ஜெமினி மேம்பாலத்துக்கு 50 வயது! கொண்டாடத் தயாராகுங்கள்!

Share the post

ஜெமினி மேம்பாலத்துக்கு 50 வயது! கொண்டாடத் தயாராகுங்கள்!


சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும் ஜெமினி மேம்பாலம் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அரை நூற்றாண்டைக் கடந்து நிற்கும் மேம்பாலத்தை கொண்டாட சென்னை தயாராகிறது.
சென்னையின் இதயம் போன்று விளங்கும் நுங்கம்பாக்கத்தின் முக்கிய போக்குவரத்து மையத்தில் கட்டப்பட்டதுதான் அண்ணா மேம்பாலம். 70களில் சென்னையில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியைப் போக்குவதற்காக கட்டப்பட்ட இந்த மேம்பாலம் தமிழகத்தின் முதல் மேம்பாலமாகவும் இந்தியாவின் மூன்றாவது மேம்பாலமாகவும் புகழ்பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க ஜெமினி மேம்பாலம் 50 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அதன் 50வது ஆண்டைக் நினைவுகூறும் வகையில் வரும் ஜீலை 1ஆம் தேதி உற்சாகமான கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. அண்ணா மேம்பாலம் என்றும் ஜெமினி மேம்பாலம் என்றும் அழைக்கப்படும் இந்த பாலம் , தலைமுறைகளைக் கடந்து மக்களின் உணர்வுகளை இணைத்து வருகிறது.
அழகுணர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த பாலம் 1973ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டு அண்ணா மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது. மக்களை கவரும் விதமாக கம்பீரமான வளைவுகளைக்கொண்ட இந்த பாலம் பல நூறுகதைகளையும் நினைவுகளையும் இன்றுவரைக்கும் தாங்கி நிற்கிறது.
பொறுப்புள்ள ஊடகமான புதிய தலைமுறை ‘அண்ணா மேம்பாலம்50’, என்ற பொருளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மேம்பாலத்தைக் கொண்டாடும் பொருட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஒழுங்கு செய்துள்ளது. பாலத்தைத் திரும்பிப்பார்க்கும் ஒரு நினைவுப்பாலமாய் அமைய இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க இருக்கின்றனர்.
பாலத்தின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் செம்மொழிப் பூங்காவில் ஜீலை 8ஆம் நாள் சனிக்கிழமை மாலை சுமார் 4 30 மணியளவில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் பாலம் குறித்த கலைநிகழ்ச்சிகள், மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற இருக்கின்றன. அரசியல் பிரமுகர்கள், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.
உறவுகளையும் உணர்வுகளையும் இணைப்பது பாலம். இந்த இரண்டையும் ஒருசேர இணைத்து செல்லும் அரைநூற்றாண்டு கண்ட அண்ணா மேம்பாலத்தை அனைவரும் நிறைவாக சேர்ந்து கொண்டாடுவோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *