‘குற்றப்பின்னணி’ திரைப்பட விமர்சனம்
பழனியில் வசிக்கும் நாயகன் ‘ராட்சசன்’புகழ் சரவணன், அதிகாலையில் வீடு
வீடாக சென்று பால் வியாபாரம் செய்வதோடு, தண்ணீர் கேன் போடும்
வேலையும் செய்கிறார். இப்படி கடுமையாக உழைப்பவர் திடீரென்று
தான் வாடிக்கையாக பால் விற்பனை செய்யும் வீட்டுக்குள் புகுந்து
அங்கிருக்கும் பெண்ணை கொலை செய்கிறார். இந்த
கொலை வழக்கை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும்
நிலையில், மேலும் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருக்கும்
தம்பதியை சரவணன் கொலை செய்கிறார். இந்த இரண்டு
கொலைகளும்
ஒரேபாணியில்
நடந்திருப்பதால், போலீஸ் கொலையாளி யார்? என்பதை
கண்டுபிடிக்க முடியாமல் தவிக்க, மறுபக்கம் சரவணன் அப்பாவியாக அதே ஊரில் வலம்
வருகிறார். சரவணன் எதற்காக அவர்களை கொலை செய்தார்?, அவர் தான் கொலையாளி என்பதை
போலீஸ் கண்டுபிடித்ததா?
இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
‘ராட்சசன்’ படத்தில் வில்லனாக மிரட்டிய சரவணன், இதில் வில்லத்தனம் கலந்த
ஹீரோவாக மிரட்டியிருக்கிறார். பால் வியாபாரம், தண்ணீர் கேன் வியாபாரம்
செய்துக்கொண்டு அப்பாவியாக வலம் வருபவர், திடீரென்று கொடூரமான
கொலையாளியாக மாறும் காட்சிகளில்
நடிப்பில் வேறுபாட்டை காட்டி கவனம் ஈர்க்கிறார்.
தீபாவளி, தாட்சாயிணி, சிவா, ஹனிபா, பாபு,
நேரு, லால், அகமல், ஷர்விகா, கராத்தே ராஜா என மற்ற வேடங்களில்
நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவு எளிமையாக
இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை
ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.
கதாநாயகன் வசிக்கும் தோட்ட வீடு மற்றும் படத்தில் காட்டப்பட்ட லைவ் லொக்கேஷன்கள்
அனைத்தையும் காட்டிய விதம் படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் ஜித் இசையில், என்.பி.இஸ்மாயில் வரிகளில் பாடல்கள்
கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.
எழுதி இயக்கியிருக்கும் என்.பி.இஸ்மாயில், சமூகத்தில் நடக்கும் மிக
முக்கியமான குற்றத்தின் பின்னணி குறித்து பேசியிருப்பதோடு,
அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக
வைத்து நேர்த்தியான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.
செய்தித் தாள்களில் பல விஷயங்களை நாம் படித்துவிட்டு மிக சாதாரணமாக கடந்து
செல்கிறோம், ஆனால் அந்த விஷயம் நம் வாழ்வில் நடந்தால் மட்டுமே அதன்
பாதிப்பும், ஆழமும் நமக்கு தெரியும் என்பதை உணர்த்தும்
வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர்
என்.பி.இஸ்மாயில், தான் சொல்ல வந்ததை
மிக நேர்த்தியாகவும், நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார்.
மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும், கதை சொல்லல் மற்றும் காட்சிகளை கடத்திய
விதம் ஆகியவற்றால் படம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, நாயகன்
சைக்கிள் எடுக்கும் போதெல்லாம் யாரோ கொலை செய்யப்பட போகிறார்கள், என்று
உணர்த்துவது உள்ளிட்ட காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறது.
மொத்தத்தில், இந்த ‘குற்றப்பின்னணி’படம் குறையை மறந்து பார்க்க கூடிய நல்ல மெசேஜை சொல்ல வரும் படம்