J பேபி’ திரை விமர்சனம்!!
நீலம் புரொடக்ஷன்ஸ் – பா ரஞ்சித் தயாரித்து,
சுரேஷ் மாரி
இயக்கி வெளி வந்திருக்கும் படம் Jபேபி’!
ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயினி, இஷ்மத் பானு, சபிதா ராய், மாயா ஸ்ரீ மற்றும் பலர் நடித்து உள்ளனர்
இசை: டோனி பிரிட்டோ
இரண்டு பெண் பிள்ளைகள், மூன்று ஆண் பிள்ளைகளை பெற்றெடுத்த ஊர்வசி, அனைத்து பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டில் வசித்து வருகிறார்.
தனது பிள்ளைகள் போலவே அனைத்து பிள்ளைகளிடமும் அன்பு செலுத்தும் அவர், திடீரென்று காணாமல் போய்விடுகிறார்
காணாமல் போன அவர் கொல்கத்தாவின் ஹவுரா நகரில் இருப்பதாக அங்கிருக்கும் தமிழ் ராணுவ வீரர் மூலம் பிள்ளைகளுக்கு தகவல் கிடைக்கிறது.
அதன்படி, மூத்த மகன் மாறனும், இளையமகன் தினேஷும் அம்மாவை அழைத்துவர கொல்கத்தா செல்கிறார்கள்.
அவர் இருப்பதாக சொல்லப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று பார்க்கும் போது, அவர் அங்கிருந்து மகளிர் காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக சொல்கிறார்கள்.
அங்கே சென்று பார்த்தால், அவர் அங்கிருந்து ஓடிவிட்டதாக சொல்ல, பிள்ளைகள் அம்மாவை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதும், அவர் வீட்டை விட்டு வெளியேற என்ன காரணம்? என்பதும் தான் இப் படத்தின் கதை !.
பேபியம்மா போன்ற அம்மாக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார்கள், ஆனால் அவர்களை பிள்ளைகள் மிக சாதாரணமாக கடந்து செல்லும் சூழலில், அந்த அம்மாக்களின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஏக்கம் என அனைத்து உணர்வுகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும் என்பதை மனதில் ஆணி அடித்தது போல் பதிய வைத்திருக்கிறது இந்த படம்.
பேபியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி, குழந்தை உள்ளம் படைத்த முதியவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். “நானா நைனா உன்ன அடிச்சேன், நீ தானே அடிச்சே” என்று அப்பாவித்தனமாக தனது பிள்ளையிடம் கேட்டுவிட்டு, அடுத்த நொடியில் “நான் என்ன பன்றேன்னு எனக்கே தெரியல நைனா, என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்ட்டம்” என்று கண் கலங்கும் காட்சியில் நடிப்பு ராட்சசி என்பதை நிரூபிக்கிறார். இப்படி படம் முழுவதும் பலவிதமான உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும் ஊர்வசிக்கு இந்த படத்தின் மூலம் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்.
ஊர்வசியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மாறன், சிறந்த குணச்சித்திர நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். தம்பி மீது ஏற்பட்ட பகையை அவர் வெளிப்படுத்தும் விதமாகட்டும், தனது வழக்கமான டைமிங் வசனங்கள் மூலம் அவ்வபோது சிரிப்பதாகட்டும் அனைத்தையும் அளவாக செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
ஊர்வசியின் இளைய மகனாக நடித்திருக்கும் தினேஷ், தொப்பை வயிறுடன் கதாபாத்திரத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். குடும்பத்துடன் சேர முடியாமல் தவிப்பவர் தனது மனவலியை வெளிப்படுத்தும் காட்சியில் மாறனை மட்டும் அல்ல பார்வையாளர்களையும் யோசிக்க வைத்துவிடுகிறார்.
ஊர்வசியின் இளைய மகளாக நடித்திருக்கும் மெலடி டார்கஸ், மூத்த மகளாக நடித்திருக்கும் தாட்சாயிணி, தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, மாறனின் மனைவியாக நடித்திருக்கும் சபீதா ராய் என அனைவரும் நடுத்தர குடும்பத்து பெண்களை பிரதிபலிக்கும் வகையில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தில் பேபியம்மாவை கொல்கத்தாவில் காப்பாற்றி, அவர்களுடைய பிள்ளைகளிடம் சேர்த்த ராணுவ வீரரான சேகர் நாராயணன், அதே கதாபாத்திரத்தில் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் எந்தவித அனுபவமும் இல்லாத அவர் மிக சிறப்பாக நடித்திருப்பது.
ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக ரசிர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. ஊர்வசியின் ஒவ்வொரு அசைவுகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
டோனி பிரிட்டோவின் இசை காட்சிகளை உயிரோட்டம் மிக்கதாக நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது. படத்தொகுப்பாளர் சண்முகம் வேலுச்சாமி மற்றும் கலை இயக்குநர் ராமு தங்கராஜ், பார்வையாளர்கள் ஒரு திரைப்படம் என்பதை மறந்து படத்துடன் பயணிக்கும்படி பணியாற்றியிருக்கிறார்கள்.
தனது குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் சுரேஷ் மாரி, அந்த சம்பவத்தை உயிரோட்டம் மிக்க காட்சிகளோடு, உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்து ஒட்டு மொத்த பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.
கதாபாத்திர வடிவமைப்பு, காட்சிகளை கையாண்ட விதம், பேபியம்மா யார் ? என்பதை விவரிக்கும் விதம் அனைத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டு, படத்துடன் ரசிகர்களை பயணிக்க வைக்கும் இயக்குநர் சுரேஷ் மாரி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுப்பது உறுதி.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிள்ளைகள் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் அம்மாகள், வயதான பிறகு பிள்ளைகள் மீது அவர்களின் எதிர்பார்ப்பு எத்தகையது என்பதையும், ஆனால் அதை பற்றி எந்தவித யோசனையும் இன்றி பிள்ளைகள் அவர்களை மிக சாதாரணமாக கடந்து செல்வதால், அவர்களின் மனம் எத்தகைய நிலைக்கு தள்ளப்படுகிறது, என்பதை காட்சி மொழியின் மூலமாகவும், நடிகை ஊர்வசியின் நடிப்பின் மூலமாகவும் பார்வையாளர்களின் மனதுக்கு கொண்டு செல்லும் பணியை இயக்குநர் சுரேஷ் மாரி மிக சிறப்பாக செய்து ரசிகர்களின் மனங்களை வென்றுக்கிறார்.
மொத்தத்தில்,
இந்த ’J பேபி’-சுவாரஸ்யமாக உள்ளது .
K*இந்த ’J பேபி’-சுவாரஸ்யமாக உள்ளது .*