போர்’ திரை விமர்சனம் !!
டி சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா
தயாரித்து ,பிஜாய் நம்பியார் இயக்கி வெளிவந்து இருக்கும் படம் போர் !
அர்ஜுன்தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோஜாரியோ மற்றும் பலர் நடித்து உள்ளனர்!
இசை: சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி – பின்னணி இசை: மாடர்ன் டேப் ஸ்கோர் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்), கௌரவ் கோட்கிண்டி
மணிரத்னத்தின் மாணவரான இயக்குநர் பிஜாய் நம்பியார், தனது குருநாதர் பாணியில் மல்டி ஸ்டார்களுக்கான கதையை, சமூக பிரச்சனைகளின் பின்னணியில் சொல்லி வருகிறார்.
ஆனால், தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பிஜாயின் முயற்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது ‘போர்’ மூலம் மீண்டும் ஒரு முறை தமிழ் ரசிகர்களை வெல்ல முயற்சித்திருக்கும் பிஜாய் நம்பியார் வெற்றி பெற்றாரா? என்பதை பார்ப்போம்.
மருத்துவக் கல்லூரியின் மூத்த மாணவரான அர்ஜூன் தாஸ் மீது, இளைய மாணவர் காளிதாஸ் ஜெயராமுக்கு தனிப்பட்ட பகை இருக்கிறது.
இந்த பகையை தீர்த்துக்கொள்வதற்காக அவர் அர்ஜூன் தாஸ் தொடர்புடைய ஆட்களை சீண்டுவதோடு அதை கல்லூரி மோதலாகவும் மாற்ற முயற்சிக்கிறார்.
காளிதாஸின் எண்ணத்தை புரிந்துக்கொண்டு ஒதுங்கி செல்லும் அர்ஜூன் தாஸ், ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் பொங்கி எழு, என்ற ரீதியில் ஜெயராம் காளிதாஸ் தொடங்கிய போரை முடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
மறுபக்கம், கல்லூரியில் நடக்கும் மாணவர் தலைவர் தேர்தலில் அரசியல் தலைவரின் மகளை எதிர்த்து போட்டியிடும் பெண் மீது சாதி வன்கொடுமை நடக்கிறது.
அதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால், அரசியல்வாதியின் மகள் மீது போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய, அவருடைய அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இதனால், தன்னை எதிர்ப்பவர்களை ஒழித்துக்கட்ட முடிவு செய்யும் அரசியல்வாதியின் மகள், அதற்காக கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதலை தனக்கு சாதகமாக பயன்படுத்த, அதன் பிறகு என்ன நடக்கிறது, என்பது தான் ‘ இப்படத்தின் போர் !
நாயகனாக நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ், வழக்கும் போல் தனது குரல் மூலம் மிரட்டினாலும், இந்த படத்தில் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்.
பிரபு என்ற கதாபாத்திரத்தில் மூத்த மாணவராக, கோபக்கார இளைஞராக அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் அனல் பறக்கிறது.
அர்ஜூன் தாஸ் கதை தேர்வில் சற்று கவனம் செலுத்தினால் நிச்சயம் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோ ஆகலாம்.
இளைய மாணவராக நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம், முரட்டுத்தனமான தோற்றத்துடன், முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பள்ளியில் நடந்த துரோகத்தை மனதில் வைத்துக்கொண்டு, அர்ஜூன் தாஸ் மீது அவர் காட்டும் வன்மம் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் டி.ஜெ.பானு மற்றும் சஞ்சனா நடராஜன் இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். வில்லியாக நடித்திருக்கும் அம்ருதா ஸ்ரீனிவாசன், காமெடி வேடத்தில் நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மெர்வின் ரோசரியோ, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர்கள் ஜிஷ்மி காளித் மற்றும் பிரஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோரது பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் மற்றும் மாணவர்களின் வாகன பேரணி போன்ற காட்சிகளை ஒரே ஷாட்டில் படமாக்கி அசத்தியிருப்பவர்கள், படத்தை பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள் சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் புரியவில்லை என்றாலும் கேட்கும்படி இருக்கிறது. மாடர்ன் டேப் ஸ்கோர்ஸ்-ன் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்) பின்னணி இசை சில இடங்களில் காட்சிகளுக்கு சுறுசுறுப்பளித்தாலும், பல இடங்களில் மந்தமாக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரியங் பிரேம் குமார், காட்சிகளை தொகுக்க படாதபாடு பட்டிருப்பார் என்று படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. இருந்தாலும், இயக்குநர் எதையோ சொல்ல நினைத்து, எதை எதையோ காட்சிகளாக எடுத்ததை ஒரு முழுமையான திரைப்படமாக கொடுத்ததற்கு படத்தொகுப்பாளரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
இயக்குநர் பிஜாய் நம்பியார் ரசிகர்களுக்கான திரைப்படமாக அல்லாமல் தனக்கான திரைப்படமாகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். குறிப்பாக தான் மணிரத்னத்தின் சிஷ்யன் என்பதை நிரூபிப்பதற்காகவே காட்சிகளை வடிவமைத்திருப்பவர், மணிரத்னம் பாணியில் திரைக்கதையோ அல்லது கதாபாத்திரங்களையோ வடிவமைக்க தவறிவிட்டார்.
இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் மோதலை, கல்லூரி மாணவர்களின் வாழ்வியல் மற்றும் சாதி அரசியலோடு சேர்த்து சொல்லியிருந்தாலும், அதை அழுத்தமாக சொல்லாமல், போரடிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, படத்தில் இடம்பெறும் எந்த ஒரு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல், படம் முழுவதும் பெரும் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.
காட்சிகளை பிரமாண்ட பின்னணியோடு படமாக்குவதற்கும், கதாபாத்திரங்களை பவர்புல்லாக காட்டுவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் பிஜாய் நம்பியார், அதே முக்கியத்துவத்தை திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை வடிவமைத்ததில் காட்டியிருந்தால், அவரது குருநாதரின் ‘அக்னி நட்சத்திரம்’, ‘ஆயுத எழுத்து’ போன்ற படங்களின் வரிசையில் இந்த ‘போர்’ படமும் இடம்பிடித்திருக்கும்.
மொத்தத்தில்,
*இந்த ‘போர்’ சுவாரஸ்யம் இல்லை*