
இறுதிக் கட்ட பணிகளில் …..
எழுத்தாளர் பாஸ்கர்சக்தி இயக்கத்தில் வடக்கன் இசையமைப்பாளர் ஜனனியின் இசையமைப்பில் ‘தேனிசைத் தென்றல்‘ தேவா அவர்கள் பாடினார்
எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களின் வசனத்தை எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களித்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் திரைப்படம் `வடக்கன்’

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெரு நகரம் துவங்கி குக்கிராமங்கள் வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நிகழும் ஒரு உணர்வு மயமான, நகைச்சுவை கலந்த, பொழுது போக்குத் திரைப்படமாக ‘வடக்கன்’ உருவாகியுள்ளது.

அழகர்சாமியின் குதிரை, மேற்குத் தொடர்ச்சி மலை, தரமணி, பேரன்பு, கர்ணன், நண்பகல் நேரத்து மயக்கம், மாமன்னன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் வடக்கன் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
புத்தகப் பதிப்புத் துறையில் புகழ் பெற்று விளங்கும், முன்னணிப் பதிப்பாளர் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் அவர்கள் முதல் முறையாக வடக்கன் திரைப்படத்தை தயாரித்து வழங்குகிறார்.
கூத்துப் பட்டறை மாணவரான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும், ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும், இன்னும் பல புதுமுகங்களின் சிறந்த நடிப்பில் உருவாகி இருக்கிறது ‘வடக்கன்’
கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவரும், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், வெஸ்டர்ன் க்ளாஸிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவரும், தனிப் பாடல்கள் மற்றும் இசைஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றவருமான S.J. ஜனனி ‘வடக்கன் ‘ திரைப்படத்துக்கு இசை அமைக்கிறார்.
படத்தில் பிரதானமாக இடம் பெறும் முக்கியமானதொரு பாடலை கவிஞர் ரமேஷ் வைத்யா அவர்கள் எழுத, “தேனிசைத் தென்றல்’ தேவா அவர்கள் பாடினார்.
பாடலைப் பாடி முடித்ததும் தேவா அவர்கள் காட்சியின் ஆன்மாவைக் கடத்தும் இசையையும், அதற்கு ஒத்திசைந்து உயிரூட்டும் பாடல் வரிகளையும் உருவாக்கிய இசையமைப்பாளர் ஜனனியையும், கவிஞர் ரமேஷ் வைத்யாவையும் மனதாரப் பாராட்டினார்.
சிறந்ததொரு திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘வடக்கன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும்
இசை வெளியீட்டுக்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.