கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையில் இதுவரையிலும் சொல்லப்படாத விஷயத்தை ‘ஜமா’ படம் பேசுகிறது..!
கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையில் இதுவரையிலும் சொல்லப்படாத விஷயத்தை ‘ஜமா’ படம் பேசுகிறது..!
‘கூழாங்கல்’ திரைப்படத்தை தயாரித்த ‘லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஜமா’.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையில், இதுவரை சொல்லப்படாத அவர்களது வாழ்க்கைப் போராட்டம் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
கதையின் நாயகனாக பாரி இளவழகன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சேத்தன் நடித்துள்ளார். மேலும் அம்மு அபிராமி, ஸ்ரீகிருஷ்ண தயாள், கே.வி.என்.மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
தெருக்கூத்து கலைஞர்களின் பாரம்பரியத்தில் வந்த அறிமுக இயக்குநரான பாரி இளவழகன் இந்தப் படத்தில் தயாரித்து, நடித்து, இயக்கியிருக்கிறார்.
‘ஜமா’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ‘ஜமா’ திரைப்படம் குறித்து இயக்குநர் பாரி இளவழகனும், நடிகர் சேத்தனும் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது படத்தின் இயக்குநரான பாரி இளவழகன் பேசும்போது, ‘’ இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலரை பார்க்கும்போதே இது தெருக்கூத்து கலைஞர்கள் பற்றிய படம் என்பது தெரிந்துவிடும்.
அவர்கள் நன்றாகவும், வசதியாகவும், மகிழ்ச்சியாகவும்தான் இருக்கிறார்கள். ஆனால், பல சினிமாக்களில் அந்தக் கலை பற்றியும், அந்தக் கலைஞர்களைப் பற்றியும், தப்பும் தவறுமான செய்திகளைக் காட்டுகிறார்கள்.
அதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கும். காரணம், தெருக்கூத்து கலை பின்னணியில் வாழ்ந்தவன் நான். எனது ஊரில், எனது உறவினர்கள் பலர் இன்னமும் தெருக்கூத்து கலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நான் படம் இயக்கலாம் என்று நினைத்த நேரத்தில் நமது கதையையே சொல்லலாமே என்று தோன்றியது. அதனால்தான் இந்தக் கதையை தேர்வு செய்தேன்.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையில் ஆண் கலைஞர்கள் பெண் வேடம் போடும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் அதிகம். அவர்களுடைய சொந்த ஊரிலேயே அவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள். கலை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றாலும் அங்கேயும் அவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். இதனால், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய இத்தகைய பிரச்சனையைத்தான் இந்த ‘ஜமா’ படத்தில் எதார்த்தமாக சொல்லியிருக்கிறேன்.
பெண் வேடம் போடும் ஆண்களுக்கு ஜமாவின் எந்தவித அங்கீகாரமும் இருக்காது. அவர்களை யாரும் நம்ப மாட்டார்கள். சொல்ல போனால் அவர்களால் இறுதிவரை வாத்தியார் ஆக முடியாது என்ற நிலைதான் இருக்கிறது. அப்படி ஒரு நிலையை மாற்றுவதற்கான முயற்சிதான் இந்த படம்.
நான் நடிகனாக வேண்டும் என்று தான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். பல வருடங்களாக சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தேன், அதே சமயம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வந்தேன்.
இந்தக் கதையை எழுதி முடித்த பிறகு என் நண்பர்களைகூட இயக்குநராக்கி இந்த படத்தை எடுத்திருக்கலாம். ஆனால், நான் பார்த்த ஒரு வாழ்க்கையை, நானே இயக்கினால்தான் சரியாக வரும் என்று தோன்றியது. அதனால்தான் இந்தப் படத்தை நானே இயக்கியிருக்கிறேன்.
நான் தயாரிப்பாளர்களிடம் இந்தக் கதையை சொன்னபோது அவர்கள் மிக எளிதாகப் புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு சினிமா ஞானம் என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. அவர்களும் இந்தக் கதையை நிச்சயம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் எனக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து, ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.