பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்

கிருஷ்ண பரமாத்மா சொன்ன பிரபஞ்ச தர்மத்தை மையப்படுத்தி உருவாகும் ‘தொட்டுத் தொடரும் கர்மா’
உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தொட்டுத் தொடரும் கர்மா’. ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நாயகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபலமான பல குணச்சித்திர நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்.

கிரைம் திரில்லர் கதையம்சத்தில் இந்த படம் உருவாகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா “பெண்ணின் மானம் காப்பதே பிரபஞ்ச தர்மம்” என சொல்லி இருக்கிறார். அப்படி பெண்ணின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியவர்கள், மானத்தை காக்கத் தவறியவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், உதவி செய்ய மனமின்றி நகர்ந்தவர்கள் என யாருமே இந்த பூமியில் வாழ தகுதி இல்லாதவர்கள். அவர்களை நிச்சயம் கர்மா தண்டிக்கும். மகாபாரத போரில் அதுதான் நடந்தது.



சாகும் தருவாயில் கூட துரியோதனன் கிருஷ்ணரிடம், “இந்த மகாபாரத போரையே நீ அதர்மத்தின் வழியில் தான் நடத்துகிறாய் கிருஷ்ணா” என்று கூறுவார். அதற்கு கிருஷ்ணன், “மற்ற வேறு எந்த காரணங்களையும் விட ஒரு மன்னனாக இருந்து உன் சபையிலேயே ஒரு பெண்ணின் மானத்தை காக்க நீ தவறி விட்டாய். அதன் வழியாகத்தான் இந்த போர் நடந்தது” என்று கூறியிருப்பார். இதனை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இயக்குநர் எம்எஸ்எஸ் கூறும்போது, “கலியுகத்தில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் கடவுள் மனித உருவில் வந்து அவற்றை அழிப்பார் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மீதான அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்ல அதிகார வர்க்கத்தினர், பண வசதி படைத்தவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு அதர்மத்தின் வழியில் தான் நாம் தண்டனை வழங்க வேண்டி இருக்கிறது. பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கு கர்மா பின் தொடர்ந்து வந்து தண்டனை கொடுக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி இந்த படம் உருவாகிறது. வரும் ஜனவரி மாதம் தை பிறந்ததும் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, விரைவில் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
மக்கள் தொடர்பு ; A.ஜான்