைதுவக்கி, ‘STARVE’ என்கிற ஒரு ஹாரர் படத்தை தயாரித்து அமெரிக்க ஹாலிவுட் திரைஉலகில் ஒரு வெற்றித் தயாரிப்பாளராக முத்திரைபதித்தார்…

‘STARVE’ திரைப் படம் SITGES போன்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பாராட்டுகளை பெற்றது. ‘STARVE’ திரைப்படம் தந்த வெற்றியைதொடர்ந்து, ‘WILD NIGHTS WITH EMILY’ என்கிற திரைப்படத்தை தயாரித்தார்…இந்த திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைஅடைய, …அடுத்தடுத்து, ஸ்பைடர் மேன் திரைப்படம் மூலம் பிரபலமான ஆண்ட்ரூ கேர்பீல்ட் நடிப்பில் உருவான ‘UNDER THE SILVERLAKE’ திரைப்படம்…பின்னர் ‘FLINCH’ திரைப்படம் என. ரூஃபஸ் பார்க்கர் அவர்களின் உன்னதமான திரைப்பயணம் மிக நிதானமாக பெரும் பெரும் வெற்றிகளைநோக்கி பயணித்தது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *