பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! – முப்பெரும் விழா
திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தாலுக்காவைச்சேர்ந்த பூவை மாநகரில் 29.05.1941 ஆம் ஆண்டு திரு.சொ.பிர.சுந்தரம் செட்டியார் – திருமதி.யசோதா ஆச்சி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்.
எளிய குடும்பத்தில் பிறந்த திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் 8ம் வகுப்போடு பள்ளிக் கல்வியை நிறுத்திக்கொண்டு தமது தந்தையார் வைத்திருந்த மளிகைக்கடையில் வேலைப்பார்க்கத் தொடங்கினார். பின்னர் 1959 ஆம் ஆண்டு சென்னை வந்தவர், கிடைத்த வேலைகளை செய்யத் தொடங்கினார். நடந்து சென்று வீடு வீடாக பேப்பர் போட்டவர், கிடைத்த வருமானத்தில் ஒரு சைக்கிளை வாங்கி, சைக்கிளில் சென்று பேப்பர் போட்டார். இவற்றோரு தமது தாய்மாமன்கள் ஈடுபட்டிருந்த காபிதூள் வியாபரத்திலும் ஈடுபட்டு அவற்றில் அனுபவத்தைப் பெற்றார்.
கிடைத்த அனுபவத்தைக் கொண்டு 1962 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் வாடகைக்கட்டிடத்தில் Victory View Coffee Works என்கிற பெயரில் காபிதூள் வணிகத்தில் ஈடுபட்டார். காபிதூளை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் கவர்களை வாங்க பிராட்வேவுக்கு சென்ற போது பிளாஸ்டிக் பொருட்களின் தேவையை உணர்ந்து சொந்தமாக பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டார். ஆழ்வார்பேட்டையில் வைத்திருந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை கொஞ்சம் விரிவடைந்ததால் இடம் போதாமல் சின்னமலையில் 1977 ஆம் ஆண்டு ஒரு இடத்தினை வாடகைக்கு எடுத்து தொழிலை வளர்த்தார். பின்னர் 1981 கால கட்டங்களில் கிண்டியில் ஒரு ஏக்கர் இடத்தினை வாங்கி சுந்தரம் பிளாஸ்டிக் இண்டஸ்டிரிஸ் என்கிற தனது தொழிற்சாலையை மிகப்பெரிய அளவில் விரிவுப்படுத்தினார்.
இப்படி படிப்படியாக முன்னேறிய திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் தம் வாழ்நாளில் தொடர்ந்து பல்வேறு அறப்பணிகளை செய்து வந்தார். வடபழனி முருகன் கோயிலின் மூல கோபுரத்தினை முழுமையாகக் கட்டிக்கொடுத்து கும்பாபிஷேகத்தை நடத்தியவர், ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.
இத்தகைய சிறப்புக்குரிய உழைப்பால் உயர்ந்த ஆளுமையான திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்களை கொண்டாடும் விதத்தில் அவருடைய புதல்வர் திரு.S.சுந்தரமூர்த்தி அவர்களும், திரு.S.S.முரளி அவர்களும் இணைந்து தனது தந்தைக்கு சிலை எழுப்பியிருக்கிறார்கள். அந்த சிலைத்திறப்பு விழா 13.8.2023 அன்று மாலை 6 மணியளவில் கிண்டியில் உள்ள விஷால் எண்டர்பிரைசஸில் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் இவருடைய வாழ்க்கை வரலாற்றை அனிமேஷனாகவும் உருவாக்கி திரையிடப்பட்டது. மேலும், இவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விதத்தில் ’P.S.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்’ என்கிற நூலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முப்பெரும் விழாவாக நடைபெற்ற இவ்விழாவில் P.S.சுவாமிநாதன் செட்டியார் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், முக்கிய தொழிலதிபர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.