புஜ்ஜி அட் அனுப்பட்டி –
சினிமா விமர்சனம்
இந்தப் படத்தை இயக்குநர்
ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக்
விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ்
ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – அருண்மொழி சோழன்.
ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறு
குழந்தைகளின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம்.
அனுப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் முருகேசன், சித்ரா
தம்பதியர்களின் பிள்ளைகள்தான் சரவணனும், துர்காவும். இவர்கள் இருவரும் ஒரு
நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, பிறந்து 20 நாட்களான
ஒரு கருப்பு ஆட்டுக் குட்டி அனாதையாக இருப்பதைப் பார்க்கிறார்கள்.
அதைத் தன் வீட்டிற்கு எடுத்து வருகிறாள் துர்கா. அசைவ
பிரியனான சரவணன் அந்த ஆட்டுக் குட்டியை எப்போது வெட்டி
சாப்பிடலாம் என்று ஏங்குகிறான். ஆனால் தங்கை துர்காவோ அந்த
ஆட்டுக் குட்டிக்கு ‘புஜ்ஜி’ என்ற பெயர் வைத்து அன்புடன் வளர்க்கிறாள்.
அதே ஊரில் வசிக்கும் சிவா இந்த இருவரிடமும்
நெருக்கமாக பழகுகிறான். ஒரு கட்டத்தில் தொலைந்து
போன ஆட்டுக் குட்டியை தேடி வருகிறார்கள் ஷஅதன் உரிமையாளர்கள்.
ஆட்டுக் குட்டியை அவர்கள் தூக்கிச் செல்ல முயல..
துர்காவுக்காக சிவா அந்த ஆட்டுக்குட்டியை
விலை கொடுத்து வாங்கித் துர்காவிடம் கொடுக்கிறான்.
துர்காவின் அப்பன் முருகேசன் ஒரு குடிகாரன். ஒரு நாள் குடிப்பதற்கு பணம்
இல்லாததால் அந்த ஆட்டுக் குட்டியை
தூக்கிச் சென்று விற்றுவிடுகிறான் முருகேசன்.
இப்போது விற்பனையான ‘புஜ்ஜி’யை மீட்க
சரவணனும், துர்காவும் நினைக்கிறார்கள். ஆட்டுக்குட்டியைத் தேடி
அலைகிறார்கள். கடைசியில் அந்த
ஆட்டுக் குட்டி
கிடைத்ததா.. இல்லையா..
என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.
துர்கா மற்றும் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
பிரணதியும், கார்த்திக்
விஜய்யும்தான் படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளனர்.
நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாக நடித்துள்ளார்
துர்காவாக நடித்திருக்கும் பிரணிதி. ஆட்டுக் குட்டியிடம் பாசமாக இருப்பது..
வளர்ப்பது.. அதைக் காணவில்லை என்றதும்
கதறி அழுது, அதைத் தேடி அலைந்து, திரிந்து, ஆர்வத்துடன் சுற்றித்
திரிவதுமாக அந்த வயதுக்கே உரிய நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
அண்ணனாக நடித்திருக்கும் கார்த்திக் விஜய்யும் தங்கைக்கு
ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். ஆட்டுக் குட்டியைக்
காணவில்லை என்று தவிக்கும் துர்காவைத் தேற்றுவதும், துர்காவின்
பிடிவாதத்தால் ஆட்டைத் தேடி அலைந்து திரிவதுமாக தனது
நடிப்பையும் நிறைவாகவே கொடுத்திருக்கிறார் கார்த்திக் விஜய்.
துவக்கக் காட்சியில், ஆட்டுக் கறியை வாங்கும்போது காட்டும்
சந்தோஷம், கடைசியில் ஆட்டுக்காக தங்கையின் அழுகையைப் பார்த்துவிட்டு, “இப்போ
நான் கறி திண்றதையே விட்டுட்டேன்” என்று அப்பாவியாய் சொல்லும்போது கை தட்ட வைத்திருக்கிறார்.
இவர்களுக்கு உதவி செய்யும் தர்ஷினியும் தனது சிறப்பான நடிப்பினைக்
காண்பித்திருக்கிறார். எப்போதும் சோகமான முகத்துடன் இருந்தாலும்
உயிர்களிடத்தில் அன்பு காட்டத் துடிக்கும் அவரது செயலும், நடிப்பும் பாராட்டுக்குரியது.
குழந்தைகளிடம் பாசம் காட்டி, குழந்தைகளுக்காக அல்லல்படும்
கமல்குமார், நேர்மையான காவல்துறை
அதிகாரியாக நடித்திருக்கும் லாவண்யா கண்மணி,
கறிக்கடை நடத்தும் இஸ்லாமியராக நடித்தவர் உள்ளிட்ட
அனைவருமே தங்களால் முடிந்த நடிப்பை காண்பித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அருண்மொழிச் சோழனின் ஒளிப்பதிவில்
உண்மையான கிராமத்து அழகு கண் முன்னே தெரிகிறது. மாதேஸ்வரனின் படத்
தொகுப்பு படத்துக்குக் கிடைத்திருக்கும் பலம். ஒரு பக்கம் ஆட்டுக்
குட்டியைத் தேடி குழந்தைகளும், அவர்களைத் தேடி
பண்ணையாரும், காவல்துறை அதிகாரியும் இன்னொரு புறம் தேடுதல் வேட்டை
நடத்த.. மூன்றாவதாக ஒரு வில்லனும் இவர்களைத் தேடி
வருவதையெல்லாம் ருசிகரமாகப் பார்க்கும்படி படத் தொகுப்பு செய்துள்ளார்.
இது குழந்தைகளுக்கான படம்தான். ஆனால்
குழந்தைத்தனமாக இன்றி அனைத்து வயதினரும் ரசிக்கும்
வகையில் படத்தை உருவாக்கியிருக்
கிறார்கள்.
கிராமத்து சிறுவர்களின் வாழ்க்கையாக துவங்கும் கதை, கடைசியில் க்ரைம்
கதையாக முடிந்திருக்கிறது. பாசமுடன் வளர்த்தால்
அது ஆட்டுக் குட்டியாகவே இருந்தாலும் அதைவிட்டுப் பிரிய
யாருக்கும் மனம் வராது. நம் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் ஒன்றாகிவிடும். இந்த உண்மையைத்தான்
இந்தப் படத்தில் அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார் இயக்குநர்.
அதே நேரம் இன்னொரு பக்கம் மதுவின் கொடுமையையும்
சொல்லியிருப்பது.. தீயவர்கள் மட்டுமில்லை.. நல்லவர்களும் நம்மைச்
சுற்றியிருப்பார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருப்பது..
இறுதிவரை பரபரப்பு குறையாமல் கதையை நகர்த்திச் சென்றிருப்பது என்று படத்தின்
மேக்கிங்கில் இயக்குநர் ராம் கந்தசாமி பாராட்டைப் பெறுகிறார்.
இம்மாதிரியான படங்களை பெற்றோர்கள் குழந்தைகளுடன் பார்க்க
வேண்டும்.
அப்பொழுதுதான் ஒரு உயிரின் மதிப்பு குழந்தைகளுக்கும் புரியும்.
அவசியம் பார்க்க வேண்டிய படம்..!