பிரவுன்ஃபீல்டு (நகர்புற) மற்றும் கிரீன்ஃபீல்டு (கிராமப்புற) தொழிற்சாலை திட்டங்களுக்காக 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Share the post

பிரவுன்ஃபீல்டு (நகர்புற) மற்றும் கிரீன்ஃபீல்டு (கிராமப்புற) தொழிற்சாலை திட்டங்களுக்காக 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

சென்னை: ஐக்கர் / ஐஷர் (Eicher) மோட்டார்ஸ் லிமிடெட் (EMS) நிறுவனத்தின் துணை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நடுத்தர-எடையிலான மோட்டார் சைக்கிள் பிரிவில் உலகளவில் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இல் தமிழக அரசுடன் பிணைப்பற்ற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், தமிழகத்தில் கிரீன்ஃபீல்ட் (கிராமப்புற) மற்றும் பிரவுன்ஃபீல்ட் (நகர்புற) திட்டங்களை நிறுவுவதற்காக, எட்டு ஆண்டுகளில் சுமார் 3,000 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ளதாக ஐக்கர் / ஐஷர் (Eicher) மோட்டார்ஸ் முன்மொழிந்துள்ளது. நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள், மின்சார வாகனங்கள் (தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பு), மற்றும் தேவைக்கேற்ப இன்டர்னல் கம்பஷன் என்ஜினின் (ICE) திறன் அதிகரிப்பு ஆகியவற்றிற்காக இந்த முதலீடு பயன்படுத்தப்படும். மேலும், இந்த முதலீட்டின் மூலம் 2,000 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளதால், தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியிலும் இந்த முன்னெடுப்பு முக்கியப் பங்களிப்பதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

‘முறையான சட்டங்களுக்கு உட்பட்டு, நிறுவனத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கான ஆதரவு மற்றும் ஒழுங்குமுறை வசதிகள் செய்து தரப்படும்’ என்கிற தமிழக அரசின் உத்தரவாதமும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் இடம் பெற்றுள்ளது. தடையற்ற மின்சாரம் மற்றும் பிற அத்தியாவசிய உள்கட்டமைப்பு ஆதரவை நிறுவனத்திற்கு வழங்க தமிழக அரசு சாத்தியமான சிறந்த வழிகளில் முன்னுரிமை அளிக்கும்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர், திரு. பி. கோவிந்தராஜன் அவர்கள் இது குறித்து கூறுகையில், “எங்களது இல்லமாக இருந்து வரும் தமிழ்நாடு – பல ஆண்டு காலமாக எங்களது பொறியியல், தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி துறைகளின் அடித்தளமாக வேரூன்றி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த அறிவார்ந்த முதலீட்டினை செய்வது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைப் பொருத்தவரை ஒரு குறிப்பிடத்தக்க சாதனை மைல்கல்லாக இருக்கும். தமிழக அரசின் இந்த பேராதரவுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், தமிழக அரசுடன் இணைந்து சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளத்தினை உயர்த்துவதில் பங்களிக்கவும் நாங்கள் முனைப்புடன் இருக்கிறோம். மனிதன், இயந்திரம் மற்றும் நிலம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான நிலைத்தன்மையுடன் கூடிய சமநிலையை ஊக்குவிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்; மேலும், ‘மேட் இன் மெட்ராஸ்’ என்ற பெருமையுடன் மனதிற்கு நெருக்கமான, பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள்களை சென்னையில் தயாரித்து, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வாகனங்களாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தினை அடைய அயராது செயலாற்றி வருகிறோம்”, என்று தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யத் தேவையான வாகனங்களை தலைசிறந்த தரத்தில் வழங்கவேண்டும் என்கிற உறுதிப்பாட்டுடன் இருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு – ஓரகடம் மற்றும் வல்லம் வடகால் பகுதியில் உள்ள உற்பத்தி தொழிற்சாலைகள் ஒரு நிரூபணமாக இருந்துவருகின்றன. தற்போது மேற்கொள்ளவிருக்கும் இந்த விரிவாக்கப் பணிகள் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உற்பத்தி திறன்களை வலுப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், நாட்டின் முக்கியமான வாகன உற்பத்தி மையமாகத் திகழும் தமிழகத்தின் நிலையை உறுதிசெய்வதிலும் பங்களிக்கும்.

ஜனவரி 2019 மற்றும் மே 2012 ஆகிய மாதங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தமிழக அரசுடன் ஏற்கனவே இதேபோன்று இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட முதலீட்டு காலத்திற்கு முன்பே ஒப்பந்தத்தில் கூறப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *