புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’க்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் சேரன்

Share the post

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’க்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் சேரன்

எத்தனை விருதுகள் வாங்கினாலும் ‘தமிழன் விருது’ வாங்குவதில் சந்தோசம் அதிகம் ; இயக்குனர் சேரன்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 10ஆம் ஆண்டு ‘தமிழன் விருது’ வழங்கும் விழா ; புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தினார் சேரன்

செய்திப் பணிகளைத் தாண்டியும் சமூகப் பணியாற்றுவதை கடமையாக கொண்டுள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி, அத்தகைய சமூகப்பணியின் ஓர் அங்கமாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக, 6 துறைகளில் சாதனை புரிந்துவரும் தமிழர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு தமிழன் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.

கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில், சமூகப்பணி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்துவரும் ஆளுமைகளுக்கு தமிழன் விருதுகளும், அந்த துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளையோருக்கு நம்பிக்கை நட்சத்திரம் விருதுகளும் என இரு பிரிவுகளாக விருதுகள் வழங்கப்படுகின்றன

அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘10ஆம் ஆண்டு தமிழன் விருதுகள் வழங்கும் விழா’ நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தமிழன் விருதுக்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று ஊடகவியலாளர்கள் முன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகரும் இயக்குநருமான சேரன் கலந்துகொண்டு இந்த புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் புதிய தலைமுறை குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜாமணி, செய்தி இயக்குனர் ஸ்ரீநிவாசன், செய்தி பிரிவு செயல் ஆசிரியர் திருப்பதி, நிகழ்ச்சி பிரிவு செயல் ஆசிரியர் கார்மல் மற்றும் நிகழ்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பிரிவு செயல் ஆசிரியர் கார்மல் பேசும்போது, “செய்திகளைக் கடந்து கலை, இலக்கியம், பொருளாதார நிகழ்வுகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒருசில முயற்சி தான் எங்களது இந்த முயற்சிகள். சாகித்ய அகாடமி விருது, பத்ம விருது பெற்றவர்கள் உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் எல்லோரும் தமிழன் விருது என்றால் இசைந்து இதில் பங்கேற்று எங்களை பெருமைப்படுத்தியதுடன் தங்களையும் மேன்மைப்படுத்திக் கொண்டார்கள்” என்று கூறினார்.

இயக்குனரும் நடிகருமான சேரன் பேசும்போது, “தமிழன் விருதுகளை அறிமுகப்படுத்துவதற்காக இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. தமிழன் என்று சொல்லும்போதே ஒரு சந்தோஷம்.. எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் வாங்கலாம்.. ஆனால் நம் தாய்மொழியான தமிழன் விருது என்கிற பெயரில் வாங்குவது ஒரு பெரிய சந்தோஷம்.. பெரிய பாக்கியம்.. அந்த சந்தோஷத்தை இளம் சாதனையாளர்களுக்கும் சாதித்தவர்களுக்கும் வழங்கி மகிழ்வது என்பதை பெரிய வழிகாட்டுதலாக தான் பார்க்கிறேன். சாதித்தவர்களுக்கு விருது கொடுப்பது பெரிய விஷயம் இல்லை.. சாதிக்க போகிறவர்களுக்கும் விருது கொடுக்கிறார்களே, அதைத்தான் தனித்தன்மையாக பார்க்கிறேன். அதனால் ஈர்க்கப்பட்டே இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன்.

நல்லதை செய்.. இல்லையென்றால் நல்லதை செய்பவர்களுடன் உடனிரு.. நல்லது செய்பவர்களை பாராட்டு.. நல்லது செய்பவர்களை துளியும் தவறாக பேசாதே.. அந்த விதமாக நல்லதை செய்யும் உங்களோடு கைகோர்த்து இங்கே நான் வந்திருக்கிறேன்.. வெறும் ஆற்றலால் மட்டும் சாதித்து விட முடியாது. அனுபவத்திற்கு சாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. இங்கே அனுபவமும் ஆற்றலும் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி. எப்போதும் போல நீங்கள் புதிய தலைமுறையாக புதிய தலைமுறைகளுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் என்பது தான் என் வேண்டுகோள்” என்று கூறினார்.

வரும் ஆக-11ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள இந்த விழாவின் ஒரு பகுதியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மூலம் உருவாக்கப்பட்ட தொகுப்பாளினி தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *