’கெழப்பய’ திரை விமர்சனம்!!
சீசன் சினிமா – யாழ் குணசேகரன் தயாரிப்பில்
யாழ் குணசேகரன்இயக்தில் வெளிவந்திருக்கும் படம்கெழப்பய.
கதிரேசகுமார், கிருஷ்ணகுமார், விஜய ரணதீரன், கே.என்.ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ ஆனந்தராஜ் பலர் நடித்து இருக்கிறார்கள்.
இப்படத்திற் க்கு
கேபிஇசைஅமைத்திருக்கிறார்
.
70 வயதுடைய கதையின் நாயகன் கதிரேச குமார், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றுகிறார். பணிமுடிந்து தனது சைக்கிளில் வீடு திரும்பும் போது, அவர் செல்லும் வழியில் ஒரு கார் வருகிறது. கர்ப்பிணி பெண்ணுடன் ஐந்து ஆண்கள் இருக்கும் அந்த காருக்கு வழிவிடாமல் கதிரேச குமார் செல்கிறார். கார் ஓட்டுநர் தொடர்ந்து ஒலி எழுப்பினாலும் செவி சாய்க்காத கதிரேசகுமார் காருக்கு வழி விடாமல் செல்ல, ஒரு கட்டத்தில் காரில் வருபவர்கள் காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி அவரிடம் வழி விட்டு செல்லுமாறு சொல்கிறார்கள். அப்போதும் வழிவிடாமல் காரை மறித்தபடி கதிரசேச குமார் பயணிக்க, காரில் இருப்பவர்கள் கோபமடைந்து அவரை அடித்து துவைக்கிறார்கள்.
அடி வாங்கிய பிறகும் காருக்கு வழிவிடாமல், காரை வழி மறித்து அங்கேயே கதிரேச குமார் உட்கார்ந்துக் கொள்ள, அவர் அப்படி செய்வது ஏன்?, அந்த காருக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்? என்பது தான் ‘கெழப்பய’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கதிரேச குமார், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அதிலும், ஆரம்பத்தில் காருக்கு வழிவிடாமல் அவர் செய்யும் விசயங்கள் அவர் மீது கோபம் ஏற்பட வைத்தாலும், பிறகு அவர் எதற்காக அப்படி செய்கிறார், என்ற விசயம் தெரிந்த பிறகு அவர் மீது இரக்கம் ஏற்படுகிறது. படம் முழுவதும் பேசாமலேயே பயணித்திருக்கும் கதிரேச குமாரின் ஒவ்வொரு அசைவும் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
காரில் பயணிப்பவர்களின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. அதிலும் அவசரமாக செல்லும் போது ஒரு தடை ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வார்களோ அதை மிக சரியாக நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
எளிமையான கதையை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்தும்படி காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இசையமைப்பாளர் கெபியின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பெரும்பாலான இடங்களில் இசையை தவிர்த்துவிட்டு அமைதியை கடைப்பிடித்திருப்பது காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் யாழ் குணசேகரன் வயதான கதாபாத்திரத்தை வைத்து மிக இயல்பான படத்தை கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதி படு சுவாரஸ்யமாக நகர்வதோடு, வயதானவர் காரை மறிப்பது எதனால்? என்ற கேள்வி ரசிகர்களை எதிர்பார்ப்போடு படம் பார்க்க வைக்கிறது. அதே சமயம், முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் சற்று குறைவது படத்தை தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், கதையின் நாயகன் மற்றும் காரில் பயணிப்பவர்களின் நடிப்பு அந்த குறையை மறைத்து படத்துடன் நம்மை ஒன்றிவிட செய்கிறது.
ஒரு சாதாரண சம்பவத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் யாழ் குணசேகரன் அமைத்திருக்கும் சுவாரஸ்யமான திரைக்கதைக்காக இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.
மொத்தத்தில், இந்த ‘கெழப்பய’ வலிமையாகவும் புதுமையாகவும் , நிறைவாக வும் உள்ளது.