திரைப்படத்திற்கு கதாநாயகனையும் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் விட முக்கியமான ஒன்று தேவை பாக்யராஜ் ! ‘சேவகர்’ படம் நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை!!

Share the post

இயக்குநரையும் தயாரிப்பாளரையும் விட முக்கியமான ஒன்று தேவை பாக்யராஜ் ! ‘சேவகர்’ படம் நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை : விநியோகஸ்தர் ஜெனிஷ் பேச்சு ! திரைப்படத்திற்கு கதாநாயகனையும் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் விட முக்கியமான ஒன்று தேவையாக உள்ளது என்று இயக்குநர் கே .பாக்யராஜ் ஒரு திரைப்பட விழாவில் கூறினார். இது பற்றிய விவரம் வருமாறு: சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’.இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் ஊடகத்தினர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது. இப்படத்தை திரையரங்குகளில் ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனத்தின் சார்பில் வெளியிடும் விநியோகஸ்தர் ஜெனிஷ் விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். அவர் பேசும்போது, ” இந்தப் படத்தின் அறிமுக விழாவைப் பெரிதாக நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் ஆசைப்பட்டார். அதன்படி இன்று அரங்கு முழுதும் நிறைந்த பார்வையாளர்களோடு இந்த விழா நடைபெறுகிறது. இந்தப் படத்தின் கதை விஜய்க்காக உருவாக்கப்பட்டது. அவரை வைத்து இயக்குவதற்காக எழுதப்பட்ட கதை இது என்று கூறும் போது, கதை எப்படிப்பட்டது என்று புரியும். அப்படிப்பட்ட கதையில் பிரஜின் நடித்துள்ளார். சென்சாரிலேயே இந்தப் படத்தைப் பாராட்டினார்கள். இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கும்படியான படமாக இருக்கும் .எந்த நல்ல முயற்சிக்கும் ஆதரவு தரும் ஊடகங்கள் இதற்கும் ஆதரவு தர வேண்டும். ” என்றார். தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ் பேசும்போது, ” எனக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம் ஈடுபாடு உண்டு. அதனால் கேரளாவில் இருந்து இங்கே வந்து சினிமாவில் நுழைய வேண்டும் என்று பல நாட்கள் அலைந்தேன். ஒரு துணை நடிகராகக் கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு நன்றாகப் படித்து அமெரிக்கா சென்றேன். அங்கே தபால் துறையில் 28ஆண்டுகள் வேலை பார்த்தேன். இப்போது ஓய்வு பெற்றுவிட்டு அதே சினிமா ஆர்வத்துடன் தான் இந்தியா திரும்பினேன். அந்த ஆர்வத்தை அணைய விடாமல் வைத்திருந்தேன். மலையாளத்தில் சில படங்கள் தயாரித்தேன், நடித்தேன். இங்கே பாக்யராஜ் சார் வந்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. பாக்யராஜ் சாரின் அந்த 7 நாட்கள் என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம். அவர் இங்கே வந்ததில் எனக்குப் பெருமை. ஏனென்றால் அவர்களது மனைவி பூர்ணிமா அவர்கள் மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் காலத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் ஆக விளங்கியவர்.அவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.அவர் படப்பிடிப்பில் இருப்பதால் இங்கே வர முடியவில்லை. சினிமா என்பது என் கனவு.எனக்குப் பணத்தைவிட நல்ல படம் எடுப்பது தான் முக்கியம். இந்தப் படத்தின் மூலம் சம்பாதித்தால் வேறு பெரிய நல்ல படம் செய்வேன். எனவே மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று கூறினார். ‘சேவகர்’ படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் பேசும்போது , “எனக்கு தமிழ் நாட்டின் மீது, திரை உலகத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு . நல்ல நல்ல புதிய முயற்சிகளை வரவேற்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். படத்தைப் பற்றி நான் பெரிதாகப் பேச விரும்பவில்லை .என் படம் பேசப்பட வேண்டும் என்று தான் நான் நினைக்கின்றேன்” என்று கூறினார். கதைநாயகி ஷானா பேசும்போது, ” எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும் .முதல் படமாக இந்தப் படம் அமைந்தது மிக்க மகிழ்ச்சி அனைவரும் ஆதரவு தர வேண்டும் “என்றார். படத்தின் நாயகன் பிரஜின் பேசும் போது, ” ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு நல்லது செய்யும் சேவகர்கள் நாலு பேர் இருப்பார்கள்.அவர்கள் ஊருக்கு எதாவது நல்லது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஒரு குழுவாக இருப்பார்கள். அப்படி நல்லது செய்பவர்களைத் தடுக்கும் தீய சக்திகள் இருப்பார்கள். அப்படி நல்லது செய்யும் சேவகனும் அவனை தடுக்கும் தீய சக்திகளையும் பற்றிச் சொல்வது தான் இந்தப் படம். அப்படி ஒரு பாத்திரத்தில் தான் நான் நடித்துள்ளேன். இதில் பலரும் படத்திற்காக உழைத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள். ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று தான் நானும் சினிமாவில் 18 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றார். இயக்குநர் நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது, “இந்தச் சிறிய படத்திற்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்தது ஆச்சரியமாக உள்ளது. பிரஜின் எனக்கு பதினைந்து ஆண்டு காலமாக நட்புள்ள தம்பி. நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோது தூங்காமல் இருப்பதற்காக இரவில் ஆட்டோ ஸ்டாண்டில் கதை சொல்வேன் . அப்படி சொன்ன ஒரு கதை தான் கன்னி மாடம். என் மனநிலையுடன் தான் பிரஜினும் இருப்பதாக உணர்கிறேன். ஆனாலும் அவர், சரியான இடத்திற்கு வரவில்லை, வரவேண்டும். நான் கன்னிமாடம் படத்திற்கு பிரஜினை மனதில் வைத்து தான் இருந்தேன். தயாரிப்பாளரிடம் கூறியிருந்தேன். அவரும் சமதித்திருந்தார்.ஆனால் அந்தப் படத்திற்காக துறுதுறுவென உழைத்த ஸ்ரீராமுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தேன். இப்போது சொல்கிறேன் எனது அடுத்த படத்தில் பிரஜினைப் பயன்படுத்திக் கொள்வேன். இந்த படத்திற்காகத் தயாரிப்பாளர் பணத்துக்கு எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நேரில் பார்த்தேன். சிறிய படங்களுக்கு இந்த சினிமாவில் வளர்ந்தவர்கள் ஆதரவு கொடுப்பதில்லை.இந்த நிலையில் இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் எல்லா சின்ன படங்களுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார். அதேபோல் கே. ராஜன் சார் அவர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார் .இப்படி உதவி செய்கிற மனநிலையில் இருக்கும் இருவரும் இங்கே வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த அவை சிறக்கும். இது பற்றி நான் வெற்றிமாறன் அவர்களிடம் கேட்டபோது அவர் எனது அடுத்த ‘சார்’ படத்திற்கு ஆதரவு கொடுத்தார். வெற்றிமாறன் வழங்கும் சார் என்றவுடன் அந்த படத்தின் உயரம் எங்கோ சென்று விட்டது. எனது படத்தின் விழாவுக்கும் அவர் வருகிறார். ஊடகங்கள் சிறிய படங்களின் குறைகளை அதிகம் சொல்லாமல் ஊக்கப்படுத்த வேண்டும். ” என்றார். கதை வசனகர்த்தா வி. பிரபாகர் பேசும் போது, “சின்ன படம் பண்ணும் தயாரிப்பாளர் தான் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறார்கள் . பல குடும்பங்களை வாழ வைக்கிறார்கள் .இந்த தயாரிப்பாளர் தமிழ் பார்வையாளர்களை நம்பி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இயக்குநரின் நம்பிக்கையை அறிய முடிந்தது .இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்” என்றார். திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் பேசும்போது, “தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டுக்குப் படம் எடுக்க, கேரளாவில் இருந்து வந்திருக்கும் இவர்களை வரவேற்கிறேன். அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். அவர்களது துணிச்சலைப் பாராட்டுகிறேன் . ஒரு திரைப்படம் எடுக்க இயக்குநரை விட, நடிகர்களை விட தயாரிப்பாளர் முக்கியம். தமிழில் ஆண்டுக்கு 200 படங்கள் வந்தாலும் 150 தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். இதுதான் நிலைமை. இதற்கு யார் காரணம்? 25 நாட்களில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் ராமநாராயணன் குறுகிய காலத்தில் நன்றாகத் திட்டமிட்டுப் படத்தை எடுத்து அதிக அளவில் வெற்றிகளைக் கொடுத்தவர். 20 அல்லது 28 நாட்களில் ஒரு படத்தை முடித்து விடுவார்.ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அவர் கதாநாயகனை நம்பாமல் விலங்குகளை நம்பிப் படம் எடுத்தார் ,வெற்றி பெற்றார். எந்த ஒரு நடிகர் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த நடிகர் வெற்றி பெறுவார். அந்த வகையில் பிரஜினுக்கு நல்ல வெற்றி காத்திருக்கிறது. அண்மைக்காலமாகப் பெரிய கதாநாயகர்கள் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடவில்லை. சிறிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன. குட் நைட், டாடா, போர் தொழில் இப்போது வந்துள்ள வாழை போன்ற சிறிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழ் மண்ணை அதன் பண்பாடு கிராமியத்தை சரியாகச் சொன்னால் மக்கள் ஏற்கத்தான் செய்கிறார்கள். இந்த சேவகர் படம் நிச்சயம் வெற்றி பெறும். தயாரிப்பாளர் மனதிற்கும் இயக்குநரின் நம்பிக்கையும் உரிய பலன் கிடைக்கும். இப்போது அதிகாரிகளிடம் 70 சதவீதம் கையூட்டு வாங்குகிறார்கள். நேர்மையானவர்கள் 30 சதவீதம் தான் இருக்கிறார்கள். அக்கிரமம் நடக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் காரணம். எதற்கெடுத்தாலும் முதலமைச்சரைக் குறை கூறுகிறார்கள். இவனுக்கு பஸ் தாமதமாக வந்தால் கூட முதலமைச்சர் என்ன செய்கிறார் என்கிறான். எல்லாவற்றையும் முதலமைச்சர் எப்படி கவனித்துக் கொண்டிருக்க முடியும்? சம்பந்தப்பட்ட இலகா அதிகாரிகள் தான் அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் .முதல்வரும் எத்தனையோ சந்திப்பு போட்டு அதிகாரிகளிடம் பேசுகிறார். சம்பந்தப்பட்டவர்கள் சரியாகப் பணியாற்ற வேண்டும். சமுதாய சீர்கேட்டைத் தட்டிக் கேட்கும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். அக்கிரமம் நடைபெறும் போது நாம் கண்டிக்க வேண்டும். தண்டிப்பதை அரசு பார்த்துக் கொள்ளும். இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார். இயக்குநர் மோகன் ஜி பேசும்போது, ‘ எனது முதல் படத்தின் கதாநாயகன் பிரஜின். அவருக்காகத் தான் நான் இங்கே வந்தேன் .அவருக்கு நல்லதொரு வெற்றி கிடைக்க வேண்டும் .அவருடைய உழைப்புக்குப் பெரிய வெற்றி காத்திருக்கிறது. இந்தப் படத்தை மலையாளத்தில் வந்து இயக்குநர் இயக்கி உள்ளார். கேரளாவில் உள்ள அரசியல் வேறு, தமிழ்நாட்டு அரசியல் வேறு. இதில் எப்படி செய்திருக்கிறார் என்று பார்ப்போம். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்கிறது. இங்கே அப்படி இல்லை. இப்போது இங்கே கம்யூனிசம் அதிகம் பேசப்படவில்லை. இளைஞர்கள் கம்யூனிசம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தோழர் ஜீவா என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த படம் வெற்றி பெற வேண்டும் ” என்று கூறி வாழ்த்தினார். இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது, ” தமிழ் ஆட்களை நம்பி இங்கே படம் எடுக்க வந்திருக்கும் கேரள தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. எங்கிருந்து வந்தாலும் தமிழ் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். இங்கே அப்படிப்பட்ட ஆட்கள் தான் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் இல்லை என்றால் இயக்குநர் இல்லை நடிகர் இல்லை என்று கே. ராஜன் சொன்னார் .கதை இல்லை என்றால் தயாரிப்பாளரே இல்லை .கதை இல்லை என்றால் சினிமாவில் எதுவுமே முடியாது. ஒருவருக்கு சினிமா பிடித்து விட்டது என்றால் அது விடவே விடாது. இந்தத் தயாரிப்பாளர் அப்படித்தான் இங்கே வந்திருக்கிறார் . அவர் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வந்திருக்கிறார். இந்தப் படத்தை 25 நாட்கள் சிரமப்பட்டு முடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு செய்வது எத்தனை நாட்கள் என்பது முக்கியமல்ல. 16 வயதிலே படம் கூட 32 நாட்களில் எடுக்கப்பட்டது தான். எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது .எவ்வளவு நாட்கள் என்பதை வைத்துப் படத்தைப் பற்றி நாம் முடிவு செய்ய முடியாது. அப்படித் திட்டமிட்டு இந்த படத்தை திட்டமிட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளரை இந்தப் படம் காப்பாற்றும். சினிமா ஆசை யாரையும் விடாது என்பது பற்றி யோசிக்கும் போது ஒன்று நினைவு வருகிறது. ஏற்காட்டில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஒரு டாக்டர் அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் .அவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர் வீட்டில் மிருதங்கம் வைத்து வாசித்துக் கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர் சினிமா ஆர்வத்தில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தபோது அவர் படிப்பை பாதியில் விட்டு விட்டு ஓடி வந்தவர். அப்பா அவருக்காக பெரிய ஹாஸ்பிடல் கட்டியிருந்தார். ஒரு வழியாக அவரைச் சமாதானப்படுத்தி படிக்க வைத்து டாக்டர் ஆக்கி இருக்கிறார். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அவர் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு நான் ராசுக்குட்டி படத்தில் ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடிக்க வைத்தேன்.அவருக்கு அதில் மிகவும் மகிழ்ச்சி – அதுவும் ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடித்தது மிக மிக மகிழ்ச்சி. அதே போல் லால்குடி முனுசாமி என்பவர் இன்னொரு ரசிகர் .அவரை எல்லாரும் ஊமை என்பார்கள். அவர் என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வருவார்.உதட்டு அசைவை வைத்து என்ன பேசுவது என்று கண்டுபிடிக்கும் லிப் ரீடிங் நன்றாக வரும். சரியாகச் செய்வார் .அவரை பவுனு பவுனுதான் படத்தில் டி டி ஆர் ஆக நடிக்க வைத்து என்னிடமே பேச வைப்பது போல் ஒரு காட்சியில் நடிக்க வைத்தேன்.நான் எழுதிக் கொடுத்தபடியே உதட்டு அசைவு செய்தார்.டிக்கட் இல்லாமல் வந்திருக்கிறாயே என்று என்னுடன் அவர் பேசுவது போன்ற காட்சி. அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து படத்தில் காட்டினோம். படமாக வந்த போது ஊரில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியம். அவர் எப்படிப் பேசினார் என்று .இப்படி சினிமாவில் நிறைய நிஜ கேரக்டர்களைச் சந்தித்து இருக்கிறேன் . இங்கே இசையமைப்பாளராக இருக்கும் இந்த மோகன் எனக்கு சிங்கு என்றுதான் பழக்கம். பல ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் வலம் வந்தவர். ஏவிஎம் ஸ்டுடியோவையே சுற்றிச் சுற்றி வருவார். எப்படியாவது ஒரு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். பல ஆண்டுகள் இருந்தவருக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் அண்மையில் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்திருந்தேன். படத்தின் பெயர் 35 .அதில் பெரிய கதாநாயகனா பெரிய நடிகர்களோ கிடையாது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட கதை .சின்ன சின்ன சராசரியான நடிகர்களை வைத்து தான் எடுத்திருந்தார்கள். அமீர்கான் எடுத்தாரே தாரே ஜமீன்பர், அது போல ஒரு சின்ன பையனை மையமாக வைத்து தான் அந்தக் கதை நகரும் .ஆனால் அந்தப் படம் இப்போது வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ளது. பெரிதும் பேசப்படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் மக்கள் நல்ல கதையைப் பார்க்கிறார்கள் . பொதுவாக எப்போதும் தெலுங்கில் பெரிய ஐட்டம் சாங் , சண்டைக் காட்சிகள், பெரிய ஸ்டார்கள் என்று இருந்தால்தான் படம் பார்ப்பார்கள் .இப்போது அவை இல்லாமல் கதையைப் பார்க்கிற பழக்கம் தெலுங்கு திரை உலகத்திலேயே வந்துவிட்டது .அந்தப் படத்தை தமிழில் வெளியிடும் நோக்கத்தில் தமிழில் பேச வைத்து எடுத்தார்கள். விரைவில் தமிழில் வெளியாகும். நல்ல படமாக இருந்தால் தெலுங்கு ரசிகர்களும் பார்ப்பார்கள். தமிழ் ரசிகர்களும் பார்ப்பார்கள். தமிழில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். நல்ல படம் எடுத்து தமிழ் ரசிகர்களை நம்பினால் கை கொடுப்பார்கள். நன்றாக இருந்தால் வரவேற்பு தருவார்கள் .இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று கூறினார் . விழாவில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *