கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது 2022 வழங்கும் விழா!

Share the post

கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது 2022 வழங்கும் விழா!

கனடாவிலிருந்து இயங்கிவரும் தமிழ் இலக்கியத்தோட்டம் அறக்கட்டளை அமைப்பு  2001 முதல், கடந்த இருபத்து மூன்று வருடங்களாக, உலகம் முழுக்க இருக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கு, வருடம் தவறாமல், புனைவு, அபுனைவு, கவிதைகள், கட்டுரைகள், என ஒவ்வொரு துறையிலும் தேர்ந்தெடுத்து உலகளாவிய விருது கொடுத்து வருகிறது. 

தமிழ் மொழியில் ஆளுமைகளுக்குக் கிடைக்கும் இவ்விருது ,ஆங்கில இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் புக்கர் விருதுக்கு இணையானதாக மதிக்கப்படுகிறது.

இங்கிலாந்திலிருந்து வழங்கப்படும் உலக எழுத்தாளர்களுக்கான புக்கர் விருதுக்கான தேர்வுக்குழுவில், கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, இங்கிலாந்து என பன்னாட்டுப் பிரதிநிதிகள் அடங்குவர். அவர்கள் உலகளாவிய பார்வையில் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுப்பது போல் இயல் விருதுக்கும் உலகில் எந்தநாட்டில் இருந்தும் தமிழ் மொழியில் எழுதி உள்ள எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதற்கு முன்பு சுந்தர ராமசாமி,நாஞ்சில்நாடன், ஜெயமோகன் ,எஸ். ராமகிருஷ்ணன், இமையம் வண்ணதாசன் போன்ற எழுத்தாளர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

இதை முன்னின்று நடத்தும் முக்கிய இயக்குநர்களில் எழுத்தாளர் அ. முத்துலிங்கமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020, 2021 ,2022 மூன்று வருடங்கள், கொரானா நோய்த்தொற்று காரணமாக இணைய நிகழ்வாக நடந்தது. 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகள்  அண்மையில் நேரில் வழங்கப்பட்டன.

தமிழ் இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக இயல்விருது பெறும் பாவண்ணன் அவரது மனைவி அமுதாவுடன் வந்து விருதினைப் பெற்றுக் கொண்டார்.புனைவு அல்லாத அபுனைவு வகையில் “மூவந்தியில் சூலுறும் மர்மம்” எனும் கட்டுரைத்தொகுப்பிற்கு சாம்ராஜ் விருது பெற்றார்.

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு ‘ தொகுப்பு நூலுக்காக இந்திய இலக்கிய தரிசன விருதினை  சிவசங்கரி அவர்கள் நேரில் வந்திருந்து கலந்துகொண்டு விருதைப் பெற்றுகொண்டார்.

 திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த தாமஸ் ஹிட்டோஷி ப்ருக்ஸ்மாவும், கில்லர் (Giller) பரிசிற்கு இறுதிச்சுற்று  வரை சென்ற டிஸ் அப்பியர்டு (Dissappeared) நூலை எழுதிய கிம் எக்லின் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள்.

நிகழ்வு ஆறு மணிக்கு என்றால், ஐந்து மணி முதல் விருந்தினர்கள்  முன்னதாகவே வந்து ஆர்வத்துடன் காத்திருந்தார்கள்.விழாவில் யார் எங்கு அமரவேண்டுமென ஏற்கெனவே இருக்கைகள்,மேசைகள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.

சரியாக ஆறு மணிக்கு நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுத் தொடங்கப்பட்டது. 

முதலில் ஒவ்வொரு விருது பெறுபவரைப் பற்றியும் தகுதியுரை வாசிக்கப்பட்டது.அடுத்து முக்கிய ஆளுமைகள், விருது பெறுபவருக்குப் பரிசுக் கேடயம், காசோலை, பூச்செண்டு கொடுத்து சிறப்புசெய்தனர்.அதற்குப் பிறகு விருது பெறுபவர்கள் ஏற்புரை ஆற்றினர்.

விழாக் குழுவினர், கனடாவில்தமிழைப்பயின்று வரும் மாணவிகளை முன்னிறுத்தி, விழாவில் விருது பெறுபவர்களின் தகுதியுரைகளை வாசிக்கவைத்துசிறப்பு செய்திருந்தனர்.அம்மாணவிகள் தகுதியுரைகளை வாசித்தது தனி அழகு.

இந்த வருடம், அபுனைவுகளுக்காக விருது பெற்ற சாம்ராஜ், தனது ஏற்புரையில் ,

“கனடாவிற்கு வர இரு கனவுகள் இருக்கும். ஒன்று நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்க , இன்னொன்று தமிழ் இலக்கிய விருதினைப் பெறுவதற்கு” என்றவர், தனக்கு இரு கனவுகளும் நிறைவேறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வாழ்நாள் சாதனைக்காக விருது பெற்ற பாவண்ணன் தனது ஏற்புரையில் “துன்பத்தை பாரமாக நினைத்து நெஞ்சில் சுமப்பதைவிட, எழுதி எழுதிக்கரைப்பதே நல்லது என்று மாக்ஸிம் கார்க்கி சொன்ன வழியில் என் துன்பத்தைக் கரைக்க நான் எழுத்தைத் தேர்ந்தெடுத்தேன்.வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவது போல் என்னில் உற்சாகத்தை எழுத்து நிரப்பியது” என்றார்.

இலக்கிய மூலம் இந்திய இணைப்பு தொகுப்பு நூலுக்காக சிவசங்கரி விருது பெற்றார் .

அவர் பேசும்போது,

” இந்த விருதைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் பரவசமும் அடைகிறேன்.  எனது 16 ஆண்டு காலத் தவம் போன்ற பணிக்கு இந்த விருது எனக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம். இந்திய இலக்கியத்தைப் பற்றி உலகத்திற்கு அறிமுகம் செய்யும் வகையில் 18 மொழிகளில் 102 ஜாம்பவான்களை நான் நேர்காணல் செய்து இந்த தொகுப்பு நூல்களை உருவாக்கினேன். அதற்காக  பேயாக நான் அலைந்தது, ஓய்வின்றி உழைத்ததை இன்று நினைத்தால் பெருமையாக உள்ளது. நம் நாட்டுக்காக இலக்கியத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று மகிழ்ச்சியாகவே நான் இப் பணியைச்  செய்தேன்.அப்போது நான் என் சொந்த எழுத்தை எல்லாம் தள்ளி வைத்தேன்.அதன் மூலம் வரும் வருமானங்களை ஒதுக்கி வைத்தேன்.கூகுள், வாட்ஸ் அப், யூடியூப் இல்லாத அந்தக் காலத்தில்,ஒவ்வொன்றையும் தேடித்தேடிச் சேகரித்தேன்.
இதற்காக முன் தயாரிப்பு,  சம்பந்தப்பட்டவர்களின் படைப்புகளை வாசிப்பது, அவர்களின் இடங்களைத் தேடிச் செல்வது, அவர்களைச் சந்திப்பது என்று பெருமளவு நேரத்தைச் செலவிட்டேன். அப்படி நான் சந்தித்த இலக்கிய ஜாம்பவான்களில் 90% பேர் இன்று உயிருடன் இல்லை. ஒவ்வொரு சந்திப்பின் மூலமும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளவிட முடியாதது .இதற்காக நான் இந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்ததை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. எனது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை நினைக்கிறேன். நன்றி” என்றார்.

இலக்கிய ஊடகத்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு சேவைகளைப் பாராட்டி 2022-ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் லெட்சுமணன் முருகபூபதி, தனது எழுத்து மற்றவர்களுக்கும் சோறு போடும் என்று அவரது பெற்றோர்கள் வாழ்த்தியதாகக் கூறினார்.

இந்த நிகழ்வில், 20 முதல் 22 ஐந்து நிமிட உரைகள் இடம்பெற்றன. எல்லாம்  திட்டமிட்டபடி கச்சிதமாக நடந்தேறின.  வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து உபசரிப்பு நடந்தது.பங்கு பெற்றோரும் பார்வையாளர்களும் மன நிறைவோடு பிரியா விடை பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *