இந்திய விண்வெளித் துறையுடனான 18 வருட கூட்டாண்மையை மேம்படுத்தும் வகையில் ‘மேட் இன் இந்தியா’ திட்டத்த
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உடன் இணைந்து
3வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது டாடா பிளே
இந்த புதிய அலைவரிசை சேனல்களின் சிக்னல் தரம்,
படங்களின் தரத்தை மேம்படுத்தும்
மும்பை, ஆக.7–
டாடா பிளே (முன்னர் டாடா ஸ்கை) நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உடன் இணைந்து ஜிசாட்–24 என்னும் 3வது செயற்கைகோளை கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைகோளை டாடா நிறுவனம் ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் வடிவமைத்துள்ளது. பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைகோளின் செயல்பாடுகள் இன்று முதல் துவங்க உள்ளதாக டாடா பிளே நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய செயற்கைகோள் உதவியுடன் இதன் அலைவரிசையை அதிகரிப்பதன் மூலம், டாடா பிளே தனது பயனர்களுக்கு இன்னும் துல்லியமான, கூர்மையான மற்றும் சிறந்த ஒலியுடன் கூடிய படங்களை வழங்கும். மேலும் அனைத்து டிடிஎச் இயங்குதளங்களிலும் மிகப்பெரிய செயற்கைக்கோள் அலைவரிசை வழங்குனராக மாறும்போது 50 சதவீத அதிக சேனல்களை ஒளிபரப்பும் திறன் கொண்டதாகவும் இது இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, சத்தர்பூரில் உள்ள டாடா பிளே நிறுவனத்தின் ஒளிபரப்பு மையத்தில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா கலந்து கொண்டு ஜிசாட்–24ஐ வெற்றிகரமாக இயக்கிய வைத்து இந்திய விண்வெளித் துறைக்கும், டாடா பிளே நிறுவனத்துக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் இது மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் மற்றும் விண்வெளி மற்றும் தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கான முன்னோக்கிய பயணத்தைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், டிடிஎச் சேவைகளை வழங்குவதற்காக இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட 4 டன் அளவிலான தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் – 24, முழுமையான சுற்றுப்பாதையில் சோதனைக்குப் பிறகு, அதன் அதிகபட்ச செயற்கைக்கோள் திறனில் முழுமையாகச் செயல்படுகிறது. இந்த முக்கியமான சாதனை இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஒரு புரட்சியைக் குறிக்கிறது, இது அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது. இது நமது நாட்டின் விண்வெளித் திறமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, தேவை சார்ந்த செயற்கைகோள் பிரிவில் இந்தியாவின் வெற்றிகரமான நுழைவையும் இது குறிக்கிறது என்று தெரிவித்தார்.
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் துரைராஜ் பேசுகையில், ஜிசாட்–24 செயற்கைகோளானது, எங்களின் விண்வெளித்துறை சீர்திருத்தங்களால் மேற்கொள்ளப்பட்ட முதல் தேவை சார்ந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும். இந்தியாவுக்கான செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்த ஜிசாட்–24 செயற்கைக்கோள் தயாராக உள்ளது. மேக் இன் இந்தியா திட்ட முயற்சியின் வெற்றிக்கு சான்றாக, இந்த செயற்கைக்கோள் மேம்பட்ட டிஜிட்டல் டிவி டிரான்ஸ்மிஷன் திறன்களுடன் உள்நாட்டு ஒளிபரப்பு சேவைகளை ஆதரிக்கும் என்று கூறிய அவர் இந்த திட்டத்திற்காக ஒருங்கிணைந்து பணியாற்றிய நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட், இஸ்ரோ மற்றும் டாடா பிளே குழுவிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து டாடா பிளே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹரித் நாக்பால் கூறுகையில், பார்வையாளர்களின் பார்க்கும் அனுபவத்திற்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். நியூஸ்பேஸ் இந்தியா உடனான இந்த ஒருங்கிணைப்பின் மூலம் எங்கள் டிடிஎச் சந்தாதாரர்களுக்கு இன்னும் சிறந்த வீடியோ மற்றும் ஆடியோ மற்றும் கூடுதலாக பல சேனல்கள் மற்றும் சேவைகளை நாங்கள் வழங்க இருக்கிறோம். சுமார் 14 கோடி வீடுகளில் இன்னும் டிவியே வாங்காத சூழலில் சேனல்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை நுகர்வோர் விரும்பும் நேரத்தில் பார்க்கும் லீனியர் டிவிக்கான எங்கள் உறுதிப்பாட்டை இது மேலும் பலப்படுத்துகிறது. இந்திய விண்வெளித் துறை மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களில் எங்களின் அனைத்து சேவைகளையும் நாங்கள் எப்போதும் வழங்கி வருகிறோம், மேலும் இந்த திறன் மேம்பாடு ‘மேக் இன் இந்தியா’வுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
ஜிசாட் – 24 என்பது டாடா பிளேயின் டிடிஎச் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே இந்திய அரசால் தொடங்கப்பட்ட 24 கேயூ அலைவரிசை தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் என்பது கடந்த 2019–ம் ஆண்டு துவக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இது விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் மத்திய பொதுத் துறை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.